மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் பற்றி தெரியுமா?



தேவை அதிக கவனம்

‘‘மனித இனத்தின் உடல் நலத்தை அச்சுறுத்தும் வகையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக புதுப்புது நோய்கள் உலா வந்த வண்ணமாக உள்ளன. அதேவேளையில் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, உடனடியாக தக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகளும் தரப்பட்டு குணமாக்குகின்றன.

ஆனாலும் மக்களிடம் நோய்க்கான காரணம், விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனையை நாடுகின்றனர். இதில் மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் குறிப்பிடத்தக்கது’’ என்கிற முடக்குவாதவியல் நிபுணர் ஹேமா, அது குறித்து தொடர்ந்து விவரிக்கிறார்.

மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் பற்றி...

‘‘Ankylosing Spondylitis என்று சொல்லப்படுகிற மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்படுகிற பொதுவான பிரச்னை. பொதுவாக, 25 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களைத்தான் இந்த நோய் தாக்குகிறது.

16 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கும் இந்நோய் வரலாம். இந்த பாதிப்பு பெண்களைவிட, ஆண்களுக்குத்தான் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.’’என்னென்ன காரணங்களால் இந்த பிரச்னை ஒருவருக்கு வரலாம்?

‘‘முதுகெலும்பு அழற்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் இரண்டு சக்கர வாகனங்களைப் பல மணி நேரம் தொடர்ந்து ஓட்டுதல், ஒரே இடத்தில்பல மணி நேரம் உட்கார்ந்தவாறு வேலை செய்தல், உடற்பயிற்சிகள் செய்யாமல் இருத்தல் போன்றவை இதற்கு முக்கியகாரணங்களாக சொல்லப்படுகின்றன. மரபணுவில் மாற்றங்கள் ஏற்படுவதும் இப்பிரச்னைக்கு ஒரு காரணமாகஅமைகிறது.’’
அறிகுறிகள் என்ன?

‘‘மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய் உள்ளவர்களுக்குத் தூங்கி எழுந்த பிறகு, முதுகுப்பகுதியில் இறுகப் பிடித்தது போல வலி காணப்படும். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருப்பதாகத்தான் உணர்வார்கள்.

ஆனால், ஓய்வு எடுக்கும் நேரத்திலேயே ஏதோ ஒரு பாதிப்பு இருப்பது போல் அசௌகரியம் தோன்றும். அடிப்பாதங்களில் வலி, கை, கால் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் வலி, கண் சிவந்து காணப்படுதல் போன்றவை A.S என சுருக்கமாக குறிப்பிடப்படுகிற Ankylosing Spondylitis-க்கான அறிகுறிகள் என கொள்ளலாம்.’’

என்னென்ன பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்படும்?

‘‘மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோய்க்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட பின்னர் எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் மூலம், இடுப்பு எலும்பில் ஏதாவது பிரச்னை இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம்.

மடங்கா நிலை முதுகெலும்பு மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதால்தான் இப்பாதிப்பு என நினைத்துக் கொண்டு உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதைத் தாமதப்படுத்துகிறார்கள்.

பொதுமக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எனவே, நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரிடம் வருகிறார்கள். அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்நோய்க்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் கழுத்தைத் திருப்பவும், குனிந்து நிமிரவும் முடியாது.’’

இந்த நோய் காரணமாக உடலில் ஏற்படுகிற பிற பாதிப்புகள் என்னென்ன?

‘‘Ankylosing Spondylitis காரணமாக, இடும்பு மற்றும் முதுகெலும்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதுதவிர, மூட்டுக்கள், உள்ளுறுப்புகளான கண், நுரையீரல், இதயம் ஆகியவையும் பாதிப்பு அடைகின்றன.’’சிகிச்சை முறைகள் பற்றி கூறுங்கள்?

‘‘Ankylosing Spondylitis நோய்க்கு வாழ்நாள் முழுவதும் தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம். நீரிழிவு, ரத்த அழுத்தம் முதலான நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருவது போல, இதற்கும் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பயாலஜிகல் தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சையுடன் வலி நிவாரண மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வழி நடத்த முடியும்.’’

- விஜயகுமார்