தேசிய மின்துறைப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!



அட்மிஷன்

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தேசிய மின்துறைப் பயிற்சி நிறுவனம்(National  Power Training Institute -NPTI). மின்துறை சார்ந்த நவீன கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்கும்பொருட்டு  உருவாக்கப்பட்டது இத்தேசிய பயிற்சி நிறுவனம். வடக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு என அத்தனை பிராந்தியங்களிலும் பயிற்சி நிறுவனங்களை  நிறுவி  சர்வதேச அளவில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இப்பயிற்சி நிறுவனத்தில் மின்சாரம் மற்றும் ஆற்றல்துறைகளைச்   சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை டிப்ளமோ பயிற்சிகள், குறுகிய காலப் பயிற்சிகள், இணையவழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.  அதன்படி பெங்களூருவில் இயங்கிவரும் கிளைப் பயிற்சி நிறுவனத்தில் வழங்கப்படும் 26 வாரங்கள் கால அளவுடைய முதுகலை டிப்ளமோ படிப்பான  Post Graduate Diploma Course in Transmission & Distribution-ல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இதில் சேர விருப்பமுள்ளவர்கள் Electrical, Electrical & Electronics, Power Engineering போன்ற துறைகளில் எஞ்சினியரிங் முடித்திருக்க வேண்டும்.  SC / ST, OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி 25% மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வயதுவரம்பு ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nptibangalore.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்யவேண்டும்.  பூர்த்தி செய்த படிவத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500ஐ ‘PSTI, Bangalore’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து ‘Head of Institute,  National Power Training Institute  PSTI, Subramanyapura Road, Banashankari 2nd Stage Near Yarab Nagar Bus stop, Bangalore -560070’“ என்ற  முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எஞ்சினியரிங் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட  மாணவர்கள் பட்டியல் 22.11.2019 அன்று மாலை 5 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். கவுன்சிலிங் மற்றும் மாணவர் சேர்க்கை 3.12.2019,  4.12.2019, 5.12.2019 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.nptibangalore.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா