மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai



Just Do It

‘மகிழ்ச்சியோடும், அமைதியோடும், நிம்மதியோடும் வாழ வேண்டுமா... Ichigyo - Zammai ரகசியத்தைப் பின்பற்றுங்கள்’ என்கிறார்கள் ஜப்பானியர்கள். அதுவும் இன்றைய பரபரப்பான வாழ்க்கைக்கு மிகவும் சரியான வழி, தொழிலில் வெற்றி பெறவும் சரியான வழியும்கூட என்பது அவர்களுடைய நம்பிக்கை. சரி... அது என்ன பண்பாடு... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்கிறீர்களா?

ஜப்பானிய வார்த்தையான Ichigyo - Zammai என்பதை ஆங்கிலத்தில் Full concentration on a single act என்று விளக்குகிறார்கள்.  அதாவது, ஒரு நேரத்தில், ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே 100 சதவிகிதம் ஈடுபடுவது! இப்படி முழுமையாக ஒரு செயலில் ஈடுபடும்போது நம்முடைய உண்மையான சுபாவம், நமக்கென்றே இருக்கும் தனித்தன்மை அந்த செயலில் பிரதிபலிக்கிறது என்கிறார் இது பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதிய Sunryu Suzuki.

ஓர் இடத்தில் அமர்ந்திருந்தால், அமைதியாக உங்களது சுவாசத்தைக் கவனியுங்கள். சுற்றி என்ன நடக்கிறது என்று வேடிக்கை பாருங்கள். மனதை எங்கெங்கோ அலைபாய விடாதீர்கள். அதேபோல், நடக்கும்போது அதை மட்டுமே செய்யுங்கள். வேறு எதையும் ஒரு விஷயத்துக்குள் திணிக்காதீர்கள். Just walk, Just eat, Just sleep... அவ்வளவுதான் விஷயம்.

மனதை அலைபாயவைத்துக் கொண்டு, ஒரே நேரத்தில் பல விஷயங்களில் ஈடுபடுவது அமைதிக்கும் நல்லதல்ல; ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல என்பதே Sunryu Suzuki எழுதிய Zen mind, Beginner’s mind என்ற புத்தகத்தின் சாராம்சம்.

‘சாப்பிடும்போது சாப்பிடுகிறேன். தூங்கும்போது தூங்குகிறேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியின் ரகசியம்’ என்கிற ஜென் கதை வலியுறுத்தும் அதே வழிமுறைதான். ‘ஒன்றே செய்... அதையும் நன்றே செய்’ என்று நம் முன்னோர்கள் சொன்னதும் அதைத்தான். Ichigyo - Zammai ரூட்டைப் பின்பற்றித்தான் பாருங்களேன்!

- இந்துமதி