10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!



இக்கல்வியாண்டில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிப்புகள் என ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தவண்ணம் உள்ளது. அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் மாற்றம் போல தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழப்பங்களை எல்லாம்  கடந்து சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடம் சார்ந்த ஐயங்களுக்கு ஈரோடு மாவட்டம் பொலவக்காளிபாளையம் அரசு  மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை (தமிழ்) அ.மங்கையர்க்கரசி ஆலோசனைகள் வழங்கி அதிக மதிப்பெண் பெற சில குறிப்புகளைத் தந்துள்ளார்.  அவற்றைப் பார்ப்போம்…

பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ‘அதிக மதிப்பெண்கள் பெறுவேன்’ என்ற உயர்ந்த எண்ணத்தை உள்ளத்தில் நிறுத்தி அதிகாலையில் எழுந்து  படிப்பதை வழக்கமாக்க வேண்டும். அமைதி, காற்றோட்டம், வெளிச்சம் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். மனப்பாடப்பகுதியைப்போல்  எல்லா வினாக்களையும் மனப்பாடம் செய்து படிக்காமல், பொருள் உணர்ந்து படித்து, சொந்த நடையில் எழுத முயற்சிக்க வேண்டும். கடினமான  பாடமும் விரைவில் மனப்பாடமாகும். மொழிப்பாடத்தைப் பொறுத்தவரை தெளிவான, அழகான கையெழுத்தும் கூடுதல் மதிப்பெண்கள் பெற அவசியம்.  ஆதலால் தெளிவான, அழகான கையெழுத்தைப் பெற, எழுதிப் பார்க்கும் (விடைகள்) நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வினாத்தாளைப் படிக்கும்  நேரத்தில் செலுத்தும் கவனத்தைப் போலவே, வினாக்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தவேண்டும்.வினா  எண்களைக் குறிப்பிடுவதுடன், விடைகளின் குறியீடுகளையும் (அ, ஆ, இ, ஈ) சேர்த்தே எழுதப் பயிற்சி எடுக்க வேண்டும். ‘சரியான விடையைத்  தேர்ந்தெடுத்து எழுதுக’ போன்ற வினாக்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற விடைகளை மட்டுமே எழுத வேண்டும்.  மிகுதியான விடைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

அடித்தல், திருத்தல் இன்றி எழுது வதுடன், மயங்கொலிப் பிழைகள் (ண, ந, ன, ர, ற, ல, ழ, ள), சந்திப்பிழைகள் (க், ச், த், ப்) இன்றி எழுதுவதும்  அவசியம். நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்தி எழுத(கட்டுரை, கடிதங்களில் கண்டிப்பாக) வேண்டும். ஐந்து பகுதிகளாக இடம்பெறும் 10 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் முதல் பகுதி 15 மதிப்பெண்களுக்கானது. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டிய பகுதியில்  உரைநடை உலகம், கவிதைப்பேழை, கற்கண்டு ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்  தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். உரைநடை உலகில் வரும் நூல் பெயர், ஆசிரியர் பெயர், அவை குறிப்பிடும்  செய்தி, கவிதைப்பேழையில் செய்யுள், ஆசிரியர் பெயர், சொற்பொருள், சேர்த்தெழுது, பிரித்தெழுது, இலக்கணக்குறிப்பு மற்றும் கற்கண்டில் உள்ள  இலக்கணப் பகுதிகளை ஓர் அட்டவணையாக எழுதிவைத்து அவற்றைத் தினந்தோறும் படித்தால் சுலபமாக விடையளிக்கலாம்.

பகுதி 2 மொத்தம் 18 மதிப்பெண்கள் கொண்டது. இதில் 2 பிரிவுகள் உண்டு. பிரிவு I-ல் 16-21 ஆறு வினாக்கள் இடம்பெறும். கவிதைப்பேழையில்,  உரைநடை உலகிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். 21வது வினாவாக வரும் கட்டாய வினாவிற்கு விடையளிக்க திருக்குறளைத் திரும்பத் திரும்ப  படித்துப் பார்ப்பது நல்லது.பிரிவு II-ல் இடம்பெறும் 7 வினாக்களில் எவையேனும் 5 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 28வது வினா பகுபத  உறுப்பிலக்கணமாக அமையும் கட்டாய வினா. பகுபத உறுப்பிலக்கணம் அட்டவணையாக எழுதிப் பயிற்சி பெற்றால் சுலபமாக விடையளிக்கலாம்.  மேலும் கற்கண்டு, மொழியை ஆள்வோம் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் வரும். இப்பிரிவில் வரும் செவிமாற்றுத் திறனாளர்களுக்கான  மாற்றுவினாவை அதற்கான அட்டை வைத்திருப்பவர் மட்டுமே எழுதவேண்டும். மற்றவர் எழுதக்கூடாது.

பகுதி 3 மொத்தம் 18 மதிப்பெண்களுக்கான 3 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் 3 வினாக்கள் இடம்பெறும். எவையேனும் 2  வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்க வேண்டும். பிரிவு I-ல் கவிதைப் பேழையிலிருந்து வினாக்கள் இடம்பெறும். பிரிவு II-ல் 34வது வினா  கட்டாய வினா. மனப்பாடப் பகுதியாக வரும் இவ்வினாவை ஒவ்வொரு இயல் என்ற வகையில் எழுதிப்பார்த்துப் பயிற்சி செய்யலாம். பிரிவு III-ல்  கற்கண்டு பகுதியிலிருந்து வினாக்கள் இடம்பெறும். இப்பகுதியில் வினா-விடை வகை, பொருள்கோள், அலகிடல், அணி, பாடலைப் படித்து  விடையளித்தல் ஆகியவை இடம்பெறும்.

பகுதி 4-ல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். மொத்தம் 25 மதிப்பெண்கள் கொண்ட பகுதி. (1) படம் உணர்த்தும் செய்தி, (2)  படிவம் (3) நிற்க அதற்குத்தக (4) வசன கவிதை (5) மொழிபெயர்த்தல் (பத்தி/பழமொழிகள்) என்ற வகையில் 5 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

பகுதி 5-ல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க வேண்டும். இப்பகுதி மொத்தம் 24 மதிப்பெண்கள் கொண்டது. இதில் 3  வினாக்கள் ‘இது’ அல்லது ‘அது’ என்ற வகையில் அமைந்திருக்கும். (1) உரைநடை உலகம், (2) கவிதைப்பேழை, (3) விரிவானம், (4) கடிதம், (5)  கட்டுரை ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறங்களில் உங்களைக் கவர்ந்தது பற்றியும்,  பாடல் வரிகளைக் கொடுத்து அதிலுள்ள கவிதை நயம்பற்றியும் கேட்கப்படும். சிறுகதைகள் பற்றிய கருத்துகள், சில கருத்துகளைக் கொடுத்து  அவற்றைக் கருவாகக் கொண்டு ஒரு தலைப்பில் கட்டுரை எழுதும் விதமான வினா இடம்பெறும்.

கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பயன்படுத்தி  ஒரு கட்டுரை எழுதும் விதமான வினா இடம்பெறும். மொத்தத்தில் 5 பகுதிகளாக 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும்.மேலே கூறியுள்ள குறிப்புகளை கவனத்தில் கொண்டு ‘காலம் பொன் போன்றது’ என்பதை உணர்ந்து, கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் கற்றலில்  கவனம் செலுத்துங்கள். ‘பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி’ என்ற கனவு நாயகன் கலாமின் கருத்தைக்  கவனத்தில் கொண்டு நிதானமாகச் செயல்பட்டு வெற்றியைப் பிரதானமாக்க வாழ்த்துகள்!

- தொகுப்பு: தோ.திருத்துவராஜ்