நோபல் பரிசு 2019



சாதனை

சர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் மிகுந்த பயன்  விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும்  உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு.இப்பரிசு  வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901-ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசுகூட  அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும்.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் உயில்படி  ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968-ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300-வது ஆண்டு  நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. இப்பரிசு ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது.  இப்பரிசு ஆறு துறைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி  கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி மருத்துவத்துறை, 8ம் தேதி இயற்பியல், 9ம் தேதி வேதியியல், 10ம் தேதி இலக்கியம், 11ம் தேதி அமைதி மற்றும்  14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

அமைதி

2019-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபிஅகமதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான எரித்திரியாவுடன்  நீண்ட காலமாக நீடித்துவந்த சச்சரவுகளைக் களைய முயற்சி எடுத்த எத்தியோப்பியா பிரதமர் அபி அகமதுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச ஒற்றுமைக்காகவும் பல முயற்சிகளை எடுத்துள்ளார். எத்திரியாவுடனான  எல்லைப் பிரச்னைக்கும் தீர்வு கண்டுள்ளார். இதற்காகவே அபிஅகமதுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்” என  நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. இவர் பதவியேற்ற பிறகு தான் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு  நாடுகளுக்கும் இடையே தூதரக உறவும், வான்வெளி போக்குவரத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பியாவில் மிக இளவயது பிரதமராக ஆட்சி  செய்து வருபவர் அபிஅகமது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவம்


இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிரெக் செமன்சா, சர் பீட்டர் ராட்க்ளிஃப் மற்றும் வில்லியம் ஜி.கெலின் ஆகியோருக்கு  வழங்கப்பட்டுள்ளது. மனித உடலில் இருக்கும் செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உணர்ந்துகொள்கின்றது என்றும், இருக்கின்ற ஆக்ஸிஜனை எவ்வாறு  பகிர்ந்துகொள்கின்றன என்றும் இவர்கள் மூவரும் நடத்திய ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சர் பீட்டர் ராட்க்ளிஃப்  லண்டனில்  இருக்கும் ஃப்ரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர். கெலின் மற்றும்  ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், செமென்சா ஜான்ஸ் ஹோகின்ஸ்  பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மிசெல்மேயர் மற்றும் டிடையர் குயல்ஸுக்கு சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காகவும்  ஜேம்ஸ் பீப்லஸுக்கு பேரண்டம் குறித்த ஆராய்ச்சிக்காகவும் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீப்லஸுக்கு அண்டவியலில் புதிய தத்துவார்த்த கண்டுபிடிப்புக்கும் பிரபஞ்சத்தைப்பற்றி ஒரு புதிய புரிதலைக்  கொண்டுவந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மிசெல்மேயர் மற்றும்  டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கு சூரிய மண்டலத்துக்கு வெளியிலுள்ள ஒரு கோளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இக்கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ``பிரபஞ்சத்தைப் பற்றிய கண்டுபிடிப்பும் வெளிக்கோல் கண்டுபிடிப்பும் அண்டவெளியில்  ஆராய்ச்சி செய்வதற்கான புதிய வழிகளைக் காட்டுகிறது. இன்னும் பிரபஞ்சம் பல மர்மங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது’’ என்கின்றனர்.

வேதியியல்


நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் மொபைல் போன்கள் முதல் லேப்டாப்கள், இ.வாகனங்கள் வரையிலான எலெக்ட்ரானிக் சாதனங்களில்  பயன்படுத்தப்பட்டு வரும் லித்தியம் பேட்டரிகளின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக வேதியியல் விஞ்ஞானிகள் ஜான் பி  குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆராய்ச்சி, வயர்லெஸ்  மற்றும் படிம எரிபொருள் பயன்பாட்டில் இல்லாத சமூகத்தை உருவாக்க பயன்படும் என்று நோபல் பரிசு கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது.

இலக்கியம்

இலக்கியதுக்கான நோபல் பரிசு பெறும் நபரைத் தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும் பணியை ஸ்வீடன் இலக்கிய அகாடமி மேற்கொண்டுவருகிறது. கடந்த  ஆண்டில் இந்த அகாடமியின் உறுப்பினர் ஒருவரது கணவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமானது. அத்துடன் நோபல் தேர்வுக் குழுவின்  மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதால், 2018ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல்பரிசு 2019ஆம் ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என  நோபல் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த  பீட்டர் ஹேன்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2018ஆம் ஆண்டுக்கான இலக்கியதுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டைச் சேர்ந்த  ஓல்கா டோகார்சுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரம்


பொருளாதாரத்துக்கான 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்ஜித் விநாயக் பானர்ஜி, அவருடைய மனைவி எஸ்தர்  டஃப்லோ மற்றும் மைக்கெல் க்ரெமர் ஆகிய மூன்று பேரும் பெற்றுள்ளனர். சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகளுக்காக இந்த  மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழ்மையை ஒழிப்பதற்கான பொருளாதாரத் திட்டங்களை அப்ஜித் பானர்ஜி உள்ளிட்ட மூவரும்  கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு:குரு