தங்கம் வென்ற வீராங்கனைகள்!



உலக மகளிர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை நஸோமி ஓகுஹராவை எதிர்கொண்ட பி.வி.சிந்து சிறப்பாக விளையாடி 21-1 மற்றும் 21-7 என்ற நேர்செட்களில் எளிதாக வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி நாடு திரும்பியுள்ளார்.


2013, 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வெண்கலத்தை வென்ற சிந்து, இம்முறை தங்கம் வென்று உலக பேட்மின்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையுடன் நாடு திரும்பியுள்ளார். சென்ற ஆண்டுகளில் நஸோமி ஓகுஹராவுடன் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற சிந்து, இம்முறை அவரை வென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரியது. பிவி. சிந்துவை ‘இந்தியாவின் பெருமை’ என்று வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதே போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மின்டன் பிரிவில், 21-12, 21-7 என்ற செட் கணக்கில் பரூல் பார்மரை வென்று உலகப் போட்டிகளில் தனது முதல் தங்கத்தை பதிவுசெய்துள்ளார் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி. மானசி ஜோஷியிடம் தோல்வியுற்றவரும் இந்தியாவைச் சேர்ந்த கடந்த காலங்களில் 3 தங்கம் வென்ற வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய தங்க மங்கைகளுக்கு அனைத்துத் தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.