விளையாட்டுகளில் சாதனை படைத்த காவல் உதவி ஆய்வாளர்!



சாதனை

நெல்லைப் பகுதியில் அப்துல்லா என்ற நபர் சண்டியர் குரூப் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு தொடங்கி அதன் மூலம் சுற்றுவட்டார ரவுடிகளை ஒருங்கிணைத்து கூலிப்படையாக செயல்பட்டுவந்தார்.
பாதுகாப்பு ரோந்துப்பணியில் பிடிபட்ட ரவுடி ஒருவரின் செல்போன் மூலமாக ரவுடிகளின் வாட்ஸ்அப் குழுவிற்குள் புகுந்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ‘‘கோவில்பட்டிக்குள் ரவுடியிஸத்தில் ஈடுபடுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள்’’ என ரவுடிகளை அச்சுறுத்தும் வகையில் குரலை பதிவிட்டார். அதனை கேட்ட ரவுடிகள் ஒவ்வொருவராக வாட்ஸ்அப் குழுவிலிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானதோடு இவரின் வீரதீரச் செயல்களும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகவும் பொதுமக்கள், வியாபாரிகளின் மதிப்புக்குரியவராகவும் உள்ள இசக்கிராஜாவிடம் பேசியபோது நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்ட சுவையான தகவல்களைப் பார்ப்போம்…

‘‘தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள பாறைக்குட்டம் என்ற சிறிய கிராமம்தான் எனது சொந்த ஊர். எங்கள் ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடி எஸ்.கைலாசபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. கே.ஜி.எம். மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புவரை படித்தேன். தினமும் ரயிலில் சென்று வருவது ஒரு சுகமான அனுபவம்.

பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளிப்படிப்பை முடித்ததும் நாகர்கோவிலில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ (EEE) முடித்தேன். அங்குதான் எனக்கான விளையாட்டின் மீதான ஆர்வத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்லலாம். ஈட்டி எறிதல் பயிற்சி பெற்றேன்.

விளையாட்டுக்கான ஒதுக்கீட்டில் (Sports Quato) சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். (வள்ளியம்மை) கல்லூரியில் பி.இ., எம்.டெக். படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது தேசிய அளவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன்.

இப்போதும் எஞ்சினியரிங் மாணவர்களில் டைஸ் (Ties - Tamilnadu Inter Engineering Sports) மற்றும் அண்ணா பல்கலையிலும் (Anna University, Ms University) என்னுடைய ரெக்கார்டு முறியடிக்கப்படாமல் உள்ளது. ஈட்டி எறிதலில் 60 மீட்டர் தூரம் எறிந்து வெற்றிபெற்றதை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. இந்த சாதனை நிகழ்த்தி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அடுத்து நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தேன். பின்னர், எம்.பி.ஏ., போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பதற்காக எம்.ஏ., கிரிமினாலஜி போன்ற படிப்புகளை ஒரு குறிக்கோளோடு படித்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. 2016ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் வேலை கிடைத்தது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்தான் (Sports Quota) இந்த வேலை கிடைத்தது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

‘‘படிப்பு, வேலைவாய்ப்பு எல்லாவற்றிலும் முன்னேறிவருவதற்கு காரணமாக இருந்தது  எனக்குள் இருந்த விளையாட்டின் மீதான ஆர்வம்தான். இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் எப்படி வந்தது என்றால், எல்லோரையும் போலத்தான்… எனக்கு சிறு வயதாக இருக்கும்போது எங்கள் ஊருக்கு அடிக்கடி போலீஸார் வருவர், அவர்களைப் பார்க்கும்போது நாமும் ஒருநாள் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை உருவானது.

அதற்காகவே உடலை உறுதிப்படுத்தும் விளையாட்டான கபடி மற்றும் கிராமத்து விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினேன். இந்த நிலையில், தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் குற்றவாளிகளோடு போலீசார் சண்டையிடும் காட்சிகள் வரும், அதனால் சண்டைப்பயிற்சி எடுத்தால்தான் நல்லதொரு போலீசாக வரமுடியுமோ என்ற எண்ணத்தில் சண்டைப்பயிற்சி வீட்டிலேயே எடுத்துக்கொண்டேன்.

அதன் பிறகு கோச்சர் மூலம் முறையாக கிக்பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டேன். நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் போட்டியில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய ஜூனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அதாவது 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (Below 16 years) சில்வர் மற்றும் கோல்டு மெடல்களை வென்றேன். இதுவரையில் கிக்பாக்ஸிங் போட்டியில் தேசிய அளவில் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளேன். இதில் 15 தங்கப்பதக்கங்கள், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளேன்.

இந்திய கிக்பாக்ஸிங் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 81 கிலோ எடைப்பிரிவில்  தொடர்ந்து 6 முறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ளேன். அடுத்து சர்வதேச பதக்கம் என்று பார்த்தால், வேர்ல்டு கப் 2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்றது, அதில் 3வது இடம் பிடித்தேன். வேர்ல்டு பதக்கம் பெற்றதில் இரண்டாவது இந்தியன், முதல் தமிழன் என்ற பெருமையைப் பெற்றேன்.

அடுத்து 2014ஆம் ஆண்டு டர்க்கியில் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றதில் கலந்துகொண்டேன். இதில், 10வது இடம் பிடித்தேன். மலேசியாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றேன். இந்தியாவில் நடந்த ஆசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றேன். சர்வதேச போட்டிகளில் மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளேன். இது தவிர பைட் ஈவென்ட்களில் மல்யுத்தம், MMA, Wushu, SILAT, Judo, டேக்குவாண்டோ உள்ளிட்ட பல போட்டிகளில் மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளேன்.

எங்கள் வீட்டில் நான் ஒரே பையன். அதனால், எனது அப்பா இசக்கித்துரை பாண்டியன், அம்மா மூக்கம்மாள் ஆகியோர் அதிக அக்கறையுடனும், பாசம் காட்டியும் வளர்த்து வந்தனர். விளையாடுவதற்கு பலம் வேண்டும் என்பதற்காக கேப்பைக்கூழ், கம்பங்கூழ் மற்றும் நவதானியங்களிலான உணவுகளைத்தான் எனது அம்மா அதிகம் செய்து கொடுப்பார். நான் அசைவமும் விரும்பி சாப்பிடுவேன். கிராமத்து கஞ்சியும், கூழும்தான் எனது பலம்’’ என்று விளையாட்டு சாதனைகளைப் பட்டியலிட்ட இசக்கி ராஜா குடும்பச் சூழலையும் எதிர்கால
திட்டத்தையும் கூறினார்.

‘‘எனது மனைவி சண்முகசுந்தரியும் கோவில்பட்டியில் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்கிறார். பணியில் சேர்ந்த பின்னர் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என முயற்சித்துவருகிறேன். வெற்றி பெறுவேன் என நம்பிக்கை உள்ளது.

மாணவர்களும், இளைஞர்களும் தவறான பாதையில் செல்லாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டினால் அவர்களுக்கான கல்வியும் வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது. மாநிலத்திற்காக,  நாட்டுக்காக நாமும் ஒரு சாதனையை நிகழ்த்துகிறோம் என்ற உணர்வும் கிடைக்கும். விளையாட்டு என்பது சாதாரணமானது அல்ல, அதில் மிக முக்கியமானது ஒழுக்கம் மற்றும் துணிச்சல் அவசியம். எந்தவித தீய பழக்கவழக்கங்களுக்கும் ஆளாகிவிடக்கூடாது.

அதேபோல் தைரியம் வேண்டும். பயம் இருக்கக் கூடாது.. அப்படியிருந்தால் நாம் நினைத்ததை சாதித்துவிடலாம்’’ என்று தன்னம்பிக்கையூட்டும்படியாக தன்னைப் பற்றிய விவரங்களையும் விளையாட்டின் அவசியத்தையும் சொல்லிமுடித்தார் காவல்துறை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா.

    - தோ.திருத்துவராஜ்