உபத்திரவமாக வேண்டாம் உபசாரம்...



Centre Spread Special

‘விருந்தோம்பல்’ ‘உபசரிப்பு’ இதெல்லாம் நம்நாட்டின் பெருமை கொள்ள வேண்டிய உயர்ந்த கலாச்சாரம். இல்லறத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கடமையாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இன்று பலரும் ஏதேனும் உடல்ரீதியான பிரச்னைகளாலோ அல்லது எடை குறைப்புக்கு டயட்டைப் பின்பற்றுகிறவர்களாகவோ மாறி வருகிறார்கள். இதனால், உபசரிப்பு என்பது உபத்திரவமாக சில நேரங்களில் மாறிவிடுகிறது. இந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்று நீரிழிவு மற்றும் எடை பராமரிப்பு சிறப்பு மருத்துவரான சாதனா தவப்பழனியிடம் கேட்டோம்...

‘‘முன்பெல்லாம் விழா, விருந்துகளில் மட்டும் எப்போதோ ஒரு முறைதான் என்று விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வந்தோம். ஆனால், இன்று அப்படியில்லை. வார விடுமுறை, பர்த்டே பார்ட்டி, திருமணநாள், நண்பரின் பதவி உயர்வு என ஏதேதோ காரணத்தை கண்டுபிடித்து ஹோட்டல் சாப்பாடு, விருந்து என்று வரைமுறையில்லாமல் சாப்பிடுகிறோம். இதற்கு நடுவில் தாங்கள் போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதோடு மற்றவருக்கும் வாங்கிக்கொடுத்து கட்டாயப்படுத்தி கவனிக்கும் நண்பர்களும் உண்டு.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவனிக்கிறேன் பேர்வழி உபசாரம் என்ற பெயரில் உபத்திரவம் செய்யும் உறவினர்களும் இருக்கிறார்கள். இந்த அணுகுமுறை மாற வேண்டும். இன்று பலரும் நீரிழிவு, உடல் பருமன் போன்றவற்றால் சிகிச்சையில் இருப்பவர்களாகவும், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்களாகவும்  இருக்கிறார்கள். அதனால், உணவைப் பொருத்தவரையில் ஒருவரது விருப்பமறிந்தே உபசரிக்க வேண்டும். அதிகம் கட்டாயப்படுத்தக் கூடாது. விருந்தினர்களிடம் அவருக்கு என்ன உணவு ஒத்துக்கொள்ளும் என்பதை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டு செய்வதும் நல்லது.

நாமும் எவ்வித தயக்கமும் இன்றி, நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவை எனக்கு வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்துவிட வேண்டும். விருந்து விழாக்களில் அரிசி உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மேலோட்டமாக வேண்டாம் என்று மறுத்தால் அது மற்றவரை அவமதிப்பதாகவும் புரிந்துகொள்வார்கள்.

அதனால், எனக்கு இந்த உணவு வேண்டாம் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கு மாற்றாக இந்த உணவு வேண்டும் என்று கேட்டுப் பெறலாம். உதாரணத்துக்கு, ‘காஃபி வேண்டாம்... பால் மட்டும் கொடுங்கள்’ என்று சொல்லலாம். இதன் மூலம் நட்பும் உடையாது. ஆரோக்கியமும் கெடாது’’ என்று ஆலோசனை சொல்கிறார் சாதனா தவப்பழனி.

- என்.ஹரிஹரன்