தவிக்கவிடப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள்!



சர்ச்சை

தனியார் பள்ளிகள்தான் தரமான கல்வியைக் கொடுக்க முடியும், அங்கு படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதற்காக கேட்ட பணத்தைக் கொட்டிக் கொடுத்து குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
தரமான பள்ளிகள் என்றும் உலகத் தரமான கல்வி தரப்படுகிறது என்றும் நம்பப்படுகின்ற தனியார் பள்ளிகளில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2017-18 ஆம் கல்வியாண்டில் +1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் கொடுத்து தனியார் பள்ளிகள் வெளியேற்றியுள்ளது என்பதுதான் அது.

கடந்த ஆண்டு +1 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையையும் நடப்புக் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையையும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் ஒப்பீடு செய்து பார்த்ததில் இம்முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக தனியார் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான சு.மூர்த்தி நம்மிடம் பல கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.   

‘‘கடந்த 2018 மார்ச் மாதம் முதன்முதலாக நடத்தப்பட்ட +1 பொதுத் தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவர்கள் எழுதினர். தேர்ச்சி விகிதம் 91.3% ஆக இருந்தது. +1 வகுப்பில் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து +2 வகுப்புக்குச் செல்லவும்; தோல்வியடைந்த பாடங்களை மட்டும் ஜூன் மாத சிறப்புத் தேர்வு அல்லது +2 வகுப்பு இறுதித் தேர்வின்போது சேர்த்து எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாணவர்களை +1 வகுப்பில் தேர்ச்சி அடையவைக்க முயற்சி செய்யாமல் தனியார் பள்ளிகள் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளது கல்வி உரிமை மீறல் குற்றமாகும். தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் செய்வதை இதுவரை கல்வித்துறை கண்டுகொள்ளாமல் விட்டதே இதற்குக் காரணம்.  

இப்போதாவது தனியார் பள்ளிகள் செய்த தவறை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் கேள்வி கேட்டுள்ளது வரவேற்கவேண்டிய செயல். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில், ‘இந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்கம் அளிப்பதோடு, நீக்கப்பட்ட மாணவர்களை பள்ளி மாணவர்களாகவே +2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்’  என்றும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது’’ என்கிறார் மூர்த்தி.  

 இந்தப் பிரச்னையின் பின்னணியையும் அவர் விவரித்தபோது, ‘‘கடந்த கல்வி ஆண்டில்தான் +1 வகுப்புக்கு முதன்முதலாகப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கு முன்னர் +2 வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வுகள் நடந்த நிலையில் தனியார் பள்ளிகள் +1 பாடங்களை நடத்தாமல் +2 பாடங்களை மட்டும் இரண்டாண்டுகள் குருட்டு மனப்பாடம் செய்யவைத்து +2 தேர்வில் 100% தேர்ச்சி காட்டும் வேலையை செய்துவந்தன. வரும் கல்வியாண்டிலும் 100% தேர்ச்சி காட்டவில்லை என்றால் பள்ளிகளின் மதிப்புப் போய்விடும், மாணவர் சேர்க்கை குறைந்துவிடும், வருமானம் பாதிக்கப்படும் என்பதால் +1 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை நீக்கியுள்ளன.’’ என்று நிதர்சனமான உண்மையை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக +2 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகள் நடத்தியதை கல்வித்துறை கண்டுகொள்ளாமல் விட்டதைப்போல இந்தத் தவறையும் கல்வித்துறை கண்டுகொள்ளாது என்பதால் இதைச் செய்திருக்கிறார்கள்.

+1 பாடங்களை நடத்தாததால் பொறியியல் பட்டப் படிப்பில் பெரும்பாலான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக அண்ணா பல்கலைக்கழகம் போன்றவை வலியுறுத்தியதால் +1 வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. +1 பொதுத் தேர்வு முறையால் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி காட்டுவதில் சிக்கல் வரும் என்பதால் இதை எதிர்த்தார்கள். தனியார் பள்ளிகளின் எதிர்ப்பின் விளைவாகவே தற்போது +1 பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிப் படிப்புக்குத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பும் உயர்கல்வியின் தரம் குறையவே வழிவகுக்கும். ‘அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலையை உருவாக்கும்.’’ ‘‘கடந்த ஆண்டில் கேரள மாநிலத்தின் +2 தேர்ச்சி விகிதம் 83.75% என்றும், ஆந்திர மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 73.33% என்றும் உள்ளது.

ஆனால், அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் மற்றும் ஐ.ஐ.டி போன்ற நுழைவுத் தேர்வுகளில் இம்மாநில மாணவர்களை விட தமிழக மாணவர்கள் மிகக் குறைவானவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். தமிழக மாணவர்களை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக +2 தேர்வில் தேர்ச்சி அடைய வைப்பதால் மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

நாட்டில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பெருமைப்படுகிறோம்.  நாடு தழுவிய அளவில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் 23.6 ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் சதவீதம் 48.9 ஆக உள்ளது.

ஆனால், உயர்கல்வியை முடிப்பவர்களில் 53 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பற்றவர்கள், 5 விழுக்காட்டினரே பணியாற்றும் தொழிற்திறமை வாய்ந்தவர்கள் என்று நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. ஆங்கில வழி குருட்டு மனப்பாட மதிப்பெண் கல்வியினாலும் தனியார் வணிகர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட கல்வியினாலும் விளைந்த மிகப் பெரிய கேடு இது’’ என்று வேதனையை வெளிப்படுத்தினார் மூர்த்தி.

தனியார் பள்ளிகள் தவறான வழிமுறைகள் மூலம் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் காட்டுவதை இனியும் அனுமதித்தால் மாணவர்கள் இப்படித்தான் தவிக்கும் நிலை உருவாகும்.

  - தோ.திருத்துவராஜ்