கடிகாரத்தை குழப்பாதீர்கள்!



இயற்கையின் அதிசயம்

ஒருவகையில் நாம் எல்லோருமே ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்தான். இயற்கை என்கிற என்ஜினீயரால் ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர். எத்தனை மணிக்கு நாம் தூங்க வேண்டும், எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும், எத்தனை மணிக்கு நம் உடலில் தீவிரமான உற்பத்தித்திறன் இருக்கும் என்பதையெல்லாம் நாம் தீர்மானிப்பதில்லை. அந்த ப்ரோக்ராம்தான் தீர்மானிக்கிறது.

மணிக்கணக்கின் அடிப்படையில் மிகவும் நுட்பமாக செயல்படும் நம் உடலின் அதிசயத்தை கடிகாரத்துடன் ஒப்பிடுகிறார்கள் அறிவியலாளர்கள். ஆமாம்... அதற்குப் பெயரே உயிரியல் கடிகாரம். இந்த கடிகாரத்தின் அடிப்படையில் நாம் செயல்படும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். கடிகாரத்துக்கு எதிராக, அதைக் குழப்பும்வகையில் நாம் செயல்படும்போது நோய் வந்துவிடுகிறது என்பதே அறிவியலாளர்கள் சொல்லும் அடிப்படை தத்துவம். Biological clock என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இதன் செயல்முறை பற்றி பொது மருத்துவர் அருணாச்சலத்திடம் கேட்டோம்...

‘‘ஒவ்வொரு 24 மணி நேரமும் நிகழும் பல்வேறு விதமான உடலியக்க செயல்பாடுகளின் சுழற்சியை, உடலியக்க சுழற்சி(Circadian Rhythm) அல்லது உயிரியல் கடிகாரம்(Biological Clock) என்று அழைக்கிறோம். பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமான உயிரியல் கடிகாரம் உள்ளது. அது இயற்கையிலுள்ள சூரிய வெளிச்சத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர்களின் உணவு, இனப்பெருக்கம், ஓய்வு போன்ற செயல்கள் சூரிய வெளிச்சத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்கையோடு இணைந்து, குறிப்பிட்ட காலவரிசையில் அமைந்துள்ளது.

சூரிய ஒளியைக் கண்டவுடன் மலரும் மலர்கள், காலைப் பொழுதில் இரைதேடச் சென்று, மாலை இருட்ட தொடங்கியவுடன் கூட்டிற்கு திரும்பிவந்து ஓய்வெடுக்கும் பறவைகள், அதேபோல விலங்குகள் என்று அனைத்துமே இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றினுடைய செயல்பாடுகளை அமைத்துள்ளது. ஆனால், உலக உயிர்களில் மனிதன் மட்டுமே தற்போதைய நவீன, தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணங்களால், இயற்கைக்கு மாறாக உயிரியல் சுழற்சி முறைகளை மீறி நடந்து கொள்கிறான். இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு அவன் உள்ளாகிறான்.

ஒரு நாளில் சூரிய ஒளியின் பாதிப்பினால் மனித உடலின் பல்வேறு பகுதிகளின் இயக்கங்களில் எவ்வாறு மாற்றங்கள்  ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள உதவுவதே இந்த உயிரியல் கடிகாரம். அதாவது ஒரு நாளில் நாம் எப்போது தூங்குகிறோம், எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து, நம் உடலில் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், பல்வேறு என்ஸைம்கள் மற்றும் ஹார்மோன்கள் சுரத்தல், கழிவுநீக்க மண்டல செயல்பாடு, மூளையின் செயல்பாடு போன்ற பல்வேறு உடல் இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. போதிய தூக்கமின்மை, இரவு, பகல் மாறி மாறி பணிபுரிவது, ஜெட் லாக் என சொல்லப்படும் உலக நேர மாற்றம் போன்ற காரணங்களால் உடலியக்க சுழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனால் நமக்கு உடல் மற்றும் மனநிலை சார்ந்த பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் மெலடோனின்  என்பவர், அதன் முக்கியத்துவம் பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

‘‘மனித மூளையின் நடுவில், பிட்யூட்டரி சுரப்பிக்குப் பின்னர் மேற்புறமாக அமைந்துள்ளது பீனியல் சுரப்பி(Pineal Gland). இதிலிருந்து சுரக்கும் மெலடோனின்(Melatonin) என்கிற வேதிப்பொருள்தான் மனிதர்களின் உறக்கம் மற்றும் விழிப்புநிலை சார்ந்த சுழற்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது உடலியக்க செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த வேதிப்பொருள் சுரப்பதனால்தான், நமது உடல் சோர்வாக இருப்பதை நாம் உணர முடிகிறது. இதனுடைய சுரப்பு குறையும்போது சோர்வு, அசதி போன்றவற்றை நாம் உணர இயலாது. உடல் சுறுசுறுப்புடன் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல் போகிறது.

சரியான தூக்கம் கிடைக்காததால் தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுவதோடு, Premature Dementia என்கிற மனநிலை சார்ந்த பாதிப்பு மற்றும் அல்ஸைமர் என்கிற அறிவாற்றல் இழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது. தூக்கமின்மையால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

இப்படியே தொடர்ந்து 3 மாதகாலம் சரியாக தூங்காத ஆண்களுக்கும், 6 மாதகாலம் சரியாக தூங்காத பெண்களுக்கும் வாழ்வியல் சார்ந்த நோய்களான நீரிழிவுநோய், ரத்தக்கொதிப்பு, இதயநோய் மற்றும் தைராய்டு சுரப்பி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தூக்க மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல் 6 முதல் 8 மணி நேரம் வரையிலான தூக்கம் மிகவும் அவசியம். இந்தத் தூக்கம் நமது உடல் மற்றும் மனநிலை சார்ந்த பல சீரான இயக்கங்களுக்கு அவசியமாகிறது. நமது உடலுக்குத் தேவையான அளவு நாம் உறங்கினால்தான் அடுத்தடுத்த நாட்களுக்கான வேலையை நமது மூளையால் சீராக செய்ய முடியும்.

தற்போதைய சூழலில் அதிக வெளிச்சத்தை உமிளும் செயற்கை விளக்குகளின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதோடு, கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற நவீன திரைகளின் வெளிச்சத்தில் நமது நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறோம். இதுபோன்ற திரைகளிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்வீச்சானது, நமது மூளையில் நடக்கக்கூடிய மெலடோனின் சுரப்பினைத் தடுக்கிறது.

இதனால் நமது தூக்கம் கெட்டு பல உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது. எனவே உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இதுபோன்ற எலக்ட்ரானிக் கருவிகள் சார்ந்த வேலைகளை முடித்துவிடுவதால் இதுபோன்ற பிரச்னைகளைக் குறைக்கலாம்’’ என்கிறார்.

- க.கதிரவன்