தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...அட்டென்ஷன் ப்ளீஸ்

எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்று இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் ரவியிடம் கேட்டோம்…

‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது.
 
அதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்னைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.

பார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.

இவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர். தந்தூரிக்காக தோலுரித்து எடுக்கப்பட்ட இறைச்சிகள் மீதமாகும்போது, அதை நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தவும், அதன் சுவையை அதிகப்படுத்தவும், உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகளை சிலர் பயன்படுத்துகின்றனர்.

மேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய்  போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது’’ என்கிறார் மருத்துவர் ரவி.

நம் முந்தைய காலத்தில் நெருப்பில் சுட்டு இறைச்சியை உண்ட பழக்கத்துக்கும், இப்போதிருக்கும் தந்தூரி வகை இறைச்சிகளுக்குமிடையில் நீங்கள் பார்க்கும் வித்தியாசம் என்ன என்று ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்…

‘‘தந்தூரம் என்றால் மண் அடுப்பு என்று பொருள். அதில் ஏற்படும் தணலில் வேக வைக்கும் உணவுக்கு தந்தூரி என்று பெயர். பூமிக்கு ஏற்ற உணவு எது என்ற வகைப்பாட்டில் இதுபோன்ற தணலில் வேக வைத்த உணவானது ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் சீன தேசத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உகந்தது என்று 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாக்படர் என்ற ஆயுர்வேத மகரிஷி கூறியிருக்கிறார்.

மேலும் அவர் இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு மிக முக்கியமான அறிவுரையையும் வழங்கியுள்ளார். நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஏற்ற உணவு, பூமி மற்றும் சூழலுக்கு ஏற்ற உணவு என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் உடலுக்கு ஏற்ற உணவு என்பது 6 சுவைகளை அடிப்படையாகக் கொண்டது.

இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்ற 6 சுவைகளில் உள்ள உணவு பொருட்களை நமது உடல் ஏற்றுக்கொண்டாலோ அல்லது அவற்றை நாம் விரும்பி சாப்பிட்டாலோ நமது உடல் சிறந்த ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஆனால், இந்த 6 சுவைகளில் ஒரு சில சுவைகளை மட்டும் நமது உடல் ஏற்றுக்கொண்டால் உடல் நடுத்தரமான/ஆரோக்கிய நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

ஒரே ஒரு சுவையை மட்டும் நமது உடல் ஏற்றுக்கொள்கிறது அல்லது ஒரே ஒரு சுவையை மட்டும் நாம் விரும்பினால் நமது உடல் ஆரோக்கிய நிலையில் இல்லை என்றும் அர்த்தம். இது உடலின் தன்மையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது என்கிறார் அந்த மகரிஷி.’’அப்படியென்றால் தந்தூரி வகை உணவுகள் நம் உடலுக்கு உகந்ததல்ல என்று புரிந்துகொள்ளலாமா என்று கேட்டோம்…

‘‘அந்தக் காலத்திலேயே அந்நிய நாட்டின் உணவு முறைகளைப் பற்றி நம் நாட்டில் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், அவற்றை நம் மக்களிடையே பரப்பவும் இல்லை, பழக்கப்படுத்தவும் இல்லை. அந்த நாடுகளின் பூமி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்ற காரணத்தினால்தான் அந்த அயல்நாட்டு உணவுகளை நம் நாட்டு மக்களுக்கு அவர்கள் பழக்கப்படுத்தவில்லை.

இப்போது தந்தூரி வகை உணவுகள் நம் ஊர்களில் பரவலாகக் கிடைக்கின்றன. இவை நமது நாட்டினரின் உடல் நலனுக்கு உகந்ததுதானா என்பதற்கு ஆயுர்வேத மருத்துவம் பின்வருமாறு பதில் அளிக்கிறது.

தந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.

ஜீரண சக்தி

தந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் இவ்வகை உணவு சாப்பிடுவதைத்  தவிர்க்க
வேண்டும்.  

உணவின் அளவு

வயது மற்றும் நாம் செய்கிற வேலையின் திறனுக்கு ஏற்றவாறு இவ்வகைஉணவுகளின் அளவை நிர்ணயித்து எடுத்துக் கொள்ளலாம். வயிறு முழுவதும் நிரம்பும் வண்ணம் தந்தூரி இறைச்சிகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வகை உணவுகளை எடுத்துக்  கொள்ளும்போது சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கால சூழ்நிலை

பூமியில் நாம் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தந்தூரி இறைச்சியை மழை காலத்தில் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். இவ்வகை இறைச்சிகளை மதியம் மற்றும் மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

இரவு நேரங்களில் நமது ஜீரண உறுப்புகளின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும் என்பதால், எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகளை இந்நேரங்களில் எடுத்துக் கொள்வதே உடல் நலனுக்கு நல்லது. எனவே நல்ல ஜீரண சக்தி இருப்பவர்களாக இருந்தாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற தந்தூரி இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மூன்று விதிகளை கருத்தில் கொண்டு தந்தூரி வகை இறைச்சிகளை சாப்பிட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

தந்தூரி முறையில் சமைக்கப்பட்ட இறைச்சியானது மிருதுவாக மாறி எளிதில் ஜீரணிக்கக்கூடியதுதான். இருந்தபோதும் அதை மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் பின்பற்றி சாப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

இந்த வகை இறைச்சியை சாப்பிட்ட பின்பு அஜீரண பிரச்னை ஏற்படுபவர்கள், ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் அஷ்ட சூர்ணம் என்ற மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை சீரகத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை சரியாகும். இவ்வகை உணவுகளால் உடலில் உஷ்ணம் அதிகரித்தால் வெள்ளரிக்காயும் எடுத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.  

- க.கதிரவன்