நல்ல விஷயம் 4



பார்க்கவேண்டிய இடம் :சுருளி அருவி

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திலுள்ள உத்தமப்பாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுருளி அருவி. இது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். 18 ஆம் நூற்றாண்டு பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலிக்கும் சுருளி அருவியில் ஜூன் - அக்டோபர் மாதங்கள் சீஸன். மேகமலையில் ஊற்றெடுக்கும் அருவி, குட்டைகளை நிரப்பிவிட்டு 40 அடி உயரத்திலிருந்து இரு அடுக்குகளாக விழுந்து பார்ப்பவர் உள்ளத்தை மட்டுமல்ல  உடலையும் குளிரச் செய்கிறது.

அரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சுருளியாண்டவர் கோயிலில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் திருவிழா  அங்கு வரும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நீர்வீழ்ச்சியிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள கோடிலிங்கம் லிங்க பர்வதவர்த்தினி கோயில், கைலாய குகை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காந்தமாய் வசீகரிக்கின்றன. சுருளி அருவி பற்றிய மேலும் தகவல்களுக்கு https://ta.wikipedia.org/wiki/சுருளி_அருவி

 அறியவேண்டிய மனிதர்: சர். சி.வி. ராமன்

இந்தியாவுக்குப் புகழ்சேர்த்த அறிவியல் அறிஞர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சர்.சி.வி.ராமன் என்று அழைக்கப்பட்ட சர்.சந்திரசேகர வெங்கட்ராமன். இவர் 7.11. 1888 ஆம் ஆண்டு திருச்சியி்னருகே உள்ள திருவானைக்காவலில் பிறந்தவர். மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்.  சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார்.

 முதுநிலையிலும் சூரியனாகப் பிரகாசித்து புகழ் பெற்றார். பொருளின் ஊடே செல்லும் ஒளியலைகளின் அலைநீள மாற்றத்தைக் கணித்து 1930 ஆம் ஆண்டு நோபல்பரிசு வென்ற இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆனார். கொல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளியலை ஆராய்ச்சி செய்தவர் பின், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் தளர்வுறாத 15 ஆண்டுகள் பணியை மேற்கொண்டார்.

1954 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற இவர், கரண்ட் சயின்ஸ் எனும் ஆய்விதழின் ஆசிரியராகப் பணியாற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்தார். ராமன் ஆய்வுக்கழக இயக்குநராக இறுதிவரையில் பணியாற்றிய இம்மாமனிதர் 1970 நவம்பர் 21 அன்று இயற்கை எய்தினார். இவரைப்பற்றி மேலும் அறிய: https://ta.wikipedia.org/wiki/ச._வெ._  இராமன்

டிக்கவேண்டிய புத்தகம் :சேரி ரெண்டுபட்டால் - மா. அமரேசன்

அரசின் சலுகைகள் பல பெற்றும் பிற சமூகங்களைப் போல தலித் மக்களின் நிலை அரசியல், சமூகம், வணிகம் உள்ளிட்டவற்றில் ஏன் உயரவில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக அலசும் நூல் இது. பிரச்னைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்து விளக்கிப் புரியவைப்பது ஆசிரியரின் எழுத்தாளுமைக்குச் சரியான சான்று.

தலித் மக்களின் சுய குணநலன்கள் அவர்களின் தொழில், அரசியல் வாழ்வுக்கு எப்படித் தடைகல்லாகின்றன என விவரிக்கும் பகுதியில் வெளிப்படைத்தன்மை சற்று அதிகம். தலித் மக்களைப் பிரிவினை செய்து லாபம் பார்க்கும் சக்திகளை அடையாளம் காட்டி, தலித்களின் எதிர்காலத்தை விளக்கி, தலித் மக்களின் வாழ்வைக் கண்ணாடி போல அடையாளம் காட்டும் சமூக வாழ்வியல் நூல் இது.  (வெளியீடு: அறம் பதிப்பகம், 16/18 மூர்த்திங்கர் தெரு, 2வது சந்து, வியாசர்பாடி, சென்னை-39. விலை ரூ. 40)

வாசிக்க வேண்டிய வலைத்தளம் :www.notey.com/about.html

டெக்னாலஜி, அறிவியல், கலாசாரம், பயணம் என 13 க்கும் மேலான தலைப்பில் கொட்டிக்கிடக்கும் பல்வேறு பயனுள்ள விஷயங்களின் கூடுதுறையே நோட்டி இணையதளம். தன் சூப்பர் அல்காரிதம் மூலம் உலகெங்குமுள்ள வலைப்பூக்களிலிருந்தும், தளங்களிலிருந்தும் செய்திகளைத் தேர்ந்து நமக்களிப்பது சிறப்பு.

அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளின் முக்கிய உணவுகள், சுற்றுலாத்தலங்கள், நினைவுச் சின்னங்கள், புதிய பொருட்களின் அறிமுகம் என நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து நேர்த்தியோடு வெளியிடுவதால் பல்வேறு செய்திகளையும் வேகமாக அறியலாம். ஹிட் வைரலான விஷயங்களின் லிஸ்ட் தருவதால், இத்தளத்தை க்ளிக் செய்தால்  உலகமே சுற்றி வந்தது போல்தான். இதில் தேவையான பக்கத்தை உருவாக்கிக்கொள்வதோடு, இணையதளக் குழுவில் நீங்களும் இணையலாம்.