அடையாளம் காட்டும் அற்புத முயற்சி!வாசகர் கடிதம்

அனைவருக்குமான அடிப்படை உணர்வான பசியின் குரூரத்தை யாரும் அனுபவிக்கக்கூடாது எனும் நோக்கத்தோடும், திறமை இருந்தும் படிக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடும் செயல்பட்டுவரும் தீபம் அறக்கட்டளை குறித்த வள்ளலாரின் வரிகளோடு தொடங்கிய  கட்டூரைக்கு ஒரு கிரேட் சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.
- எம்.கண்ணன், பெருந்துறை.

நவீன யுகத்தின் வெளிப்பாடாக தொழிற்துறை அசுர வளர்ச்சி பெற்று நாளுக்குநாள் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இச்சூழலில் தொழிற்துறையில் மிகச்சிறந்து விளங்கு வதற்குத் தொழிற்துறை குறித்த அப்டேட் அவசியமாகிறது. அவ்வகையில் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சிகளைப் பற்றிய கட்டூரை மிகத் தெளிவாகவும், பயனுள்ள விதமாகவும் இருந்தது வரவேற்கத் தக்கது.
- ஆர். புகழேந்தி, திருச்சி.
 
பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டும்தான் ஆசிரியரியரின் பணியா? இல்லை,  குழந்தைகள் விருப்பத்துடன் படிக்கும்படியான ஆரோக்கியமான சூழலையும் சேர்த்து உருவாக்குவதே ஒரு ஆசிரியரின் கடமை என நடைமுறையில் நிரூபித்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியரின் முயற்சி அருமை. முகநூல் பதிவாலேயே பள்ளியை மேம்படுத்திய ஆசிரியர் ஆரோக்கியராஜ் பற்றிய கட்டுரை நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டும் அற்புத முயற்சி!
- இரா.காவ்யா, மதுரை.
 
தேசியமயமாக்கப்பட்ட கிராம வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான, விளக்கமான கட்டுரை, வேலை ரெடி! என்ற பல்வேறு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் படித்துவிட்டு வேலை தேடிக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அவசியமானவை. கல்விச் செய்திகள், வேலை வாய்ப்புச் செய்திகள் என பல்வேறு தகவல்களின் பெட்டகமாக அமைந்து கல்வி-வேலை வழிகாட்டி சிறந்த வழிகாட்டியாக மிளிர்கிறது.
- ஏ.செல்லப்பாண்டி, ராஜபாளையம்.