கால்களின் வீக்கம் காரணம் என்ன?



சுகப்பிரசவம் இனி ஈஸி

முதன்முறையாகக் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் தோன்றினால், உடனே பயம் பற்றிக் கொள்ளும். தனக்கோ, வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடுமோ என மனம் பதறுவார்கள்.

ஏற்கெனவே குழந்தை பெற்றவர்கள் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும்போது, காலில் வீக்கம் ஏற்பட்டால், ‘இதெல்லாம் இயல்புதானே, பிரசவத்துக்குப்பிறகு சரியாகி விடும்’ என அலட்சியமாக இருப்பார்கள். இந்த இரண்டு மனப்பான்மைகளும் கூடாது.

கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்னை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

இரண்டு வகை வீக்கங்கள்

கர்ப்பகால கால்வீக்கத்தை பிரச்னை கொண்ட கால்வீக்கம், பிரச்னை இல்லாத கால்வீக்கம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கர்ப்பத்தின் மூன்றாவது டிரைமஸ்டரில் அதாவது ஏழாவது மாதத்தில் - கால் வீக்கம் வந்தால், பெரும்பாலும் பிரச்னை இருக்காது. இயல்பான கால் வீக்கமாகத்தான் இருக்கும்.

ஒரு சிலருக்கு மட்டுமே இதுவும் பிரச்னை உள்ள கால்வீக்கமாக இருக்கும். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே கர்ப்பிணிக்குக் காலில் வீக்கம் தோன்றினால், கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும்.

கர்ப்பத்தின்போது முதல் ஆறுமாதங்கள் வரை குழந்தையின் உடல் எடை குறைவாக இருக்கும். ஏழாவது மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி முழுமையடையப் போவதால், எடை கூடும். அப்போது கர்ப்பப்பை நன்கு விரிவடையும்.

இது அருகிலுள்ள ரத்தக் குழாய்களை அழுத்தும். இதனால், காலிலிருந்து இதயத்துக்குச் செல்லும் அசுத்த ரத்தம் முறையாக மேலே செல்ல முடியாமல் தடைபடும்.

இப்படி ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, தோலுக்கு அடியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் காலில் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கமானது சிறிது நேரம் கால்களை நீட்டி உட்கார்ந்தாலோ அல்லது இரவில் படுத்து எழுந்தாலோ வடிந்துவிடும். இது இயல்பு.

சிலருக்கு லேசான வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு அதிகமான வீக்கம் இருக்கும். எப்படி இருந்தாலும் ஓய்வெடுத்த பிறகு வீக்கம் வடிந்து விடுகிறது என்றால் அது ‘பிரச்னை இல்லாத வீக்கம்’  என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழாவது மாதத்துக்கு முன்னரே காலில் வீக்கம் ஏற்படுகிறது என்றாலோ, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஓய்வெடுத்த பின்னரும் கால் வீக்கம் வடிய மறுக்கிறது என்றாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகளும் அவசியப்படும்.

உப்பு அதிகமாகும்போது…

கர்ப்பிணிகளுக்கு ரத்தத்தில் உப்புச்சத்து(Blood urea) அதிகமாகும்போது, கால்களில் வீக்கம் ஏற்படும். கால் பாதங்களில் ஆரம்பிக்கும் இந்த வீக்கம் கணுக்கால், கால், தொடை, பிறப்புறுப்பு, கைகள், வயிறு, முகம் என உடல் முழுவதிலும் வியாபித்து விடும்.பெரிய வயிறுகர்ப்பத்தில் வளரும் குழந்தையின் எடை மிகவும் அதிகமாக இருந்தால், கர்ப்பிணிக்குக் கால்கள் இரண்டும் வீங்கும்.

இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள் என ஒன்றுக்கு மேல் குழந்தை இருந்தாலும் கர்ப்பப்பை இயல்பான அளவைக் கடந்து விரிய வேண்டியது இருப்பதால், கர்ப்பிணியின் கால்கள் வீங்கும். பனிக்குட நீர் அதிகமானாலும் இம்மாதிரி கால்கள் வீங்கும்.

கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம்

கர்ப்பகால கால் வீக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணம் உயர் ரத்த அழுத்தம். கர்ப்பிணிகள் மாதம் ஒரு முறை தங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதே வேளையில் காலில் வீக்கம் தோன்றினால், வாரம் ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்த அணுக்களில் மாற்றம் ஏற்படும். அணுச்சிதைவு உண்டாகும். அதன் காரணமாக புரதச்சத்து வெளியேறும். இது சிறுநீரகத்தின் வழியாகச் சென்று சிறுநீரில் வெளியேறும். இப்படி கர்ப்பிணியின் உடலிலிருந்து அதிகமான புரதச்சத்து வெளியேறிவிட்டால், அது கர்ப்பிணியின் உடலையும் பாதிக்கும்; வளரும் குழந்தையையும் பாதிக்கும். சிலருக்கு ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் சரியாக இருந்தாலும் சிறுநீரில் மட்டும் புரதம் வெளியேறும்.

அதற்குப் பிறகு அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து விடும். ரத்த சோகை இருந்தால்?

இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது மிகவும் இயல்பு. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து கருச்சிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள் என ரத்தசோகைக்குப் பலரும் ஆளாகிறார்கள். லேசான ரத்த சோகை இருப்பவர்களுக்கு அவ்வளவாக கால் வீக்கம் ஏற்படாது. கடுமையான ரத்தசோகை இருப்பவர்களுக்குத்தான் கால்களில் வீக்கம் வரும். கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தமும் ரத்த சோகையும் சேர்ந்திருந்து காலில் வீக்கம் ஏற்பட்டதென்றால் அது மோசமான நிலைமை. கவனமாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

புரதச்சத்து குறைபாடு இருந்தால்?

சில கர்ப்பிணிகளுக்குப் புரதச்சத்து குறைவாக இருக்கும். சரியான விகிதத்தில் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டால் புரதம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் குறைந்து காலில் வீக்கம் ஏற்படும். ரத்த  சோகை உள்ளவர்களுக்குப் புரதச்சத்து குறைவதும், புரதம் குறைந்துள்ளவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதும் உண்டு.இதயக்கோளாறுகள் இருப்பவர்களுக்கு...

இதயத்தில் பிரச்னை என்றாலும் கால்கள் இரண்டும் வீங்கும். இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், காலுக்குக் கீழ் உள்ள ரத்தம் கால்களிலேயே தேங்கிவிடும். இதனால் காலில் வீக்கம் ஏற்படுகிறது. பல பெண்களுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது முதன்முறையாகத் தெரிய வருவதே கர்ப்ப காலத்தில்தான்.

ஏனென்றால், ஏற்கனவே இருக்கும் இதயக் கோளாறு கர்ப்ப காலத்தில் இன்னும் அதிகமாகும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் இதய நோய்ச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு...

சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சாதாரணமாகவே கால்களில் வீக்கம் தோன்றும். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு இன்னும் வீக்கம் அதிகமாகும். இவர்களுக்கு கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கால்களில் வீக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இவர்கள் மகப்பேறு மருத்துவர் மற்றும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெற வேண்டும்.

 சிகிச்சை என்ன?

கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோகார்டியோகிராபி, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் முழுமையான ரத்தப் பரிசோதனைகள் அவசியப்படும்.

பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாலோ, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாலோ, கால்களை கால் மனையில் வைத்து உயர்த்திக் கொண்டாலோ கால் வீக்கம் குறைந்து விடும்.

தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.

கர்ப்பிணிகள் சத்துள்ள சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டால், சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது. அதிகம் காபி குடிக்கக்கூடாது.  தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.

இடுப்பில் இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இறுக்கமான காலணிகளை அணிவதும் கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம். மருத்துவர் யோசனைப்படி ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்து கொள்ளலாம். பகலில் வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

(பயணம் தொடரும்)