ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு



மாற்றம்

பி.டெக். படித்தால் நேரடியாக பிஹெச்.டி. படிக்கலாம்!


+2வில் நன்றாகப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்குப் பெரும்பாலும் ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்பது ஒரு லட்சியமாக இருக்கும். அதற்குக் காரணம், ஐ.ஐ.டி. மாணவர்களைப் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மாதம் ரூ.5 லட்சம், ரூ.6 லட்சம் சம்பளத்தில் கொத்திக்கொண்டு போய்விடுகின்றன. இதனால், ஐ.ஐ.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளைப் படிக்க மாணவ-மாணவிகள் இடையே போட்டி நிலவுகிறது.

சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி உள்பட 15 இடங்களில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு பிரதான தகுதி ஜெ.இ.இ. என்று சொல்லப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுதான் (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்). இந்தத் தேர்வு மெயின், அட்வான்ஸ்டு என இரண்டு நிலைகளைக் கொண்டது.

ஜெ.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஜெ.இ.இ. முதல்கட்ட தேர்வான மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப்் இன்பர்மேசன் டெக்னாலஜி), என்.ஐ.டி. (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்் டெக்னாலஜி) போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இங்குப் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களின் குறிக்கோள் ஆராய்ச்சியாளர்களாக வேண்டும் என்பதாக இருக்கும்.

அதற்கு இளநிலைப் பட்டப்படிப்புக்குப் பின் முதுநிலைப் பட்டப்படிப்பு அதற்குப் பின்தான் ஆராய்ச்சிப் படிப்பான பிஹெச்.டி. படிக்கமுடியும். அதாவது இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த பின், பிஹெச்.டி., படிக்க வேண்டும். அதற்கு முதுநிலை படித்த பின், ’நெட்’என்ற தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அதன்பின், பிஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படுவர். ஆனால், ஐ.ஐ.டி.க்களில், பிஹெச்.டி. படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பேராசிரியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதைச் சமாளிக்க திறமையான மாணவர்களை நேரடியாக பிஹெச்.டி.யில் சேர்க்க, ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி. கவுன்சில் கூடி, பிஹெச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.யில் பி.டெக். படிக்கும் மாணவர்கள் 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.யில், பிஹெச்.டி. படிப்பில் நேரடியாகச் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

 - எம்.என்