விசா பெற கல்விச் சான்றிதழ்கள் மிக அவசியம்!வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்


ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த கட்டமைப்புகளைக் கொண்ட தரமான உயர்கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களைக் கொண்ட போலந்தைப் பற்றி இதுவரை பல தகவல்களைப் பார்த்துவிட்டோம்.

இங்கு உள்ள டாப் 10 பல்கலைக்கழகம் வரிசைபடுத்தப்பட்டு கடந்த சில இதழ்களில் நாம் பார்த்துவந்தோம். இங்குச் சென்று படிக்க விசாவுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பார்த்துவருகிறோம். பாஸ்போர்ட்டை பொறுத்தவரை அது அனைவருக்கும் பொதுவான நடைமுறைதான். அதன்படி நாம் முன்பாகவே பாஸ்போர்ட் எடுத்து வைத்துவிட வேண்டும்.

போலந்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய சான்றிதழ்கள் எவை என்பதை அவசியம் நினைவில்கொள்ள வேண்டும். ஒன்று தவறினாலும் நீங்கள் வாய்ப்பை இழந்துவிடுவீர்கள். ஆகவே, முதலில் 10ம் வகுப்பு, +2ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முதல்கொண்டு அனைத்துச் சான்றிதழ்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதுநிலைப் பட்டம் படிக்கச் செல்பவர்களாக இருந்தால் இளநிலைப் பட்டம், பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்றவற்றை தயார்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். விசா பெறுவதற்கான அனைத்துத் தகவல்களையும் http://www.mumbai.mfa.gov.pl/en/consular_information/visa/ என்ற இணையதளத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தென்மண்டல மாணவர்கள் போலந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க மும்பை அலுவலகத்தைதான் அணுகவேண்டும். இதுபற்றிக் கடந்த இதழில் விளக்கமாகச் சொல்லியிருந்தோம்.

விசாவின் அடுத்தகட்டமாக போலந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து அட்மிஷன் கடிதம் வரும். அப்படி வரும்போது சில சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதில் குறிப்பாக விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது நம்முடைய பாஸ்போர்ட்டை தென்மண்டல போலந்துக்கான விசா அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்.

அதேபோல் போலந்து சென்று தங்கி படிக்கத் தேவையான அளவு பொருளாதார வசதிக்கான வங்கிக் கணக்கைக் காட்ட வேண்டும். மேலும் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது பெற்றோர் ஒரு அஃபிடெவிட் கொடுக்க வேண்டும்.

அதாவது, அதில் ‘என்னுடைய மகன் அங்கு படிக்கத்தான் செல்கிறான், வேறு எந்த காரணத்துக்காகவும் செல்லவில்லை. அவன் தங்கிப் படிப்பதைத் தவிர வேறு செயல்களில் ஈடுபடமாட்டான்’ என்று உறுதி செய்யும் விதமாக இந்த அஃபிடெவிட்டில் கொடுக்க வேண்டும். அதேபோல விசாவுக்கு விண்ணப்பிக்கும்போதே போலந்து செல்வதற்கான ஒரு டிக்கட்டை பிளாக் செய்து வைத்து அதற்கான பிரின்ட்அவுட்டை இணைக்க வேண்டும்.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் சான்றிதழில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் அப்போஸ்டல் வாங்க வேண்டும்.

அப்போஸ்டல் என்பது இளநிலை படிக்க செல்பவர்கள் +2 சான்றிதழ், முதுகலை படிக்கச் செல்பவர்கள் இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் போன்றவற்றில் நம் நாட்டு அரசாங்கத்தின் உத்திரவாத முத்திரை வாங்கித் தரவேண்டும். இதற்கான அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதற்காகவே ஒரு தனித் துறையே டெல்லியில் உள்ளது.

இந்த நடைமுறை எல்லா நாடுகளுக்கும் அவசியமானது. இவற்றுடன் தவறாமல் மோட்டி வேஷன் லெட்டர் இணைக்க வேண்டும். மோட்டிவேஷன் லெட்டர் பற்றி நாம் முன்பே விளக்கமாகப் பார்த்துவிட்டோம்.

நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை இணைக்க வேண்டும். இவ்வளவு விஷயங்களையும் இணைத்தும், நேரடியாகத் தென்மண்டல அலுவலகமான மும்பை அலுவலகத்துக்கு நேரில் போகும்போதும் சமர்ப்பித்தால்தான் நமக்கு விசா கிடைக்கும் போலந்தில் சென்று படிக்க அனுமதி வழங்கப்படும். இனி அடுத்த இதழில் இருந்து ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களைப் பற்றிப் பார்ப்போம்…

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்
வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்