சிகரம் தொடச் செய்யும்!



வாசகர் கடிதம்

பள்ளிப் பருவத்தில் வெறும் கல்வியை மட்டும் கற்காமல் சமூகத்தை உற்றுநோக்கி அதில் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணும் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றிய கட்டுரை அற்புதம். இச்சிறு வயதிலேயே பொறுப்புகளை ஏற்று சமூக பிரச்னைகளை உள்வாங்கி அவற்றுக்கான தீர்வை நோக்கி நகரும் இதுபோன்ற செயல்பாடுகளால்தான் நாளைய சமுதாயம் சீரும் சிறப்புமாகச் செம்மையாக வளரும். இதுபோன்ற அழுத்தமான கட்டுரையை வெளியிட்டு கல்வி-வேலை வழிகாட்டி தனிச்சிறப்பை நிலைநாட்டுகிறது. வாழ்த்துகள்.
-கே.பார்த்திபன், கும்பகோணம்.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்திய அளவில் மற்ற மாணவர்களை விடவும் தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது ‘அப்துல்கலாம் விருது’ வென்ற மாணவர்கள் பற்றிய கட்டுரை. மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்கிவருவது சிறப்பு.
-ஏ. நாகரத்தினம், சேலம்.

எந்தச் செய்தியையும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து சரியான நேரத்தில் வெளியிடுவதே கல்வி-வேலை வழிகாட்டியின் முத்திரை. அவ்வகையில் காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பட்டியலிடுவதில் தொடங்கி முக்கிய தேதிகள், உடல் தகுதி, தேர்வு முறை எனத் தொடர்ந்து காவல் பணிக்குத் தன்னை எப்படி தயார் செய்வது என ஆலோசனைகளைக் கூறி தெளிவான நடையில் விளக்கியிருக்கும் விதம் பாராட்டுகளுக்குரியது. பணி சிறக்க வாழ்த்துகள்.
-ஆர்.தேவநாதன், குமுளி.

யோகாவில் அமெரிக்கப் பெண்ணின் சாதனையை முறியடித்த விருதுநகர் மாணவியின் சாதனையைப் பாராட்டி அவரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைப்பது நம் மக்களின் கடமை. இச்சாதனைக்காக அவர் தன்னை தயார் செய்த விதம், ஐந்து வருட உழைப்பின் பலனாக குவிந்திருக்கும் விருதுகள் மற்றும் உலக சாதனைகள் பற்றியெல்லாம் விவரித்தது அந்த மாணவிக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருந்தது. வளரும் சாதனையாளர்களை சிகரம் தொடச்செய்யும் ஏணிப்படியாக அமையும் கல்வி-வேலை வழிகாட்டியின் கட்டுரை என்பது திண்ணம்.
-எஸ்.சைந்தவி, பாபநாசம்.