அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்



*சர்ச்சை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வான முதல் தாள் மற்றும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வான இரண்டாம் தாள் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.


முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 313 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானபோது ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாமல், வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியானதிலும், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘நிலைமை இப்படி இருந்தால் தரமான ஆசிரியர்கள் கிடைப்பார்களா?’ என்ற கேள்விக்கு கல்வியாளர்கள் கூறிய கருத்துகளைப் பார்ப்போம்...

பேராசிரியர் பி.இரத்தினசபாபதி, முன்னாள் தமிழ்க் கல்விப் பேராசிரியர், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தகுதிகளை அளப்பதாக இல்லாமல் தகுதியற்றவர்களாக ஆக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. குறைவான தேர்ச்சிகாரணங்கள் என்று பார்த்தால், உளவியல் பாடம் ஒன்றுதான் ஆசிரியர் கல்வியின்போது தேர்வு எழுதியோர் படித்ததாகும். 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வுத் தாளில் உளவியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள்தான். கடந்த தேர்வில் கல்வி உளவியல் பற்றிய வினாக்களே இல்லை. மருத்துவ உளவியல் சார்ந்த வினாக்களே முழுவதுமாகக் கேட்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு உளவியல் தெரியவில்லை என்பதாக ஆக்கப்பட்டனர்.

இரு தேர்வுகளுமே தமிழ், ஆங்கிலம் ஆகிய இருபாடங்களிலுள்ளவை முறையே தமிழ், ஆங்கில ஆசிரியர்களுக்கு உரியனவாகும். அவ்வினாக்களை எல்லாரும் எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது தேர்வுத் தர்மத்திற்குப் புறம்பானது.
பலவுள் தெரிவு (Multiple choice) அமைப்பில் உள்ள அனைத்து வினாக்களும் மனப்பாடத் திறனை அளப்பதாகவே கேட்கப்பட்டுள்ளன. பாடநூலிலுள்ள பகுதிகளை ‘அ’ முதல் ‘ஓள’ வரை (முழுவதுமாக) குருட்டு மனப்பாடம் செய்தால்தான் அந்த வினாக்களை எதிர்கொள்ளமுடியும். ஆளல் (Application) சார்ந்த வினாக்கள் மருந்துக்குக்கூட இல்லை. இரு தேர்வுகளுக்குமே பாடத்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாடநூல்களில் உள்ள தகவல்கள் பற்றிய வினாக்கள் மட்டுமே தேர்வில் இடம்பெற்றுள்ளன. பாடத்திட்ட நோக்கங்களை நிறைவேற்றும் திறன் பெற்றிருப்பதை அளப்பதாக இல்லை. தகுதித் தேர்வுகள் இரண்டுமே பாடங்களைக் கற்பிப்பதற்கான திறனை அளக்கவா, அவ்வப்போது மாற்றம் பெறுகின்ற பாடப்பகுதியினை மனனம் செய்திருப்பதை அறியவா என்ற தெளிவு வினாத் தயாரிப்போரிடமோ, தேர்வுகளை நடத்துவோரிடமோ இல்லை. இத்தனை குறைபாடுகளைக் கொண்டுள்ள தகுதித் தேர்வினை, ஆசிரியர் தகுதித் தேர்வு என்று கருதுவது எந்த வகையிலும் நியாயமில்லை.. தகுதித் தேர்வுகளில், தேர்வு நடத்தியோர் முடிவின்படி தேர்ச்சி பெற்றோரெல்லாம் திறமைமிக்க ஆசிரியர்களும் அல்லர். தேர்ச்சி பெறாதோரெல்லாம் திறமையற்ற ஆசிரியர்களும் அல்லர்.

ஆசிரியர் சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

தமிழ்நாட்டில் ஏற்கனவே 500-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 2014 -15 கல்வியாண்டில் புதிதாக 40 தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர் கல்விப் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதுள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஆசிரியர் கல்விப் படிப்பை முடிக்கின்றனர். இவர்களில் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பேராவது தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணிவாய்ப்பைப் பெற முடிகிறதா? என்பதே ஐயத்திற்குரியது. பெரும்பாலும் வசதிவாய்ப்பற்றவர்களே ஆசிரியர் கல்விப் படிப்பை படித்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் புற்றீசல் போல் லட்சக்கணக்கில் ஆசிரியர் கல்விப் படிப்பை முடித்தவர்களை உருவாக்குவது இளைய தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் தரமான ஆசிரியர்களை உருவாக்கத் தேவையான ஆசிரியர் பயிற்சி முறை, ஆசிரியர் கல்விப் பாடத்திட்டம் ஆகியவற்றில் புதிய மாற்றங்களைச் செய்வதைப் புறந்தள்ளிவிட்டு, தேவைக்கும் அதிகமான தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது ஆசிரியர் கல்வியின் தரத்தை மேலும் பாழ்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 5 விழுக்காட்டிற்கும் குறைவான எண்ணிக்கையினரே தேர்ச்சி பெற்றனர். ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் பேர் அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்காமல் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் சுமார் 50 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர்.

தரமான கல்வியை வழங்கத் தகுதியுள்ள ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் கல்வியிலும் ஆசிரியர் தேர்வு முறைகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வேண்டும். ஆனால் மாற்றங்கள் நடப்பதற்கான நம்பிக்கையோ சூழலோ இப்போது இல்லை. ஆசிரியர் கல்வியை தனியார்மயமாக்கியதே ஆசிரியர் கல்வி இன்று மதிப்பிழந்து போகக் காரணம். - தொகுப்பு: திருவரசு