+2 பொதுத்தமிழ் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!இக்கல்வியாண்டு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம், தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல மாற்றங்கள்  அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. இப்படி இடர்பல கடந்து சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் சார்ந்த  ஐயங்களுக்கு கரூர் மாவட்டம், நெரூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முதுகலைத் தமிழ் ஆசிரியரான ப.க.சுரேசு, (எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,நெட்.,செட்.,)  ஆலோசனை வழங்கி முழுமதிப்பெண் பெற சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அவற்றைப் பார்ப்போம்…

கவனத்தில் கொள்ள வேண்டியவைமற்ற பாடங்களுடன் ஒப்பிடுகையில் மொழிப் பாடங்களில் மாணவர்களுக்கு மதிப்பெண் குறையக் காரணம் ஒற்றுப்  பிழைகள், வாக்கியப் பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவையே. இவற்றைக் கண்டறிந்து கவனமுடன்  தேர்வு எழுதினால்  90-க்கு 90  மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமே. இனி வினாத்தாள் திட்டவரைவு இல்லாததால் அனைத்து இயல்களிலும் உள்ள அனைத்து வினா-விடைகளையும்  புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.புத்தகத்தை முழுமையாக இரண்டு அல்லது மூன்று முறை வாசித்துவிட வேண்டும். விடைத்தாளில் பகுதி, பிரிவு,  வினா எண் ஆகியவற்றைத் தெளிவாக எழுத வேண்டும். எளிமையான குறைந்த அடிகளில் விடையளிக்கக்கூடிய வினாக்களைத் தேர்வு செய்ய  வேண்டும். கடினமான வினாக்களைத் தேர்ந்தெடுத்து எழுதினால்தான் முழுமதிப்பெண் பெற முடியும் என நினைப்பது தவறு.

வினாத்தாள் அமைப்பு முறை


பொதுத்தேர்வுத் தமிழ் வினாத்தாள் 90 மதிப்பெண்களைக் கொண்டது. இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளாக பகுக்கப்பட்டு 47 வினாக்களை உள்ளடக்  கியுள்ளது. முதல் பகுதியில் (1-14) உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அவற்றில் செய்யுள், உரைநடை, இலக்கணம்,  மொழிப்பயிற்சி போன்ற பகுதிகளில் தலா 3 வினாக்கள் வீதமும், துணைப்பாடங்களிலும் இலக்கணக்குறிப்பிலும் தலா 1 மதிப்பெண் வீதமும்  கொள்குறி வினாக்களாகக் கேட்கப்படும். புத்தகங்களின் உட்புறமிருந்து 3 முதல் 4 வினாக்கள் கேட்கப்படும். எனவே, பெட்டிச் செய்திகள்,  தெரிந்துகொள்வோம் மற்றும் ஆசிரியர் குறிப்புகளையும் படித்தால் முழுமதிப்பெண் பெறலாம்.

பகுதி 2-ல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மூன்று பிரிவுகளாக இடம்பெறும். பிரிவு 1-ல் (15-18) செய்யுள் பகுதியிலிருந்து 4 வினாக்கள் கேட்கப்படும்.  3 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பிரிவு 2-ல் (19-21) 3 வினாக்கள் உரைநடைப் பகுதியிலிருந்து கேட்கப்படும். அதில் 2 வினாக்களுக்கு  விடையளிக்க வேண்டும். பிரிவு 3-ல் (22-30) 9 வினாக்கள் இலக்கணத் தேர்ச்சிகொள் பகுதியிலிருந்தும், மொழிப்பயிற்சி பகுதிகளிலிருந்தும்  கேட்கப்படும். புணர்ச்சி விதிகளில் ஒரு வினாவும் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்,  இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும், ஈறுபோதல், இனமிகல் போன்ற விதிகள்  முக்கியமானவை) பகுபத உறுப்பிலக்கணத்தில் ஒரு வினாவும் உறுதியாக இடம்பெறும்.
இலக்கணத் தேர்ச்சிகொள் பகுதிகளிலுள்ள வினாக்களை  மட்டும் படிக்காமல், கூடுதலாக மொழிப்பயிற்சியிலுள்ள வினாக்களையும் படித்தால் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க இயலும். உதாரணமாக,  மயங்கொலி சொற்களைத் தொடரில் அமைக்க(ப.44), வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக (ப.70), பொருள் வேறுபாடறிந்து தொடரமைக்க  (ப.154), மரபுப் பிழையை நீக்கி எழுதுக (ப.185), மரபுச் சொல்லைத் தொடரில் அமைக்க (ப.185), கலைச்சொல்லைக் கண்டறிக என்பன போன்ற  பகுதிகளைத் தெளிவாகப் படித்தாலே இப்பகுதியில் முழுமதிப்பெண் பெறலாம்.  

பகுதி 3-ல் (31-43) 13 வினாக்கள் நான்கு மதிப்பெண் வினாக்களாக மூன்று பிரிவுகளில் கேட்கப்படும். பிரிவு 1-ல்  செய்யுள் பகுதிகளில் தரப்படும் 4  வினாக்களில் 2 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பிரிவு 2-ல் உரைநடை பகுதிகளில் தரப்படும் 4 வினாக்களில் 2 வினாக்களுக்கு  விடையளிக்க வேண்டும் (மாணவர்கள் சுயமாக பதிலளிக்கும் வினாக்களைத் தவிர்த்து, புத்தகங்களிலுள்ள நேரடி வினாக்களைத் தேர்வு செய்து  எழுதினால் முழு மதிப்பெண் பெறலாம்). பிரிவு 3-ல் மொழிப்பயிற்சிகளிலிருந்து தரப்படும் 5 வினாக்களில் 2 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.  பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதுதல்(ப.103), தமிழாக்கம் செய்தல் (பத்தி அல்லது பழமொழிகள்), அணி இலக்கணம்,  இலக்கிய நயம் பாராட்டுதல், மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதை எழுதுதல்,கருத்துப்படத்தை விளக்கி எழுதுதல், கடிதம் எழுதுதல், கதையை நிறைவு  செய்தல் (ப.155) போன்ற வடிவங்களில் வினாக்கள் அமையும்.

இவற்றில் அணியிலக்கணம், இலக்கியநயம் பாராட்டுதல், மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதை எழுதுதல் கண்டிப்பாக இடம்பெறும்.அணி இலக்கணத்தைப் பொறுத்தவரை உவமை அணி, ஏகதேச உருவக அணி, சொற்பொருள் பின்வருநிலையணி, எடுத்துக்காட்டு உவமையணி  போன்றவை முக்கியமானவையாகும். அணிக்குச் சான்றாக முழுப்பாடலையும் எழுதவேண்டும். அணி விளக்கத்திற்கு 2 மதிப்பெண்ணும், பொருத்தம்  மற்றும் சான்றுக்கு தலா ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இரண்டு அணிகள் கொடுக்கப்படும் அதில் ஒன்றை மட்டும் எழுதவேண்டும்.

இலக்கியநயம் பாராட்டுதல் வினாவைப் பொறுத்தவரை புத்தகங்களில் 20, 44, 70, 26, 154, 185, 216 ஆகிய பக்கங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு  மையக்கருத்து, எதுகை, மோனை, இயைபு, அணி, சுவை போன்ற நயங்களைத் தெரிந்திருந்தால் முழுமதிப்பெண் பெறலாம்.மரபுக்கவிதை அல்லது  புதுக்கவிதை எழுதும்போது எதுகை, மோனை, கற்பனை ஆகியவை கலந்து எட்டு வரிகளுக்கு குறையாமல் கவிதை எழுதவும். மழை, இயற்கை,  குழந்தை, பள்ளி, தாயன்பு, வெண்ணிலா போன்ற தலைப்புகளில் தேர்விற்கு முன்பே கவிதைகள் எழுதி மனப்பாடமாக வைத்திருந்தால் தேர்வறையில்  கூடுதல் நேரம் வீணாகாது. (உரைகளில் படித்த கவிதை எழுதினால் முழுமதிப்பெண் கவிதைக்குக் கிடைப்பதரிது)

பகுதி 4-ல் (43-46) செய்யுள், உரைநடை, துணைப்பாடப் பகுதிகளில் முறையே (அல்லது முறையில்) இரண்டு வினாக்கள் கொடுத்து ஒன்றுக்கு  பதிலளிக்குமாறு அமைந்திருக்கும். நெடுவினாக்கள் எழுதும்போது முன்னுரை முடிவுரை உள்தலைப்புகளுடன் எழுதுதல் வேண்டும்.

பகுதி 5-ல் 47வது வினாவாக மனப்பாடப் பகுதியிலிருந்து மனப்பாடப் பாடல் ஒன்றும், திருக்குறளும் கேட்கப்படும். மனப்பாடப் பகுதி எழுதும்போது  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவாறு அடிபிறழாமல் எழுதி, ‘பா’ வகையைக் குறிப்பிட்டு எழுதினால் முழுமதிப்பெண் பெறலாம்.மேலே கூறப்பட்டுள்ள  அறிவுரைகளைப் பின்பற்றி, தகுந்த பயிற்சியும் முயற்சியும் கொண்டு, தன்னம்பிக்கையோடு, நேர மேலாண்மையையும் மனத்தில் இருத்தி  பொதுத்தேர்வு எழுதினால் தமிழ்ப் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்று வெற்றிபெறலாம். நல்ல மதிப்பெண்களோடு வெற்றிபெற மாணவர்களுக்கு  வாழ்த்துகள்!

“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்”

- தொகுப்பு: தோ.திருத்துவராஜ்