FLYING BIRD YOGA



மேட்டர் புதுசு

‘யோகா நல்ல விஷயம்தான். இளைஞர்களுக்குத் தகுந்த மாதிரி இன்ட்ரஸ்ட்டிங்கா, ஜாலியா அதுல ஏதும் பயிற்சிகள் இருக்கா?’ என்று கேட்பவர்களுக்கான 2.0 வெர்ஷன்தான் Flying Bird Yoga.அதிவேகமாக மாறிவரும் உலகில் தினமும் ஒரே மாதிரியான யோகா பயிற்சிகள் என்றால் இன்றைய இளசுகளுக்கு போரடிக்கத்தானே செய்யும்.

எல்லாவற்றிலும் மாற்றத்தை விரும்புபவர்கள், உடற்பயிற்சி விஷயத்திலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லையே. அவர்களுக்காகவே Flying bird yoga என்ற இந்த புதிய யோகாசன முறை அறிமுகமாகி இருக்கிறது.

இந்தியாவில் இப்போது பெங்களூருவில் மட்டும் கால் பதித்திருக்கும் இந்த ஃப்ளையிங் பேர்ட் யோகா உடல் மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

‘‘வழக்கமான யோகா பயிற்சிகளையே தூரிகளில்(Hammock) ஆடிக்கொண்டே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த யோகா. ஆமாம்... பறக்கும் யோகா ஒரு வித்தியாசமான அனுபவம்தான். யோகா செய்யும்போதே காற்றில் பறப்பது போன்று உணர முடியும்.

இந்தியாவின் மிகப்பழமையான ஒரு பயிற்சி முறையை நவீனமாக மாற்றி வடிவமைப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினருக்கும் முழுமையான பலன்கள் போய்ச்சேரும் என்பதற்காகவே இந்த புதிய முயற்சி’’ என்று விளக்கம் தருகிறார் ஃப்ளையிங் பேர்ட் யோகாவை வடிவமைத்த அக்‌ஷர்.

‘வித்தியாசமான அசைவுகளை இந்த யோகாவில் செய்ய முடியும் என்பதால் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைகளில் அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். சவாலான சூழலில் பறந்துகொண்டே செய்யும்போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியிருப்பதால், அதிகமான கவனமும் கிடைக்கும்.

புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த யோகாவால் த்ரில்லான அனுபவத்தையும் உணர முடியும். இதில் கிடைக்கும் அதிகப்படியான மகிழ்ச்சி மன அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கும்’ என்பதும் இவரது கணிப்பு.Interesting!

- இந்துமதி