அரசு வேலைக்கு தகுதியற்ற முதுநிலைப் பட்டப்படிப்புகள் !



நம் நாட்டில் எம்.காம். மற்றும் எம்.எஸ்சி. கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதற்கு இணையானவை என்ற பெயரில் 33 புதிய பட்ட மேற்படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன; பல்கலைக்கழகங்களும் அனுமதி அளித்தன. ஆனால், மத்திய அரசின் பல்கலை மானியக்குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.மற்றும் தேசிய ஆர்க்கிடெக்ட் கவுன்சில் ஆகியன இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன. இதையடுத்து அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை தமிழக உயர்கல்வித் துறை தயாரித்துள்ளது.

இந்தப் பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இப்புதிய படிப்புகளை முடித்தவர்கள் இப்போது படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது.

தகுதியற்ற படிப்புகள்  

பெரியார் பல்கலை: எம்.காம். - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய இரண்டு படிப்புகள், எம்.காம். படிப்புக்கு இணை கிடையாது.
அழகப்பா பல்கலை: எம்.எஸ்சி. ‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ படிப்பு எம்.எஸ்சி. கணினி அறிவியலுக்கு இணை இல்லை.
சென்னை பல்கலை: எம்.எஸ்சி., இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.
பாரதியார் பல்கலை: எம்.எஃப்.டி. என்ற ‘மாஸ்டர் ஆஃப் ஃபாரின் டிரேட்’ மற்றும்  எம்.காம். ‘இன்டர்நேஷனல் வணிகம்’ ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை. எம்.எஸ்சி. படிப்பில் பல்வேறு பாடப் பிரிவுகளான கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாஃப்ட்வேர் சிஸ்டம், சாஃப்ட்வேர் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் எஞ்சினியரிங், இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., என எட்டு படிப்புகள், எம்.எஸ்சி.கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

பாரதிதாசன் பல்கலை: எம்.எஸ். இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் டெக்னாலஜி, எம்.எஸ்சி. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ- காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாஃப்ட்வேர் டெக்னாலஜி எம்.எஸ். சாஃப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ. என ஒன்பது படிப்புகள் எம்.எஸ்சி.கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை.

அண்ணாமலை பல்கலை:  எம்.எஸ்சி-யில் சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி தொலைநிலை கல்வியில் எம்.சி.ஏ. படிப்பு கிரெடிட் மதிப்பெண் முறையிலான எம்.சி.ஏ. ஆகிய ஐந்து படிப்புகள் எம்.எஸ்சி. கணினி அறிவியலுக்கு இணை இல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: எம்.எஸ்சி-யில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ, ஆகிய மூன்று படிப்புகள் எம்.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்: எம்.ஏ. மேம்பாட்டு மொழியியல் படிப்பு எம்.ஏ. தமிழுக்கு இணையானது அல்ல முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ. சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இதுகுறித்து கல்வியாளர்களின் கருத்துகளைப் பார்ப்போம்…

நெடுஞ்செழியன் தாமோதரன், கல்வியாளர் திடீரென இந்த இந்த படிப்புகளெல்லாம் அரசாங்க வேலைக்கு தகுதியில்லாதது என அறிவிப்பது என்பது மிகவும் தவறான முன்னுதாரணம். இந்த உயர்கல்வி பட்டப்படிப்புகளை அதிகம்பேர் படித்து பட்டம் பெற்றுள்ளனர். நிறைய பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் ஏன் இவ்வாறு பண்ணுகிறோம், இந்த படிப்புகளை ஏன் இதற்கு முன்பு அறிமுகப்படுத்தினோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்று திடீரென இந்தப் படிப்புகளெல்லாம் தகுதியில்லாதவை என அறிவித்தால் ஒரு பாடத்தை எடுத்துப் படிக்கும் மாணவருக்கு அந்தப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் படித்துவிட்டுப் போவோருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. வெளிநாடுகளில் போய் வேலை பார்ப்பவர்களிடம் இதுபோன்ற ஓர் அரசாணை உள்ளது என அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டால் அது எண்ணற்றவர்களின் வாழ்வாதாரத்தை அல்லவா பாதிக்கும். ஒரு திட்டமிடல் இல்லாமல் அறிவிப்பது என்பது இங்குள்ள கல்வித்துறையினர் சரியாகச் செயல்படுகிறார்களா, திட்டமிட்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, இந்தப் படிப்புகளுக்கு இதுதான் தகுதி என்பதை முன்கூட்டியே அரசாங்கம் அறிவித்துவிட வேண்டும், அதை விட்டுவிட்டு படித்து முடித்தபிறகு இவ்வாறு அரசாணை வெளியிடுவது என்பது மாணவர்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். எஸ்.கார்த்திக், மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட G.No 72 அரசாணையின்படி  33 வகையான பட்டப்படிப்புகள் படிக்க உகந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடம் 2018 பல்கலைக்கழக மானியக் குழு உள்ளிட்ட விவரங்கள் இவை செல்லாது என்று அறிவித்துள்ளன.

உதாரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அரசுப் பணிகளுக்கு தகுதியுள்ள படிப்புகளுக்கு மட்டும்தான் B.Ed., படிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகள் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது செல்லாது என யுஜிசி அறிவித்திருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த அறிவிப்பால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் கஷ்டப்பட்டு படித்த கணினி ஆசிரியர்களின் கனவுகள் பறிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என தமிழக அரசு இன்றுவரையில் கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வேதனையளிக்கிறது. அடுத்தவர்களுக்குத் தான் இந்த நிலை என்றால் எம்.சி.ஏ. எம்.எஸ்சி. உள்ளிட்ட பாடப்பிரிவில் படித்தவர்களுக்கும் இதே நிலைதான். இந்த 33 முதுநிலைப் பாடப்பிரிவுகள் முடித்த பட்டதாரிகள் மட்டுமின்றி எம்.எஸ்சி., கணினி அறிவியல், B.Ed. பட்டதாரிகளின் அசல் சான்றிதழ்களையும் தமிழக அரசு பெற்றுக்கொண்டு படித்த இடத்திலிருந்து இன்று வரையில் அனைத்து கல்விக் கட்டண செலவுகளையும் முழு இழப்பீட்டுத் தொகையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்

- தோ.திருத்துவராஜ்

வர்த்தகம் மற்றும் வேளாண் மேலாண்மை முதுகலைப் படிப்புகள்!

மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட்(IIPM) பெங்களூருவில் இயங்கிவருகிறது. அமெரிக்கா மற்றும்  ஐரோப்பியாவின் வர்த்தக மற்றும் நிர்வாக மேலாண்மை கல்வி அமைப்புகளில் உறுப்பினராக உள்ளதோடு சர்வதேச தரத்திலான முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகிறது இக்கல்விநிறுவனம்.

நுகர்பொருள் மேலாண்மை, பயிரிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை சார்ந்த முதுகலைப் படிப்புகளை வழங்கும் இக்கல்விநிறுவனத்தில் இரண்டு வருட முதுகலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கின்றது.

வழங்கப்படும் படிப்புகள் :

Post Graduate Diploma in Management : Agri - Bussiness and Plantation Management (PGDM - ABPM)  மற்றும் Post Graduate Diploma in Management : Food Processing and Bussiness Management (PGDM - FBPM).  

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் வேளாண் மற்றும் அது சார்ந்த அறிவியல் துறைகளில் இளங்கலைப் பட்டப் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அக்ரி பிசினஸ் படிப்பை தேர்ந்தெடுக்க தகுதியுடையவர்கள். ஃபுட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ் / நியூட்ரிசன், டெய்ரி, ஃபிஷ்ஷரிஸ் அல்லது தோட்டக்கலைத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஃபுட் பிராசஸிங் படிப்பை தேர்ந்தெடுக்க தகுதியுடையவர்கள். மேலும் எஸ்.சி / எஸ்டி மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது. அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.iipmb.edu.in என்ற இணையதளம் மூலம்  பொதுப்பிரிவினர் ரூ. 1000 மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2019. மேலும் விவரங்களுக்கு www.iipmb.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா