மாணவர்களை மேம்படுத்துவதே என் குறிக்கோள்!



*நல்லாசிரியர்

இன்றைய அரசுப் பள்ளிகள் சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றன. அரசின் கல்விக்கொள்கைகள் ஒருபுறம் அடித்தட்டு மக்களுக்குச் சாதகமாக இருந்தாலும் மறுபுறம் கல்வி உரிமைச் சட்டமே தனியார் பள்ளிகளிடமே 25% மாணவர்களை ஒப்படைத்து கல்விச் செலவை ஏற்று அவர்களின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவுகிறது.

இப்படியான கடுமையான சூழலில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவதை நாம் அறிவோம். எல்லாவற்றையும் கடந்து அரசுப் பள்ளிகளை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மலர ஆதாரமாக மாற்றிவரும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களும் ஆங்காங்கே இருக்கின்றனர் என்பதை நாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது.


அப்படியான ஒருசிலர் யாருடைய அங்கீகாரத்திற்கும் ஆசைப்படாமல், தங்கள் பணியின் மேன்மையை உணர்ந்து வெளியுலகிற்கு தெரியாமல் இயங்கி வருகின்றனர். அப்படி சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களில் ஒருவரான பரமேசுவரியிடம் பேசினோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

‘‘2002-ல் தானிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றேன். அங்கிருந்த மாணவர்கள்தான் என்னை ஆசிரியராக உருமாற்றினார்கள். அவர்கள் மிக அன்பானவர்கள். ‘எந்த வேலை வேண்டுமானாலும் சொல்லுங்க டீச்சர்... செய்றோம். படிக்க மட்டும் சொல்லாதீங்க. படிப்பு வராது எனக்கு’ என்று சொன்ன மாணவன் என்னைப் பக்குவப்படுத்தினான். நான் என்ன பணிக்கு வந்திருக்கிறேன், அதற்கான உழைப்பு எத்தகையது என்பதை எனக்கு உணர்த்தினான்.
பள்ளிக்கு அருகிலிருந்த மலைப்பகுதியிலிருந்தும் குறைவான எண்ணிக்கையில் பழங்குடியினர் வந்து படித்தனர். ஒரு வார்த்தை கோபமாகச் சொல்லிவிட்டால் போச்சு. அடுத்த நாள் மலையிலிருந்து இறங்கமாட்டேன் என்பர். அன்புக்கு
மட்டுமே கட்டுப்பட்ட இந்த வம்பர்களைப் படிக்க வைப்பதே பெரிய சவாலாக இருந்தது. அடிப்படைக் கல்வியிலிருந்த சிக்கலை மாலை 6 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகள் எடுத்தும் மதிய உணவு நேரத்தில் தனியாக வந்து படிக்கச் செய்தும் தன்னம்பிக்கை ஊட்டினேன்.

பள்ளியின் நூலகத்தை ஒழுங்குசெய்து மாணவர்கள் பயன்படுத்த தக்கதாக மாற்றினேன். கழிவறைகள் அமைக்கத் தலைமை ஆசிரியரிடம் தொடர்ந்து பேசி அதற்கான பணிகளில் உறுதுணையாக இருந்தேன். பள்ளியைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தும் சமூகவிரோதச் செயல்களை அனுமதிக்கக்கூடாது என்று மாணவர் குழு அமைத்துச் செயல்பட்டேன். மாணவர்கள், அவர்களுடைய வாழ்வை, இன்ப துன்பங்களை, உளவியல் சிக்கல்களை என்று சகலத்தையும் என்னிடம் பகிர்ந்து இன்று வரையிலும் அவர்களுடைய திருமணம், குழந்தை என்று தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்று நெகிழ்ச்சியோடு தெரிவிக்கும் தலைமை ஆசிரியை பரமேசுவரி அடுத்தடுத்து நிகழ்ந்த பணி இடமாற்றங்களையும் களப் பணிகளையும் விவரித்தார்.

‘‘காஞ்சிபுரத்தில் உள்ள மானாம்பதியில் அடுத்து பணி மாறுதல் பெற்றுச் சென்றேன். அங்கே மாணவர்கள் ஓரளவு படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் வாழ்வு சார்ந்த பணிகளை முன்னெடுத்தேன். மாலை நேரங்களில் மாணவர் இல்லங்களுக்குப் போய் அவர்களின் மேற்படிப்பு தொடர்பாகப் பேசுவது, அவர்களுடைய உடல்நலன் குறித்த அக்கறையுடன் செயல்படுவது என்று இருந்தேன். குறிப்பாக, மாணவிகளுக்கு அவர்களுடைய உடல் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து உரையாடல் மூலமாக முன்னெடுத்தேன். இங்கு மாணவர்கள் பொறுப்புணர்வுடனே இருந்தனர். ஆனால், தொழிற்கல்விப் பிரிவு மாணவர்கள் சற்றே பின்தங்கியிருந்தனர். அவர்களின் உளநலம் மற்றும் கல்விக்கான முயற்சிகளை முன்னெடுத்தேன்.

காஞ்சிபுரத்தில் ஒரகடத்தை அடுத்துள்ள பண்ருட்டியில் பணிமாறுதல் பெற்றபோது மீண்டும் சவாலானதொரு பள்ளியென்பதை உணர்ந்தேன். மாணவர்கள் மிகுந்த ஒழுங்கின்மையுடன் இருந்தனர். மாணவர்கள் பற்றிய தனிவிவரக் குறிப்பேடு தயாரித்து தனிப்பட்ட குடும்பச் சிக்கல்களிலும் இயன்ற அளவு தீர்வுகள் சொல்லி, பெற்றோரையும் சந்தித்து பல மாணவர்களை மீட்டு படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டினேன். பெரும்பாலும் 100% தேர்ச்சியை அளித்திருக்கிறேன். அனைத்துப் பள்ளிகளிலுமே கல்வி கற்பிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து விளையாட்டு, கலை, வாசிப்பு, போட்டிகள் ஆகியவற்றில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தி அவர்கள் திறமைகளை அறியச் செய்வேன். மாணவர்களை மேம்படுத்துவதே என் குறிக்கோள்’’ என்கிறார்.

தன்னலம் கருதாத சேவைகளைத் தொடர்ந்த ஆசிரியை பரமேசுவரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபோதும் தன் பணிகள் தொடர்ந்ததைப் பற்றி கூறும்போது, ‘‘வேலூரில் உள்ள மேலப்புலம் என்ற கிராமத்துக்குத் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றபோது அங்கு வகுப்பறைகளில் மின்விசிறிகளோ மின்விளக்குகளோ இல்லை. அந்த அடிப்படை வசதிகூட இல்லாததைக் கண்டு மனம் வருந்தி நண்பர்களிடம் பேசி மின்விசிறி வாங்கிப் பொருத்தினேன். என்னுடன் பயின்ற நண்பர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள் என எல்லோரிடமிருந்தும் பள்ளி வேலைகளுக்கு உதவி பெற்று, உட்கட்டமைப்பையும் கற்பித்தல் உபகரணங்களையும் அமைத்தேன்.

பள்ளியை மேம்படுத்தும் முயற்சியில் ஊர்மக்களின் நன்மதிப்பைப் பெற்று, கம்பி வேலி போடுவது, பிரிண்டர், நூலகத்துக்கான புத்தகங்கள் பெற்று நூலகம் உருவாக்குதல் ஆகிய பணிகளை இந்த ஆண்டிலேயே பெருமுயற்சி செய்து தொடங்கியுள்ளேன். பள்ளிக்கு அருகிலேயே வீடெடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறேன். உடன் பணியாற்றும் ஆசிரியர்களுடன் நல்லுறவு பேணி அவர்களையும் அனுபவத்தால் அரவணைத்து அவர்களுடைய ஒத்துழைப்புடன் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது மேலப்புலம் பள்ளி’’ என்றார் தலைமை ஆசிரியர் பரமேசுவரி. - தோ.திருத்துவராஜ்