பிரபலங்கள் பாவனை செய்கிறார்கள்!



உடல்மொழி

நடை உடை-2


புத்தகங்கள் போலத் தெளிவாகப் புரியவைப்பவை முகங்கள்.  அவை, ஒரு வகையில் புத்தகங்களைவிட நம்பத்தக்கவை.  அவற்றைக் குறைந்த நேரத்தில் படித்துவிடலாம். தவறாகப் புரிந்துகொள்ளும் இடம் குறைவு.  - ஃப்ரெடெரிக் ஸாண்டர்ஸ் (நடை மொழி)

‘சகமனிதனின் மனதை அறிந்துகொள்ள வேண்டும், அவன் மனதில் இருக்கும் எண்ணங்களையும் ஆசைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று நினைத்ததுதான், பரிணாம வளர்ச்சியில் மனிதன் வளர்த்துக்கொண்ட ஆசைகளிலேயே மிகவும் சுவாரஸ்யமானது.

ரகசியங்கள் எப்போதும் ரம்யமானவை. சக மனிதர்கள் குறித்தான ரகசியங்களை அறிந்துகொள்ளத்தான் ஒவ்வொருவரும் ஆசைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அடுத்த நபர் என்ன நினைக்கிறார்? அவர் மனதின் எண்ண ஓட்டங்கள் எப்படியிருக்கிறது? என்பதை அறிந்துகொள்வதில்தான் ஒவ்வொரு மனிதரும் ஆர்வமாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

அடுத்தவர் மனதிலிருக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ள பெரிய திறமையோ, மாய மந்திரங்களோ தேவையில்லை. அது மிகவும் எளிமையானது என்றே உளவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆம், ஒரு சூழ்நிலையில் பார்க்கும் பார்வையையும், கேட்கும் விஷயங்களையும் ஒப்பிட்டு ஒன்று திரட்டி சிந்தனையாலும், யூகங்களாலும் தெளிவான முடிவுகளை வரையறை செய்துகொண்டால் போதுமானது என்கிறார்கள். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் பார்ப்பதையும், நினைப்பதையும் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். தெளிவான வரையறைகளை செய்துகொள்ளாததால் குழப்பங்கள் தான் மிஞ்சுகின்றன.

உலகெங்குமுள்ள மக்கள் பிரபலமான மனிதர்களின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் உடல்மொழியை (நம்ம ஊரில் சினிமா பிரபலங்கள்) ரசிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த உடலியல் வெளிப்பாட்டிற்குள் ஒரு உளவியல் இருக்கிறது. நட்சத்திரங்களாக மின்னும் பிரபலங்கள் தாங்கள் நம்பாத விஷயங்களையும், கடைப்பிடிக்காத தன்மைகளையும் பொது வெளியில், பலர் முன்னிலையில் நம்புவதுபோல் பாவனை செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நிஜத்தில் அவர்கள் வேறாகவும், பொது வெளியில் வெளிப்படும் பிம்பத்தில் வேறு ஒருவராகவும் இருக்கிறார்கள்.

இதையே தங்களது இமேஜாக காட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பிரபலம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் மரியாதை செலுத்தாதவராக, எழுந்து கூட நிற்க விரும்பாதவராக இருப்பார். மமதையால், தான் பெரிய பிரபலம் என்ற அகங்காரத்தால் அப்படி இருப்பார். அதுவே பொது வெளியில் வரும்போது அனைவரையும் பார்த்து பெரிதாக சிரிப்பார், கை அசைப்பார், கரம் குவிப்பார். (உன்னிப்பாய் பார்த்தால் அவர் யாரையும் குறிப்பிட்டு கரம் குவிக்கவில்லை என்பதும், கை குலுக்கவில்லை என்பதும் தெரியும்). தலைக்கு மேல் கை உயர்த்தி கும்பிட்ட வண்ணம் இருக்கும் அந்த பிரபலத்தின் உடலியல் ரீதியான வெளிப்பாடு அவரின் நிஜ உணர்வை மறைப்பதிலும், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துவதிலும், பொய் வார்த்தைகளை உச்சரிப்பதிலுமே கவனம் செலுத்தியவாறு இருக்கும். மக்கள் அந்த வெளிப்பாட்டு பிம்பத்தைத்தான் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.

‘பொது வெளியில் பிரபலங்களின் உடலியல் ரீதியான நடிப்பு சொதப்பலாகி தவறிப்போய் மாட்டிக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே மக்கள் அவர்களை மிக உன்னிப்பாக ரசிக்கிறார்கள்’ என்கிறார் உளவியல் அறிஞர் ஹர்சீன். அப்படி எதிர்பார்ப்புடனான விருப்பமே மக்களை பிரபலத்தின்மீது கவனத்தை ஆழமானதாக மாற்றுகிறது, அதுவே தொடர்ந்து அவர்களை தீவிரமான ரசிகர்களாகவும் திருப்புகிறது. உணர்ச்சி வசப்படுதல்களாலும், கடுகடுப்பான முக வெளிப்பாடுகளினாலும், கோப ஆத்திரப் பேச்சுக்களினாலும், கைகலப்பு தள்ளுமுள்ளுகளினாலும், சில்லியான கமென்டுகளாலும், முட்டாள்தனமான செயல்பாடுகளினாலும்…. என்று பிரபலங்கள் சறுக்கி விழ பல சறுக்கல்கள் இருக்கவே செய்கின்றன. அதில் ஏதோ ஒரு சறுக்கலில் சிக்கி விழுந்துவிடும்போது மக்கள் அதை ரசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

 இதில் வேதனையான நிஜம் என்னவென்றால் ‘அந்த’ சறுக்கலின்போது வெளிப்படுவதுதான் அந்தப் பிரபலத்தின் உண்மையான உடல் மொழி. அந்த இடத்தில்தான் அவரது மன உணர்ச்சிகளை எவ்வித ஒப்பனையுமின்றி அவரது உடல் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கும். ஒரு மனிதன் பொய் சொல்லும்போது அவனது உதடுகள் தன்னிச்சையாக மெல்ல அசைந்தபடியிருக்கும். சிலருக்கு கை, கால்கள் நடுங்கும்.உடல் மொழியின் வழியாக அந்தத் துடிப்பான அசைவுகளின் அறிகுறி அடுத்தவருக்கு பேச்சில் கலந்திருப்பது பொய் என்ற உண்மையைத் தெளிவாகச் சொல்லிவிடும்.

ஒருவரின் உடல்மொழி மிகச் சரியாக வெளிப்படும்போது அவரது முகம் பிரகாசமடைவதை கண்கூடாகப் பார்க்கலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லப்பட்டது இதற்காகவும் இருக்கலாம். முகத்திற்கு மகுடமாக கண் இருப்பது போலத்தான், மொத்த உடலுக்கும் முகம் மகுடமாக இருக்கிறது. மனதிற்குள் தங்கள் வாழ்வில் சக மனிதர்களை எந்த அளவுக்கு கவனிக்கிறார்கள் என்பதை பரிசோதிப்பதற்காகவே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Just for laugh Gags-ல் ஒரு பகுதியை நிகழ்த்தினார்கள். சாலை ஒன்றின்  மறுபுறம் ஓர் அழகான பெண் கைகளை வீசி அசைத்து உதவி என்று கேட்டபடி இருப்பாள். அதை கவனிப்பவர் உதவுவதற்காக சாலையைக் கடப்பார்.

வாகனங்கள் குறுக்கிடும். ஒருவழியாய் சாலையைக் கடந்து பெண்மணி அருகில் சென்று பார்க்கும்போது அங்கே ஒரு வயதான மூதாட்டி நின்றுகொண்டிருப்பார். வாகனம் குறுக்கிட்ட இடைவெளியில் ஆள்மாற்றியிருப்பார்கள். உதவ வந்தவர்களில் பெண்கள் பாதி சாலையைக் கடக்கும்போதே கவனித்து குழப்பத்தோடு நிற்பார்கள். அதுவே ஆண்கள் சாலையைக் கடந்து அருகில் சென்றபின் புரிந்து அசடுவழிய சிரிப்பார்கள். இது நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் நிஜத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
இதிலும் பெண்களைவிட ஆண்கள் இருமடங்கு உடல் மொழியை மட்டுமில்லாது, புதிய முகம் கொண்ட ஒருவர் புதிய தோற்றத்துடன் வெளிப்படுவதை கவனிப்பதே இல்லை என்கிறது ஆய்வு.

உடல் மொழியை படிப்பதிலும், புரிந்துகொள்வதிலும் பயிற்சியும், திறமையும் இல்லாவிட்டால் பெரும்பாலான விஷயங்களை கவனிக்கத் தவறிவிடுவோம்.
கவனிக்கத்தவறியவைகளை இனியேனும் கவனிப்போம்…

உடை வழி - புடவை

புடவை - ஆசிய கண்டத்தில இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெண்களால் விரும்பி அணியப்படும் முக்கியமான ஆடை. இது. செவ்வக வடிவத்தில் இருக்கும் உடை. பெண்கள் இதை தங்கள் உடல் மீது கலாசார பாணியில் சுற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் புடவைக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது.  புடவை சராசரியாக 4 - 5 மீட்டர் நீளம் இருக்கும். சில புடவைகள் 9  மீட்டர்கள் வரை இருப்பதுண்டு. (இதற்கு கஜ அளவுகளும் உண்டு).

புடவை உடலைச் சுற்றிக் கட்டப்படுகின்ற தைக்கப்படாத ஆடை என்பதும், அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே இருந்தாலும், இந்தியாவில் இதன் தொடக்கம் பற்றிய சான்றுகளுக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கின்றன. புடவை உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை என்பதற்கான முதல் குறிப்பு கி.மு. 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்தில் (கி.மு. 200-50)  பெண்கள் உடல் முழுவதும் புடவையை சுற்றியவாறு இருந்தார்கள் என்பதை சுடு மண்கலத்தில் வடிக்கப்பட்ட பெண் சிற்பங்கள் காட்டுகின்றன.

 இந்திய காந்தாரநாகரிகத்தில் (கி.மு. 50  கி.பி. 300) பல்வேறுபட்ட வகைகளில் புடவை அணியப்பட்ட முறை காணப்படுகிறது. கி.பி. 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு மகாராஷ்ட்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண்தெய்வங்களும், அரசப் பெண்களும் புடவை அணிந்துள்ளதைப் பார்க்கலாம். தமிழகத்திலும் பல்வேறு ஆலயங்களில் பெண்கள் புடவையை அணிந்திருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடை புடவைதான்.

புடவையானது இந்தியாவில் - குஜராத்தி பாணி/ கச் பாணி / திராவிடப் பாணி/ குடகு பாணி / கோண்டு பாணி/இனக்குழுப் பாணிகள் (Tribal Styles) என்று பல கலாசார பாணிகளில் உடுத்தப்படுகிறது. இந்தியாவின் சம்பல்பூரி புடவை, பைதானி புடவை, காஞ்சிபுரம் பட்டுப்புடவை, பனாரஸ்  புடவைகள் உலகப்பிரசித்திபெற்றவை. புடவைகள் பல நிறங்களிலும்  பல வடிவங்களிலும் பருத்தி, பட்டு செயற்கை நூல் இழைகளால் நெய்யப்படுகின்றன. இந்தியாவில் முகலாயர்களின் வருகையிலிருந்தே தைக்கப்பட்ட ஆடைகளின்
செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. அவர்கள் காலத்தில் தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள், விலை உயர்ந்த உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தியும் புடவைகள் நெய்யப்பட்டது.

புடவை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது. புடவை இலக்கிய ரீதியிலும் மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மகாபாரதத்தில் - திரௌபதியின் புடவை துகிலுரிதல் நிகழ்வே மிகப்பெரிய சான்று.

- தொடரும்