+2 வணிகவியல் பாடத்தில் சென்டம் வாங்க சூப்பர் டிப்ஸ்



+2 தேர்வு டிப்ஸ்

+2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சிறிதுக்காலமே உள்ளதால் படிக்கும் நேரத்தை வெகுவாக அதிகரிக்க வேண்டும். இந்தச் சிறிது காலத்திற்குப் படிப்பைத் தவிர வேறெதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டாம். அதேபோல் படிப்பதற்குத் தடையாக உங்களிடம் என்னென்ன செயல்பாடுகள் உள்ளது என்பதைக் கண்டறிந்து அவற்றை உடனடியாகக் களைய வேண்டும்.

“வணிகவியல் பாடம் என்பது கருத்தியல் சார்ந்த பாடம் என்றும், பக்கம் பக்கமாக எழுதினால் மட்டுமே மதிப்பெண் பெறமுடியும் என்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு எண்ணம் உள்ளது. அவ்வாறில்லாமல் பாடத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு திட்டமிட்டு படித்துத் தேர்வு எழுதினால் நிச்சயமாக வணிகவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறமுடியும்.” என்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் V.எழிலன். இனி அவர் தரும் டிப்ஸைப் பார்ப்போம்…

வணிகவியல் பாடத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஒன்று, இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றுத் தங்களது 200/200 என்ற வாய்ப்பை நூலிழையில் தவறவிடுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் ஒரு மதிப்பெண் வினாக்கள்.

இந்தப் பாடத்தில் கேட்கப் படும். மொத்தம் 40 ஒரு மதிப்பெண் வினாக்களில் 10% வினாக்கள் புத்தகத்தின் உள்ளேயிருந்து கேட்கப்படுகின்றன(வினா எண் 1-40). இதில் 20 வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க என்றும், 20 வினாக்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக என்றும் கேட்கப்படும்.

இதில் 90% வினாக்கள் புத்தகத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும்  வினாக்களிலிருந்தும் 10% வினாக்கள் புத்தகத்தின் உள்ளேயிருந்தும் கேட்கப்படும். முழுமையான புரிதல், கடந்தகால வினாத்தாள்கள் பயிற்சி ஆகியவற்றின் மூலம் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெறமுடியும்.

இது 200/200 கனவை நனவாக்கும் மிக முக்கியமான பகுதி. எனவே, இந்தப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். புத்தகம் முழுவதையும் புரிந்து
முக்கியமானவற்றை அடிக்கோடிட்டுப் படிக்க வேண்டும்.

நான்கு மதிப்பெண் வினாக்கள் 15 வினாக்கள் கேட்கப்படும்(வினா எண்: 41-55). இதில் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும். இதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 2 வினாக்கள் வீதமும், 2வது பாடத்திலிருந்து (தனியாள் வணிகம்) மட்டும் 1 வினா கேட்கப்படும். இந்தப் பகுதியில் திரும்பத் திரும்ப கேட்கப்படும் வினாக்கள் அதிகம்.

அவற்றைக் கடந்த வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதன் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.எட்டு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் 8 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் ஐந்துக்கு விடையளித்தால் போதும். இதில் இரண்டாம் பாடத்தைத் தவிர (தனியாள் வணிகம்) மீதமுள்ள பாடங்களிலிருந்து ஒவ்வொரு பாடத்திலும் ஒரு வினா கேட்கப்படும். 4ஆம் பாடத்திலிருந்து மட்டும் (நிறுமங்கள்-I) 2 வினாக்கள் கேட்கப்படும்(வினா எண்: 56-63).

பாடம் 1, 3, 4, 7 (அமைப்பு, கூட்டாண்மை, நிறுமங்கள்-I, கூட்டுறவு சங்கம்) ஆகிய பாடங்களில் உள்ள வினாக்களை மட்டும் முழுமையாகப் படித்தால் இந்தப் பகுதியில் 5 வினாக்களுக்கு விடையளித்துவிட முடியும்.

இருபது மதிப்பெண் வினாக்கள் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஒரு வினா கேட்கப்படும். இதில் அல்லது என்ற அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும்(வினா எண்: 64-67). முதல் மூன்று பாடங்களில் உள்ள 20 மதிப்பெண் வினாக்களைப் படித்தால் முதல் மூன்று வினாக்களுக்கு (வினா எண்: 64, 65, 66) விடையளித்துவிட முடியும். பாடம் 4, 5, 7 ஆகிய பாடங்களின் வினாக்களைப் படித்தால் 67 ஆம் எண் வினாவிற்கு விடையளித்துவிட முடியும்.

இருபது மதிப்பெண் வினாக்களில் கண்டிப்பாகக் குறைந்தபட்சம் ஒரு வினா வேறுபாடு சார்ந்த வினா கேட்கப்படும். எனவே, குறைந்த எண்ணிக்கையிலேயே வேறுபாட்டு வினாக்கள் புத்தகத்தில் உள்ளன. அவற்றையெல்லாம் படித்துவிட்டால் எளிமையாகவும், விரைவாகவும் ஒரு 20 மதிப்பெண் வினாவிற்கு விடையளித்துவிட முடியும்.

வணிகவியல் பாடத்தைப் பொறுத்தவரையில் முழுமையான புரிதல்திறன், சரியான திட்டமிடல், உண்மையான ஆர்வம், ஆகியவை இருந்தால் குறைவாகப் படித்து நிறைவான மதிப்பெண்களைப் பெறமுடியும். எனவே, சரியானவற்றைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் 200/200 நிச்சயம்.

V.எழிலன் M.Com., M.Phil., B.Ed.,