எக்ஸர்சைஸ் கூட வேணாம்... படியேறுங்க போதும்!



ஆராய்ச்சி

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.

நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயசம்பந்த நோய்களும் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.

மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

- இந்துமதி