+2 மாணவர்கள் தேர்வறையில் கலக்க சூப்பர் டிப்ஸ்



கல்வியாளர் எஸ்.பாலாஜி

பரபரப்பும், பதற்றமுமாக தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்பீர்கள். ஓராண்டு முழுவதும் நீங்கள் எப்படி படித்திருந்தாலும், தேர்வு அறையில் மூன்று மணி நேரத்தில் எப்படி தேர்வு எழுதுகிறீர்கள் என்பதில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது. தேர்வு அறையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன...? எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

 முதலில் பதற்றத்தைத் தவிருங்கள். இதுநாள் வரை நீங்கள் எழுதிப் பழகியதைப் போல இதுவும் ஒரு தேர்வு... அவ்வளவுதான். தன்னம்பிக்கையோடு தேர்வறைக்குள் செல்லுங்கள். முதல் நாளே, தேவையான பேனாக்கள், பென்சில், ஸ்கேல், ஹால்டிக்கெட் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய பேனாவைப் பயன்படுத்தாதீர்கள். பழகிய பேனாக்களை வைத்துக்கொள்வது நல்லது. தேர்வறையில் எதையும் யாரிடமும் கடன் கேட்காதீர்கள்.

முதல்நாள் இரவு நெடுநேரம் விழித்திருந்து படிக்காதீர்கள். எல்லாவற்றையும் ஒருமுறை திருப்பிப் பாருங்கள், போதும். இரவு எளிதான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே உறங்குவதும் நல்லது. அதிகாலை எழுந்து ஒருமுறை புத்தகத்தை திருப்பிப் பார்க்கலாம். புதிதாக எதையும் படிக்க முயற்சிக்காதீர்கள். சிக்கலில்லாத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உற்சாகமாக தேர்வுக்குக் கிளம்புங்கள்.

அரைமணி நேரம் முன்பாகவே தேர்வு மையத்துக்குச் செல்வது நல்லது. நிதானமாக உங்களுக்கான இடத்தைக் கண்டடையலாம். அந்த இடைப்பட்ட நேரத்தில் கவனம் சிதறும் வகையிலான எதையும் செய்யாதீர்கள். முறைகேடுகளைத் தடுக்க இந்தாண்டு முதல் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெல்ட், டை, ஷூ அணிந்து வந்தால் அவற்றை தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டுத்தான் தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்கள் விவரங்கள் எழுத 5 நிமிடம், கேள்வித்தாளைப் படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படும். காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். நேர நிர்வாகம் மிகவும் முக்கியம். ஒரு நொடியைக் கூட வீணாக்காதீர்கள். இந்தாண்டு முதல் விடைத்தாளின் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்களுக்கு 32 பக்கங்கள், விலங்கியல், தாவரவியல் பாடங்களுக்கு 44 பக்கங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு 32 பக்கங்கள், கணக்குப் பதிவியல் பாடத்துக்கு 46 பக்கங்கள், பிற பாடங்களுக்கு 40 பக்கங்கள் தரப்படும். மொழிப்பாடத்துக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் தரப்படும். கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாளின் முகப்பு சீட்டில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் தங்கள் கையெழுத்தை போட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை மட்டுமே எழுத வேண்டும். இரு பக்கங்களிலும் எழுத வேண்டும். ஒரு பக்கம் எழுதி மறுபக்கத்தை விட்டுவிடக்கூடாது. செய்முறை அல்லது மதிப்பீடுகள் அனைத்தும் விடைத்தாளில் இடம் பெற்றுள்ள பகுதியில் மட்டுமே இடம்பெற வேண்டும். வினா எண் தவறாமல் எழுத வேண்டும். இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுதவேண்டும். வினாத்தாளி வரிசைகளான ‘ஏ’ அல்லது ‘பி’ என்பதை மதிப்பெண்களுக்காக விடைத்தாளில் ஒதுக்கப்பட்ட பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை கொண்ட பேனாவினால்தான் எழுத வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் விடை எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும். கேள்வித்தாளில் எந்த குறியீடும் போடக்கூடாது. விடைத்தாளை எந்த வித சேதமும் செய்யக்கூடாது. விடைத்தாளில் முதற்பக்கம் தவிர வேறு எந்த பக்கத்திலும் மாணவரின் தேர்வு எண் அல்லது பெயரை எழுதவே கூடாது. பல நிறம் கொண்ட பேனா அல்லது பென்சில் எதையும் விடைத்தாளில் பயன்படுத்தக் கூடாது. விடைத்தாளில் உள்ள மார்ஜின் பகுதியில் விடைகள் எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தில் இருந்து எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.

முதலில் கேள்வித்தாளை நன்கு படியுங்கள். கேள்வி எப்படிக் கேட்கப்பட்டிருக்கிறதோ, அதற்குத் தகுந்தமாதிரி பதில் எழுத வேண்டும். கேட்கப்பட்ட அளவுக்குள் எழுதுவதும் முக்கியம். புரியாத வினா போல் தோன்றினாலும் அவற்றை ஓரிரு முறை நன்றாக படித்து பாருங்கள். சில வினாக்கள் அவை கேட்கப்பட்டிருக்கும் விதத்தால் முதலில் தெரியாதது போல் தோன்றும். அதை மேலும் சிலமுறை வாசித்துப் பார்த்தால் நாம் படித்த பகுதியிலிருந்தே அந்த கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தெரியும்.

தெரிந்த கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆனால்,  அ பிரிவில் ஒரு கேள்விக்கான விடையையும், அடுத்து ஆ பிரிவில் ஒரு கேள்விக்கான விடையையும் எழுதிவிட்டு, பிறகு திரும்பவும் அ பிரிவில் ஒரு கேள்விக்கு வராதீர்கள். அது திருத்தும் ஆசிரியரை எரிச்சல்படுத்தும். முதலில் அ பிரிவில் எந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியுமோ, அவற்றை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பிரிவுக்குச் செல்லுங்கள்.

கேள்வியைத் தேர்வுசெய்யும்போது, அதிகநேரம் இழுக்காத, முழு மதிப்பெண் பெற்றுத்தரக்கூடிய கேள்விகளை தேர்வு செய்யவேண்டும். படம் வரைய வேண்டிய ஒரு கேள்வி, தியரி எழுத வேண்டிய ஒரு கேள்வி இருந்தால் தியரி எழுதுவதை தேர்வு செய்யலாம். திருத்தும் ஆசிரியருக்கு நீங்கள் வரைந்த படம் பிடிக்காமல் போனால் மதிப்பெண் குறைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், தியரி சரியாக இருந்தால் மதிப்பெண்களைக் குறைக்கமுடியாது.

தெளிவாகவும் அழகாகவும் எழுத வேண்டும். அது திருத்தும் ஆசிரியருக்கு உங்கள் மேல் மரியாதையை உருவாக்கும். அதே நேரத்தில் விரைவாகவும் எழுதவேண்டும். அவசரக்கோலத்தில் கிறுக்கி வைத்தால் திருத்துபவர் விடையை தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புண்டு. அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. எழுத்துப்பிழைகளைத் தவிருங்கள். வார்த்தைகளுக்கு மத்தியில் தகுந்த இடைவெளி விடவும் மறக்காதீர்கள்.

கணிதப்பாடத்தில் எண்களை சரியாக, தெளிவாக எழுதவும். ஏழு என்ற எண்ணை ஒன்றைப் போலவோ, 6, 8 எண்களை பூஜ்ஜியம் போலவோ அவசரத்தில் எழுதிவிடும் வாய்ப்புள்ளது. பெரிய வினாக்களுக்கு பதில் எழுதும்போது ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி எழுதினால் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். மாறாக கதைபோல் எழுதினால் குறைவான மதிப்பெண்களே கிடைக்கும்.

எந்தச் சூழலிலும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எழுதுங்கள். அதுதான் உங்களின் வெற்றி. இந்தாண்டு கடும் கண்காணிப்புக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. முறைகேடு செய்பவர்கள் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாவதோடு, 2 முதல் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது.

வாழ்த்துகள் டியர் ஸ்டூடன்ட்ஸ்... +2வில் தேர்ச்சி பெற்று வாழ்க்கையிலும் ஜெயிக்க வாழ்த்துகள்.