நிரந்தர வேலை வழங்கும் ஆஸ்திரேலியா!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


இன்று கல்வி வியாபாரமாக ஆகிவிட்ட நிலையில் நம் நாட்டில் உயர்கல்வி படிக்க ஆகும் செலவைப் பார்த்தால் நடுத்தர மக்களே கூட வெளிநாடு சென்று படிக்கலாம். எஞ்சினியரிங், மருத்துவம், ஐடி என்று குறிப்பிட்ட சில பாடத்திட்டங்களையே தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பல லட்சங்களைக் கட்டணமாகச் செலுத்துகிறார்கள்.

இங்குச் செலவாகும் இதே கட்டணத்தில் இங்குள்ள அடிப்படைக் கட்டமைப்பை விட ஒரு படி அதிகமான கட்டமைப்பில் பாடத்திட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

வெளிநாடுகளுக்குச் சென்று படித்து தன் எதிர்காலத்தை மாற்றியமைத்துக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் இந்தப் பகுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் உள்ள ஆய்வுப் படிப்பு கள், ஆராய்ச்சிப் படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றியெல்லாம் பார்த்துவருகிறோம். இனி ஆஸ்திரேலியாவில் உள்ள பாடத்திட்டங்கள், நம் மாணவர்களை ஈர்க்கும் துறைகள் ஆகியவற்றை எல்லாம் பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை உயர்கல்வி பயில்வதற்கான சிறந்த இடம். காரணம், பெரும்பாலான நாடுகளில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட எல்லா விதத்திலும் சிறந்து முழுமையான வளர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்கள் முதல் உள்கட்டமைப்பு வரை வளர்ச்சியடைந்துள்ளன. சர்வதேச அளவில் அதிகமான மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் US, UK பல்கலைக்கழகங்களுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் சர்வதேச அளவில் மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் படிக்கிறார்கள். அதில் 42,000 பேர் இந்திய மாணவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சீனாவின் மாணவர்கள். USக்கும் UKக்கும் அடுத்ததாக நம் மாணவர்களை ஆஸ்திரேலியா ஈர்க்கக் காரணம், வேலைவாய்ப்புதான். அதுமட்டுமல்ல இங்கு எந்தப் பாடத்திட்டத்தையும் எடுத்துப் படிக்கலாம்.

படித்து முடித்ததும் Work Visa வாங்கலாம். ஒரு மாணவர் இங்கு எந்தப் படிப்பை முடிக்கிறாரோ அதே துறையைத் தேர்வுசெய்து வேலை செய்தால் Work Visa வாங்கலாம். அதாவது, மெக்கானிக் துறையில் படித்துவிட்டு அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றால், Work Visa வாங்கலாம். அப்படி வாங்கி ஒரு வருடம் வேலை செய்தால் பிறகு PR என்று சொல்லப்படும் Permanent Recidence Visa வாங்கலாம். பின்பு நிரந்தரமாக அங்கே வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டமுடியும்.

வேலைவாய்ப்புகளைச் சுலபமாக வழங்கும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் சில பாடத்திட்டம் Business Managementதான். இதற்குள் பல பிரிவுகள் உள்ளன. Banking and Finance, Management Information Systems, Accounting, International Business, Human Resources, Marketing,Business Management and Administration போன்ற பாடத்திட்டங்கள்.

இது மட்டுமல்லாமல் MBA பாடத்திட்டத்தையும் தேர்வு செய்கிறார்கள். நம் மாணவர்கள் MBA எடுக்க காரணம் சிக்கலான சூழ்நிலைகளில் ஒரு நிறுவனம் எப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது என்பது போன்ற நுணுக்கங்கள் கற்றுத்தருவதால்தான். இதில் 18 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை கால அளவில் கற்றுத்தரப்படுகின்றது. இதன் மூலம் பல பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அங்கேயே கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு அடுத்ததாக நம் மாணவர்கள் தேர்வு செய்வது Information Technology. இந்தத் துறையைத்தான் பெரும்பாலான இளைஞர்கள் இங்கும் சரி, அங்கும் சரி தேர்வு செய்யும் பாடத்திட்டம். தகவல் தொழில்நுட்பத்தில் அங்குத் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவப்பூர்வமான பாடத்திட்டத்தையும் வைத்துள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துக்கு அடுத்த இடமாகத்தான் எஞ்சினியரிங் பாடத்தை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

பொதுவாக இந்திய மாணவர்களின் தேர்வில் எஞ்சினியரிங்குக்கு இடமுண்டு. எஞ்சினியரிங் பாடத்தில் ஆஸ்திரேலியாவில் உட்பிரிவுகளாக உள்ள பாடத்திட்டங்கள் Computer Science Engineering, Electrical Engineering, Mechanical Engineering, Biomedical Engineering, Civil Engineering, Chemical Engineering, Environmental Engineering,Industrial Engineering,Metallurgical Engineering,Aerospace Engineering ஆகியவைதான்.

இந்தியாவில் விவசாயத்துக்கு முக்கிய இடம் கொடுத்து சேரும் மாணவர்கள் குறைவு என்றாலும் ஆஸ்திரேலியாவில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் விவசாயம் சார்ந்த Agricultural Science பாடத்தைத் தேர்வு செய்கிறார்கள். காரணம், அங்கு இந்த பாடத்திட்டத்தைப் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது நிறையவே உள்ளன.

நிறைய தொழிற்சாலைகள் இருந்தாலும் விவசாயத்துக்கான முக்கியத்துவம் அதிகமாக உள்ள இடம் ஆஸ்திரேலியா என்றுதான் சொல்லவேண்டும். அரசே விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் செழுமையாக உள்ள நாடு ஆஸ்திரேலியா. 
 இதைப் போல இன்னும் சில பாடத்திட்டங்கள் உள்ளன அவற்றைப்பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.                           

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்