செல்லப் பிராணிகளுக்கு ரத்த வங்கி!



தகவல்

அவசர சிகிச்சை மருத்துவத்தின்போது ஒருவரின் உயிரைக் காக்க ரத்தம் அவசியமானதாக இருக்கிறது. இதன்பொருட்டே முன்கூட்டியே தானம் பெற்று வங்கிகளில் பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். மனிதர்களுக்கு செயல்படும் இத்தகைய வங்கிகளைப் போல, இப்போது செல்லப்பிராணிகளுக்கும் வங்கிகள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாய்களுக்கான ரத்ததான முகாம் சமீபத்தில் நடைபெற்றது. இத்துடன் கால்நடை ரத்த வங்கி அவசர ஆம்புலன்ஸ் சேவையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பு, அதன் மீதான அக்கறை போன்றவை அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து செல்லப் பிராணி வளர்ப்பாளர்கள் அறிந்துகொள்வது அவசியம் என்ற நோக்கத்தில் இந்த ரத்த தான முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. நாய்கள் ரத்ததானம் விழிப்புணர்வு குறித்த குறுந்தகடு ஒன்றையும் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி ரத்த பரிமாற்றத்துறை தலைவர் டாக்டர் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

நாய்கள் ரத்த தான முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் ரத்ததானம் செய்தன. 20 கிலோ எடை கொண்ட நாயின் உடலில் இருந்து 350 மிலி. ரத்தம் எடுக்கப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நாய் 3 மாதத்துக்கு ஒருமுறை என ஓராண்டுக்கு 4 முறை ரத்ததானம் செய்யலாம். இப்படி நாய்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தம் 28 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

இந்த ரத்தம் விபத்துகளில் சிக்கும் நாய்கள் மற்றும் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்படும் நாய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ரத்த வங்கி அதிகாரியும் மருத்துவருமான பரணிதரன். எனவே, உங்கள் செல்லப் பிராணிக்கு ரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது தானம் செய்ய விரும்பினாலோ உரிய மருத்துவமனையையும், மருத்துவர்களையும் அணுகலாம்!

- அஜி