உத்வேகம் பிறக்கும்
மேலாண்மைப் படிப்புகளின் வகைகள், கல்விநிறுவனங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறைகள் என CAT நுழைவுத் தேர்வுகளைப் பற்றிய கட்டுரை விளக்கமாகவும், விண்ணப்பித்தலுக்கு ஏதுவாகவும் இருந்தது. மேலும் சைபர் செக்யூரிட்டி படிப்புகளின் இன்றைய தேவை, அதில் சேர்வதற்கான கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு போன்ற விவரங்கள் வழிகாட்டும் விதமாக இருந்தது. - வி.வேல்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான ஒரே தமிழக மாணவி மாரியம்மாளுக்கு வாழ்த்துகள். வறுமையான சூழலிலும் சீரான பயிற்சி மேற்கொண்டு இந்திய அணியில் தேர்வானது, அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. சோதனைகளைக் கடந்து சாதிக்கும் சாதனையாளர்களை அடையாளப்படுத்தும் கல்வி-வேலை வழிகாட்டி மேலும் சிறப்படைய வாழ்த்துகள். - தா. ஜோதி, பாளையங்கோட்டை. தீராத தேடலும், கடின உழைப்பும்தான் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கிறது என்ற சொல்லுக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் மசாலா கம்பெனி பிரதிநிதியாக இருந்து வெப் டிவி உரிமையாளராக உயர்ந்த பி.கலையரசு. எவ்வளவு தடைகள் வந்தாலும் சோர்ந்துபோகாமல், சரியான திட்டமிடலுடன் உழைத்து வென்ற கலையரசுவின் வாழ்க்கைப் பயணம் படிக்கக்கூடிய, சாதிக்கத் தூண்டும் இளைஞர்களுக்கு உத்வேகம் பிறக்கும். - ரா.வேணுகோபால், அருப்புக்கோட்டை. என்னதான் மாணவர்களுக்கு திறமை இருந்தாலும், அவர்களை ஊக்குவிக்க, சரியான பாதையில் வழிநடத்த அவசியம் ஒருவர் தேவைப்படுவார். அவ்வகையில் 289 விநாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை படைத்த தர்ஷினிக்கும் அவருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து ஊக்கம் கொடுத்த ஆசிரியை ரஷீனாவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள். - அ.முகமது ரஃபீக், ராமநாதபுரம்.
|