உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க… பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற GATE 2020 தகுதித் தேர்வு!*தகுதி தேர்வு

இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் பல உயர்கல்வி நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் மேல்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவ தற்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குமான பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு-2020-க்கான (Graduate Aptitude Test in Engineering GATE 2020) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


தகுதித் தேர்வுப் பயன்பாடு

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் (GATE Score) இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிலிருக்கும் மேற்படிப்புகளுக்கான சேர்க்கை பெறுவதற்கு மட்டுமின்றி, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவற்றுக்கான நிதியுதவியினைப் பெறுவதற்கும் உதவுகின்றது.

மேலும், பாரத மிகுமின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited), இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation), தேசிய அனல்மின் நிறுவனங்கள் (National Thermal Power Corporation), இந்திய அணு ஆற்றல் கழக நிறுவனம் (Nuclear Power Corporation of India Limited), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation), மின்கட்டமைப்புக் கழகம் (Power Grid Corporation) போன்ற இந்திய அரசு நிறுவனப் பணிகளுக்கும் GATE தேர்வு மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கான அமைப்பு

பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore) மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி என எட்டு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) என்று மொத்தம் எட்டு கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வினைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. 2020ஆம் ஆண்டுக்கான தேர்வினை டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Delhi (IITD)) நடத்தவிருக்கிறது.

தாள்கள்

இத்தேர்வு விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), நிலவியல் மற்றும் புவி இயற்பியல் (Geology and Geophysics), வேளாண்மைப் பொறியியல் (Agricultural Engineering), கருவிமயமாக்கல் பொறியியல் (Instrumentation Engineering), கட்டடவியல் மற்றும் திட்டமிடுதல் (Architecture and Planning), கணிதம் (Mathematics), உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering), கட்டுமானப் பொறியியல் (Civil Engineering), சுரங்கப் பொறியியல் (Mining Engineering), வேதியியல் பொறியியல் (Chemical Engineering), உலோகத்தொழிற்கலைப் பொறியியல் (Metallurgical Engineering), கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Computer Science and Information Technology), பெட்ரோலியப் பொறியியல் (Petroleum Engineering), வேதியியல் (Chemistry), இயற்பியல் (Physics), மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering), உற்பத்தி மற்றும் தொழிற்சாலைப் பொறியியல் (Production and Industrial Engineering), மின்னியல் பொறியியல் (Electrical Engineering), நெசவுப் பொறியியல் மற்றும் இழைகள் அறிவியல் (Textile Engineering and Fibre Science), சூழ்நிலையியல் மற்றும் படிமுறை வளர்ச்சி (Ecology and Evolution), பொறியியல் அறிவியல்கள் (Engineering Sciences), உயிர் அறிவியல்கள் (Life Sciences) உள்ளிட்ட 25 தாள்களுக்கு நடைபெற இருக்கிறது.

கல்வித் தகுதி

GATE 2020 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதியுடையவராக இருக்க வேண்டும். பொறியியல் / தொழில்நுட்பம் / மருந்தாளுமை (BE/B.Tech/BPharm) அல்லது கட்டடக்கலை (B.Arch) அல்லது நான்காண்டு கால இளநிலை அறிவியல் (ஆய்வியல்) (B.Sc (Research)/B.S) படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருத்தல் வேண்டும்.அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுநிலைப் பட்டம் (M.Sc/M.A/M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும். நான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post - B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2, 3 மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்துக் கொண்டு, 2020ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Dual Degree) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2020 ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் (Int. M.Sc) அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வியல் படிப்பு (Int B.S - M.S) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும். மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD), இந்திய தேர்வாணையக் கழகம் (UPSC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் (B.E/B.Tech/B.Arch equivalent examinations of Professional Societies, recognized by MHRD/UPSC/AICTE) (உதாரணமாக A.M.I.E, AMICE)

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://gate.iitd.ac.in எனும் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் (Information Brochure) தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், பொதுப் பிரிவினர் ரூ.1500, எஸ்சி., எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டுத் தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், அடிஸ் அபாபா, கொழும்பு, டாக்கா மற்றும் காத்மண்டு ஆகிய மையங்களுக்கு 50 அமெரிக்க டாலர் (US$ 50) என்றும், துபாய் மற்றும் சிங்கப்பூர் மையங்களுக்கு 100 அமெரிக்க டாலர் (US$ 100) என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 24.9.2019.

தேர்வு மையங்கள்

GATE 2020 தேர்வுக்கு இந்தியா மற்றும் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனும் மண்டலத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில நகரங்கள் என்று மொத்தம் 47 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என்று 19 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் என்று மொத்தம் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும். தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள் 15.11.2019.

அனுமதிச் சீட்டு

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளத்திலிருந்து 3.1.2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டையுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டு (Passport), நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் அடையாள அட்டை (Aadhar UID), கல்லூரி அடையாள அட்டை (College ID), பணியாளர் அட்டை (Employee ID), ஓட்டுநர் உரிமம் (Driving License) அடையாள அட்டையினைத் தேர்வு எழுதும் மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு நாட்கள்

இணைய வழியில் நடத்தப் பெறும் இந்த கணினி வழித் தேர்வு (ONLINE Computer Based Test (CBT)) வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்தப்பெறுகிறது. GATE 2020 தேர்வு 1.2.2020, 2.2.2020 மற்றும் 8.2.2020, 9.2.2020 ஆகிய நான்கு நாட்கள் நடத்தப்படவிருக்கிறது. தேர்வு முடிவுகள் 16.3.2020 அன்று http://gate.iitd.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். - TS.மணி