ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க NCHM JEE-2017 நுழைவுத்தேர்வு



நுழைவுத்தேர்வு

விண்ணப்பிக்க தயாராகுங்க!


விருந்தோம்பல் தொடர்பான கல்வியைத் தர (Hospitality Education) 1982-ல் அமைக்கப்பட்ட நிறுவனம், 1984 முதல் மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழே, சுய தன்னாட்சிக் கல்வி அமைப்பாக மாற்றம் பெற்றது. அப்படி மாற்றம் பெற்ற தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக் குழு (National Council for Hotel Management and Catering Technology) 21 மத்திய அரசின் உணவக மேலாண்மைக்கான கல்வி நிறுவனங்களையும், 21 மாநில அரசின் நிறுவனங்களையும், 15 தனியார் கல்வி நிறுவனங்களையும், 7 ஃபுட் கிராஃபிட் நிறுவனங்களையும் நிர்வகிக்கிறது.

இந்நிறுவனமும் இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் (Indra Gandhi National Open University - IGNOU) இணைந்து நடத்தும் B.Sc. ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன் படிப்பிற்கான NCHM JEE 2017 நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

NCHMCT- நிறுவனங்கள் வழங்கும் படிப்புகள்முதுநிலைப் படிப்புகள்: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி ஃபுட் சர்வீசஸ், எம்.எஸ்.சி. ஹாஸ்பிட்டாலிட்டி அட்மினிஸ்ட்ரேசன்.

இளநிலைப் படிப்புகள்: ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன், ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன் ஜெனரிக், ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்பெசலிசேசன்.பட்டயப் படிப்புகள்: டிப்ளமோ இன் ஃபுட் புரொடக்சன், டிப்ளமோ இன் ஃபுட் அண்டு பெவரேஜ் சர்வீசஸ், டிப்ளமோ இன் பேக்கரி அண்டு கன்பக்சனரி, டிப்ளமோ இன் ஃபிரன்ட் ஆபிஸ் ஆப்பரசேன், டிப்ளமோ இன் ஹவுஸ் கீப்பிங்.

சான்றிதழ் படிப்புகள் (Craftsmanship Certificate Courses): ஃபுட் புரடொக்சன் & பேட்டிசெரி, ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் படிப்புகளும்பெங்களூர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, காந்திநகர், கோவா, குர்தாஸ்பூர், கவுஹாத்தி, குவாலியர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நியூடெல்லி, ஷில்லாங், ஷிம்லா, நகர் ஆகிய இடங்களில் B.Sc. - ஹாஸ்பிட்டாலிட்டி - ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன் ஜெனரிக் மற்றும் M.Sc. ஹாஸ்பிட்டாலிட்டி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மாநில அரசு நிறுவனங்கள்பத்தின்டா (Bathinda), சண்டிகார், டேராடூன், பரிதாபாத், காங்டாக், ஹமீர்பூர், ஜோத்பூர், கோழிக்கோடு, குருசேத்ரா, புதுடெல்லி, திருச்சிராப்பள்ளி, ரோஹ்டாக், புதுச்சேரி, பானிப்பட் (ஹரியானா), ஐதராபாத், திருப்பதி, இந்தூர், யமுனா நகர், சில்வசா ஆகிய இடங்களில் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் உள்ளன. இங்கு B.Sc. ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன் ஜெனரிக் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

படிப்பும், வாய்ப்புகளும்B.Sc. ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன்  ஆறு செமஸ்டர்கள் கொண்ட 3 ஆண்டு படிப்பில் விருந்தோம்பல் துறைக்கான திறன்கள், நுண்ணறிவு, பொறுப்புகள் இவை கற்பிக்கப்படுகின்றன. உணவு உற்பத்தி, உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பு, வரவேற்பு முறைகள், உபசரிப்பு, முன் அலுவலகப் பராமரிப்பு, உள் பராமரிப்பு மற்றும் உணவக கணக்கியல், உணவுத்தரம், பாதுகாப்பு, சேமிப்பு, மனிதவள மேலாண்மை, வசதித் திட்டங்கள், பொருளாதார மேலாண்மை, சுற்றுலா விதிமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.

இப்படிப்பை படித்து தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தேசிய மற்றும் பன்னாட்டு நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் விரைவு உணவகங்கள், விமானச் சமையலறைகள் மற்றும் விமான உணவு வழங்கல், உணவகங்கள் மற்றும் சேவைப் பணி நிறுவனங்கள், உணவக மேலாண்மை, உணவுத் தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியாளர் பணியிடங்கள், சரக்கு மற்றும் உல்லாசக் கடல் பயணங்களுக்கான கப்பல்கள், இந்திய பாதுகாப்புப் பணி, ரயில் உணவகம் மற்றும் உணவுத் தயாரிப்புப் பணிகள், விருந்தினர்/வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகப் பணிகள், மாநிலச் சுற்றுலாக் கழக அலுவலகங்கள், மருத்துவமனை உணவு விடுதிகள் போன்றவற்றில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

கல்வித்தகுதி: இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் ஆங்கில மொழிப்பாடத்தை ஒரு பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 2017 ஆம் ஆண்டு தேர்வு எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது தேர்ச்சிச் சான்றிதழினைக் காண்பிக்க வேண்டியிருக்கும்.  வயதுவரம்பு 1.7.2017 நிலவரப்படி, பொது மற்றும் ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு: எஸ்.சி.க்கு 15 விழுக்காடு, எஸ்.டி.க்கு 7½ விழுக்காடு, 27% விழுக்காடு பி.சி.க்கும், 3 விழுக்காடு மாற்றுத்திறனாளி களுக்கும் வழங்கப்படும்.
மொத்த இடங்கள்: மத்திய அரசின் நிறுவனங்களில் 4,717 இடங்களும், மாநில அரசு நிறுவனங்களில் 1,640 இடங்களும், அசோக் இன்ஸ்டிடியூட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்ற புதுடெல்லி பொதுத்துறை நிறுவனத்தில் 60 இடங்களும், தனியார் நிறுவனங்களில் 1,180 இடங்களும் உள்ளன.
நுழைவுத்தேர்வு: இதற்கான நுழைவுத்தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

இதில் நியூமரிக்கல் எபிலிட்டி, அனாலிட்டிக்கல் எபிலிட்டி என்ற பிரிவில் 30 வினாக்களும், ரீசனிங் மற்றும் லாஜிக்கல் டிடக்சனில் 30 வினாக்களும்,பொது அறிவு, நடப்பு நிகழ்வில் 30 வினாக்களும், ஆங்கிலத்தில் 60 வினாக்களும், ஆப்டிடியூட் ஃபார் சர்வீஸ் செக்டார் 50 வினாக்களும், மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

முதல் நான்கு பிரிவுகளில் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் உண்டு. தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். சர்வீஸ் செக்டார் பிரிவிற்கு, மிகச்சரியான விடைக்கு 1 மதிப்பெண், அடுத்த சரியான விடைக்கு 0.75 மதிப்பெண், அடுத்த சரியான விடைக்கு 0.50 மதிப்பெண் என்ற கிரேடு மதிப்பெண் தரப்படும். சரியற்ற விடைக்கு 0.25 மதிப்பெண் குறையும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் https://applyadmission.net/nchmjee2017/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நொய்டாவிலுள்ள தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக்குழு (NHCMT) அலுவலகத்திலும், இந்தக் குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்படும் விண்ணப்பத்தினை நேரடியாகப் பெற்றும் விண்ணப்பிக்க
முடியும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கப் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 800ம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.400ம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியிலான விண்ணப்பத்திற்குப் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.900ம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள்  ரூ.450ம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கும், அஞ்சல் வழியிலான விண்ணப்பம் அலுவலகத்திற்குச் சென்றடைவதற்கும் கடைசி நாள்: 14.4.2017.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:29.04.2017

மேலும் கூடுதல் விவரங்களை அறிய, மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 1800 180 3151 எனும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

ஆர்.ராஜராஜன்