தமிழ் மாணவர்களின் கல்வித்தரம்!-ஒரு பார்வை



சர்ச்சை

பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறித்த ஆண்டறிக்கை.

ஆண்டுதோறும் Pratham என்ற தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்படும் ASER எனப்படும் (Annual Status of Education Report 2017) அறிக்கை கடந்த 16.01.2018 செவ்வாயன்று புதுடெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவத்துடன் அனைத்துத் தரப்பினராலும் உற்றுநோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் 20 மாநிலங்களுக்கு ஒவ்வொரு மாவட்டம் மாதிரியாகவும் (Sample) மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 4 பெரிய மாநிலங்களுக்குத் தலா 2 மாவட்டங்கள் மாதிரிகளாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்புகளில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் உட்படுத்தப்பட்டனர். ஆனால், 2017 கணக்கெடுப்பில் 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் மட்டும் உட்படுத்தப்பட்டுள்ளனர். மனமாற்றமும் உடல்ரீதியான மாற்றங்களும் ஏற்படும் பதின்ம வயது மாணவ - மாணவிகளைப் பற்றி ஆய்வு செய்தது வரவேற்புக்குரியது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதுரை மாவட்டம் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 60 கிராமங்களில் உள்ள 925 குடியிருப்புகளைச் சேர்ந்த 1044 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதிக கிராமப் பகுதிகளைக் கொண்ட மதுரை மாவட்டத்தை ஆய்வுக்கு மாதிரியாக எடுத்திருப்பது ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் முகமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆய்வில் ஆறுதல் தரும் முடிவுகள்:

*14 முதல் 16 வயதுள்ள மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை 94 சதவீதம் பேர் முறையான கல்விமுறையில் பயின்று வருகின்றார்கள்.

*வெறும் 12 சதவீதம் பேர் மட்டுமே வீட்டு வேலை அல்லாத பிற வேலைகளைச் செய்துவருகிறார்கள். இது குழந்தைக் தொழிலாளர்கள் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.

*95 சதவீதம் பேருக்கு செல்போன் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.

*63 சதவீதம் பேருக்குக் கணினி பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.

*60 சதவீதம் பேருக்கு வங்கியில் பணப்பரிமாற்றம் செய்யத் தெரிகிறது.

*41 சதவீதம் பேருக்கு ஏ.டி.எம். பயன்பாடு தெரிந்திருக்கிறது.

*88 சதவீதம் பேருக்குப் பணம் எண்ணத் தெரிந்திருக்கிறது.

*94 சதவீதம் பேருக்கு நீளம் தொடர்பான சுலபமான கணக்குகள் போடத் தெரிகிறது.

*ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டில் உள்ள வழிகாட்டுதல்களை 72 சதவீதம் பேர் புரிந்துகொள்கின்றனர்.

இந்த ஆய்வில் வருத்தம் தரும் முடிவுகள்:

*வகுத்தல் கழித்தல் போன்ற அடிப்படைக் கணக்குகள் 50 சதவீதம் பேருக்குக் குறைவாக உள்ளவர்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.

*47 சதவீதம் பேருக்குத்தான் நேரம் கணக்கிடுதல் தெரிந்திருக்கிறது.

*இந்தியாவின் தலைநகரம் என்ன என்பது 70 சதவீதம் பேருக்குத்தான் தெரிந்திருக்கிறது.

*இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டைச் சுட்டிக்காண்பிக்க 59 சதவீதம் பேருக்குத்தான் தெரிந்திருக்கிறது.

*தள்ளுபடி போக விலை கண்டுபிடிக்க 37 சதவீதம் பேருக்குத்தான் தெரிந்திருக்கிறது.

*வெறும் 4 சதவீதம் மாணவர்களே தொழிற்கல்விப் பயிற்சி பெறு கின்றனர்.

*60 சதவீதம் பேருக்கு இணைய பயன்பாடு தெரியவில்லை.

இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யக் கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை வட்டாரச் செயலாளருமான கி.பாலசண்முகம் தரும் ஆலோசனைகள், ‘‘அடிப்படைக் கணக்குகளைக் கற்றுத்தரும் தொடக்கப்பள்ளிகளில் பெரும்பான்மை ஈராசிரியர் பள்ளிகளே. மாணவர்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.

ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் தீவிரம் காட்டுவதற்கு ஏதுவாகப் பள்ளிகளில் பராமரிக்கும் பதிவேடுகளின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும். 45 பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டியுள்ள நிலையில் தொடக்கப்பள்ளிகளில் எழுத்தர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படுவது கிடையாது.

அதிகாரிகள் ஆய்வின்போது பதிவேடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் கவனம் அவை மீதே உள்ளது.மேலும் Emis, Dise , Profile , Scholarship போன்ற ஆன்லைனில் பதிவேற்றும் பணிகளிலேயே ஆசிரியர்களின் நேரம் வீணடிக்கப்படுவதால் கற்பித்தல் நேரம் குறைகிறது. இப்பிரச்னைகளைச் சரிசெய்வதன் மூலமே கல்விநிலையை உயர்த்த முடியும் ’’ என்கிறார்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த ஆய்வு முடிவுகளைப் பற்றி சில நாட்கள் அலசிவிட்டு மறந்து போவதே வாடிக்கையாக உள்ளது. அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை எப்படிக் களைவது என்பதில் தமிழக அரசின் கல்வித்துறை முனைப்புக்காட்ட வேண்டும். அப்போதுதான் கல்வித்தரத்தில் மாற்றம் காணமுடியும்.

- தோ.திருத்துவராஜ்