மாணவிகள் பறக்கவிட்ட செயற்கைக்கோள்!சாதனை

மேலூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் செயற்கைகோள் ஏவுகணை தயாரித்து அதனை உயரே பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளனர்.சமீபத்தில் மேலூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியின் ஆசிரியரும், தொழில்நுட்ப மன்றப் பொறுப்பாளருமான சூரியகுமார் தலைமையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மான்ஷி, ஹரிபிரியா, சாருமதி, அட்சயா, சிபாயா, துளசிமணி, மதுமிதா, பரிதாபானு, கே.ஸ்வேதா, பி.ஸ்வேதா ஆகிய 10 மாணவிகள் அடங்கிய குழு மாதிரி செயற்கைக்கோள் ஏவுகணை (ராக்கெட்) ஒன்றை வடிவமைத்திருந்தனர்.

இந்த செயற்கைகோள் ஏவுகணையைப் பறக்கவிடும் நிகழ்வை மாணவிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக 30 நிமிட கவுண்ட்டவுன் காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து செயற்கைகோள் ஏவுகணையை (ராக்கெட்டை) உயரே பறக்கவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ‘குட்டி ராக்கெட்டில்’ திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு சிறிய ஏவுதளத்தில் பொருத்தப்பட்டது. சரியாக 11 மணிக்கு மாணவிகள் தயாரித்த ராக்கெட் கொஞ்ச தூரம் உயரே பறந்து சென்று கீழே விழுந்தது. கூடியிருந்த ஆசிரியர்களும், மாணவிகளும் கைகட்டி ஆரவாரம் செய்தனர்.

மாதிரி செயற்கைக் கோள் குறித்து ஆசிரியரும், ஏவுகணை செயல்பாட்டின் வழிகாட்டி ஆசிரியருமான சூரியகுமார் கூறும்போது, ‘‘இரண்டு வருடங்களுக்கு முன், மாதிரி செயற்கைக்கோள் ஏவுகணை (டம்மி மாடல்) ஒன்றைத் தயாரித்து மாணவிகளின் பார்வைக்காக வைத்திருந்தோம்.

அதைத் தொடர்ந்து உண்மையிலேயே பறந்து செல்லும் வகையில் (ஒர்க்கிங் மாடல்) ஏவுகணை ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் மாணவிகளிடம் எழுந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாக ஒரு அடி உயரத்தில் இந்த குட்டி ஏவுகணையைத் தயாரித்தோம்.

பொதுவாக விண்ணில் ஏவப்படும் ஏவுகணைகளில் திரவமாக்கப்பட்ட ஆக்ஸிடைஸர்கள் (திரவ ஆக்சிஜன், நைட்ரஜன் டெட்ராக்சைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவை) பயன்படுத்தப்படும். நாங்கள் சிட்ரிக் அமிலத்தையும், சமையல் சோடாவையும் தண்ணீர் கலந்து திரவமாக்கி எரிபொருளாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறோம்.

ஒரு ராக்கெட்டை எந்த இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில் மேல்நோக்கி பறக்கச் செய்ய முடியும் என்ற அறிவியல் அறிவை இந்த நிகழ்வின் மூலம் மாணவிகள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.மாணவிகள் ‘‘எதிர்காலத்தில் இதைவிட பெரிதாக, இன்னும் உயரமாக அதிக தூரத்தை கடந்துசெல்லும் ராக்கெட்டை தயாரிப்போம்’’ என்று உற்சாகமாக கூறினார்கள்.செயற்கைக்கோள் ஏவுகணை தயாரித்த மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி பாராட்டினார்.

- சூர்யா