பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணி!



வாய்ப்பு

8301 பேருக்கு வாய்ப்பு!


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தன் கிளைகளைக்கொண்ட மிகப்பழைமையான வங்கியாகும். இவ்வங்கி தனது செயல்பாடுகளை கணினி மயமாக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்துவருகிறது. மேலும் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்துவருகிறது.

இத்தனை சிறப்புகளைக்கொண்ட இந்த வங்கி ஆண்டின் தொடக்கத்திலேயே வேலைதேடும் பட்டதாரி இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக 8,301 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் தமிழகத்துக்கு 346 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் Backlog காலியிடங்கள் ஆக 52 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Junior Associate - Customer Support and Sales என்ற பெயரில் இவை நிரப்பப்பட உள்ளன.

எதிர்காலத்தில் பணியில் சேர்ந்த பின் சேல்ஸ் போன்ற பணிகளைப் பார்க்க மாட்டோம் என ஊழியர்கள் கூறக் கூடாது என்பதற்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.வயதுவரம்பு: வயதுவரம்பைப் பொறுத்தவரை 1.1.2018 தேதியின் அடிப்படையில் 20 வயதுக்கு மேலும் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பணிக்காகத் தேர்வு செய்யப்படுவீர்கள். இவற்றில் தகுதி பெறுபவர்கள் மொழித்தேர்வு ஒன்றிலும் தகுதி பெற வேண்டும்.

பிரிலிமினரி தேர்வு: English Language, Numerical Ability, Reasoning Ability ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் நடத்தப் படவுள்ள இந்தத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 100. மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தலா 20 நிமிடங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. மெயின் தேர்வு: General/Financial Awareness, General English, Quantitative Aptitude, Reasoning Ability and Computer Aptitude ஆகிய நான்கு பகுதிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும். தலா 50 கேள்விகள் இடம்பெறும். இப்பகுதிகளுக்கான கால அளவு முறையே 35, 35, 45, 45 நிமிடங்களாகும். மொத்தம் 160 நிமிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாகக் கால வரையறை உண்டு. தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் விதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர் கள் www.sbi.co.in/careers or http://bank.sbi/careers   ஆகிய ஆன்லைன் லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ. 600ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.100ம் செலுத்த வேண்டும்.

தேர்வு எப்போது: பிரிலிமினரி தேர்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்தப்படும். மெயின் தேர்வு உத்தேசமாக மே 12ல் நடத்தப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.2.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- எம்.நாகமணி