புத்த மருத்துவம்



ரிலாக்ஸ்

சமீபகாலமாக எல்லா இடங்களிலும் நீக்கமற இடம்பிடித்து வருகிறார் புத்தர். கடவுளை மறுக்கிற நாத்திகவாதிகளும் புத்தரை விரும்புகிறார்கள். ஆடம்பரங்களை உதறித்தள்ளிவிட்டுச் சென்ற புத்தர், எல்லா நட்சத்திர விடுதிகளின் வரவேற்பறைகளையும் அலங்கரிக்கிறார். சமீபகாலமாக ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்ளும் அன்பளிப்புகளிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறார் புத்தர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

மக்களை முடக்கும் 10 முன்னணி காரணங்களில் 5 மனநல பிரச்னைகளை சார்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் ஒன்று கூறியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 75 லட்ச மக்கள் மன நலப் பிரச்னைகளால், பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையை நாடுவதாகவும் இப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் 2020-ல் மேலும் 20 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பதையும் கணித்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், 10 லட்சம் பேருக்கு 3 மனநல மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்களாம். இந்த புள்ளிவிவரக் கணக்கையெல்லாம் பார்த்தால் இன்னும் 10 வருடத்தில் எல்லோருமே தலையைப் பிய்த்துக்கொண்டு திரியப்போவது உறுதி.

முன்னெப்போதும்விட எல்லோருக்குமே அதிகரித்திருக்கும் மன அழுத்தம், பதற்றம், பரபரப்பு. இவற்றுக்கெல்லாம் சர்வரோக நிவாரணியாக அமைதி தவழும் ஒரு முகம் வரப்பிரசாதமாகத் தெரிகிறது. அதனால்தான், டென்ஷனை விரட்டும் புத்தர் போன்ற ஒரு டாக்டர் இன்று தேவைப்படுகிறார்!

- இந்துமதி