சீருடைப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகுங்க!



வாய்ப்பு

15,711 பேருக்கு வாய்ப்பு


காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 15,711 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.சமீப காலங்களில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு களில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதில்தான் காலிப் பணியிடங்கள் அதிகம்.

சமூகத்தின் அவலங்களைக் கண்டு, நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பொங்கி எழுந்து போலீஸாக வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இது அற்புதமான வாய்ப்பு. எனவே, இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், கூடுதல் கல்வித்தகுதிக்காக, வயது வரம்பில் தளர்வோ, பிற சலுகையோ கிடையாது.பத்தாம் வகுப்புப் படிப்பைத் தமிழ்மொழி வழியாகப் படித்திருந்தால் அவர்கள் தமிழ் மொழிக்கான ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறமுடியும்.

1.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். 24 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 26 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

இப்பணியிடங்களுக்கான ஆள்தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் எழுத்துத் தேர்வு  80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 50 மதிப்பெண்களுக்குப் பொதுஅறிவுப் பகுதியில் இருந்தும், 30 மதிப்பெண்களுக்குக் காவல்துறை உளவியல் பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும்.

80 கேள்விகளுமே ‘அப்ஜெக்டிவ் டைப்’வகையில் இருக்கும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 28, இருந்தபோதும், காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் 1:5 என்ற விகிதத்தில் இரண்டாவது கட்ட உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

ஆண் விண்ணப்பதாரர்களில் 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 நிமிடங்களில் முடிப்பவர்கள் மட்டுமே அடுத்தகட்ட உடல்திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களில் 400 மீட்டர் ஓட்டத்தினை 2 நிமிடம் 30 விநாடிகளில் முடிப்பவர்கள் அடுத்தகட்ட உடல்திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மூன்றாவது கட்டமான உடல்திறன் போட்டி என்பது, ஆண்களுக்குக் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர்( அல்லது ) 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு, நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் (அல்லது) குண்டு எறிதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள் இதைத் தவிர, என்.சி.சி.,  என்.எஸ்.எஸ். மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள். இந்த வரைமுறைப்படி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?    
                                                
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட (முக்கியமான) அஞ்சல் அலுவலகங்களில் ரூ.30ஐ செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். சரியாகத் தெளிவாகப் பூர்த்தி செய்த பின், அஞ்சல் அலுவலகத்தில் தேர்வுக் கட்டணம் ரூ.135ஐ செலுத்த வேண்டும். அதற்காகத் தரும் ஒப்புகைச் சீட்டை விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அலுவலகத்தில் விற்பனையாகும் OMR விண்ணப்பங்களை அனைத்து வகை சான்றிதழ்களின் (கல்வி, சாதிச்சான்று, தமிழ் வழிக்கல்வி, ஆதரவற்ற விதவை, திருநங்கை (எனில்) அடையாள அட்டை நகல், என்.சி.சி.,  என்.எஸ்.எஸ், விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் நகல்களையும்) இணைத்து அனுப்ப வேண்டும்.

தயாராகும் முறை

மூன்று கட்டத் தேர்வுகளுமே முக்கியமானவை. எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவதுடன் உடற்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) 167 செ.மீ. இருக்க வேண்டும்.

பெண்கள் மூன்றாம் பாலினம் என்றால் 159 செ.மீ. இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பெண்கள் எனில் 157 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சடக்கிய நிலையில் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.

ஆக எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு இரண்டுக்கும் சேர்ந்தே தயாராக வேண்டும். ஐந்தாவது மாதம்தான் தேர்வு என்பதால் இன்னும் நாட்கள் இருக்கின்றன தயாராகுங்கள் தேர்வில் அசத்துங்கள்.

முக்கிய தேதிகள்

தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கடந்த 23.1.2017 காலை 10 மணி முதல் வழங்கப் பட்டுவருகின்றன. முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்திற்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 22.2.2017. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 21.5.2017.தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!

டாக்டர் ஆதலையூர் சூரியகுமார்

M.A., M.A., M.Phil., M.Ed., Ph.D.