+2 உயிரி விலங்கியலில் சென்டம் வாங்க டிப்ஸ்



+2 உயிரியல் பாடத்தின் ஒரு அங்கமான உயிரி- தாவரவியலில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் உயிரி- விலங்கியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் வழிமுறைகள் சொல்கிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் கே.கே.தேவதாஸ்.

“உயிரி தாவரவியலுக்கு 75 மதிப்பெண்கள் போக, உயிரியலில் மிச்சமிருக்கும் 75 மதிப்பெண்கள் விலங்கியல் பாடத்திலிருந்து கேட்கப்படுகின்றன. உயிரி விலங்கியலில் மொத்தமே ஏழு பாடங்கள்தான் உள்ளன. ஆனால், இது மாணவர்களின் சென்டம் கனவை ரொம்பவே அசைத்துப் பார்க்கும் ஒரு சப்ஜெக்ட். காரணம், இதில் வரிக்கு வரி முக்கியமான பாயின்ட்கள் இருப்பதால் புத்தகத்தின் எல்லா பக்கங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதுதான். அதோடு, மனிதனின் உடற்செயலியலில் தொடங்கி நோய்கள், மரபியல், சுற்றுச்சூழல், பரிணாமம் வரை மருத்துவப் படிப்பிற்கான முன்னோட்டப் பாடங்கள் அனைத்தும் அதிக பக்கங்களைக் கொண்டுள்ளன. எனவே, ஷார்ப்பாக படித்தால் மட்டுமே இதில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்...’’ என்கிறார் தேவதாஸ். 

அவர் தரும் டிப்ஸ்...

நுனிப்புல் மேயக்கூடாது. பாடங்களை டாப் டூ பாட்டம் புரிந்து படிப்பதோடு, குறிப்புகளையும் எடுத்துக்கொண்டால் மட்டுமே சென்டம் கைகூடும்.
பொதுவாக சென்டம் கனவைத் தகர்ப்பது ஒரு மார்க் கேள்விகளே! 120 பக்கங்கள் கொண்ட முதல் பாடத்திலிருந்து நான்கு ஒரு மார்க் கேள்விகள் வரும். 2, 6வது பாடங்களிலிருந்து தலா மூன்று கேள்விகளும், 4, 5வது பாடங்களிலிருந்து தலா 2 கேள்விகளும், 3, 7வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வியும் கேட்கப்படும். முழு மதிப்பெண்களைப் பெற ஒரே வழி, பழைய கேள்வித்தாள்களை ஒருமுறை புரட்டுவதுதான். இவை தவிர புத்தகத்தின் பின்பக்கம் உள்ள ஒரு மார்க் கேள்விகள் என எல்லாம் சேர்த்து 500 ஒரு மார்க் கேள்விகள் இருக்கின்றன.

பெரும்பாலும் இவற்றுக்கு வெளியே கேள்விகள் வருவதற்கு வாய்ப்பில்லை. அடுத்ததாக மூன்று மார்க் கேள்விகள். 12 கேள்விகளுக்கு எட்டிற்கு விடையளிக்க வேண்டும். இதில் 1, 3, 6வது பாடங்களிலிருந்து தலா 2 கேள்விகள் கேட்பார்கள். 4வது பாடமான தற்கால மரபியலில் மூன்று கேள்விகள் வரும். 2, 5, 7வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி. இதிலும் முழு மதிப்பெண்களைப் பெற பழைய கேள்வித்தாள்களை படிப்பதுதான் சிறந்த வழி. ஏனெனில் ரிபீட் ஆன கேள்விகள்தான் மீண்டும் மீண்டும் வருகிறது. ஒருமுறை கேட்கப்படும் கேள்வியை அடுத்த முறை கேட்க மாட்டார்கள். ஆனால், அதனோடு தொடர்புள்ள ஒரு கேள்வியை கேட்பார்கள்.

இதில் நான்காவது பாடத்தை நன்றாகப் படித்துக்கொண்டால் மூன்று வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம். இதில் முக்கிய கேள்வி என மூன்று மார்க்கில் 35தான் உள்ளன. அடுத்ததாக 1, 3, 6வது பாடங்களில் மொத்தமாக நூறு கேள்விகள் இருக்கின்றன. இவற்றைப் படித்தால் ஒன்பது கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிடும். இதோடு 7வது பாடத்தில் முக்கியமான கேள்விகள் 12தான் இருக்கிறது. இவற்றையும் படித்தால் கூடுதல் நம்பிக்கையோடு மூன்று மார்க் வினாக்களை எழுதலாம். 

ஐந்து மார்க்கைப் பொறுத்தவரை 5 கேள்விகள் கேட்கப்படும். இதில் மூன்றுக்கு விடையளிக்க வேண்டும். இதில் கேள்வி எண் 31 கட்டாயக் கேள்வி. இந்தக் கேள்வி 3வது பாடமான நோய்த் தடைக் காப்பியலில் இருந்து கேட்கப்படுகிறது. இதில் பத்து கேள்விகள்தான் முக்கியமாக இருக்கிறது. இவற்றைப் படித்தால் இந்தக் கட்டாயக் கேள்வியை எளிதாக எழுதிவிடலாம்.1, 2, 4, 7 ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி கேட்கப்படும். இந்த நான்கில் இரண்டு கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். இதில் 2வது பாடமான நுண்ணுயிரியல் எளிமையானது. இந்தப் பாடத்தில் முக்கியமான 9 கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்டுள்ளனர். இதிலிருந்துதான் மறுபடியும் கேள்விகள் வரும். இதைப் படித்தால் ஒரு கேள்விக்கு எளிதாக பதிலளிக்க முடியும். அடுத்து, நான்காவது பாடத்தில் 12 கேள்விகள்தான் ஐந்து மார்க்கில் உள்ளன.

இந்த இரண்டையும் எழுதினால் ஐந்து மார்க்கில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம். இருந்தும் சில வேளைகளில் கஷ்டமான கேள்விகள் வந்தால் என்ன செய்வது? இதற்காக 1, 7வது பாடங்களில் உள்ள எளிதான ஐந்து மார்க் வினாக்களைப் படித்துக் கொள்ள வேண்டும். பத்து மார்க்கில் நான்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் இரண்டிற்கு விடையளிக்க வேண்டும். இதில், முதல் பாடத்திலிருந்து மட்டுமே இரண்டு கேள்விகள் கேட்கப்படுகிறது. அடுத்து 5, 6வது பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி.

முதல் பாடத்தில் அதிக பக்கங்கள் இருக்கின்றன. எனவே, குருதி சுழற்சி என்கிற தலைப்பு வரை, அதாவது முதல் 43 பக்கங்கள் கொஞ்சம் தெளிவாக படித்துக்கொண்டால் ஒரு பத்து மதிப்பெண்ணை எளிதாக எழுதிவிடலாம். இந்தப் பக்கங்களுக்குள் 12 கேள்விகள் பத்து மார்க்கில் இருக்கிறது. நிச்சயம் இதிலிருந்து ஒரு கேள்வி வரும். அடுத்த கேள்வியை 5வது பாடத்தில் எழுதுவது போல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் சுற்றுச்சூழல் அறிவியல் என்கிற இந்தப் பாடத்தில் பத்து மார்க் கேள்விகள் 12தான் இருக்கின்றன. எளிமையான பாடம். எழுதுவதும் சுலபம். இருந்தும் 6வது பாடமான பயன்பாட்டு உயிரியலில் உள்ள முக்கியமான கேள்விகளைப் பார்க்க வேண்டியது அவசியம்.

விலங்கியலில் சென்டம் பெற மாணவர்கள் ப்ளூ பிரின்ட்டை முதலில் பார்த்துப் படித்துத் தொடங்க வேண்டும். அடுத்ததாக பழைய கேள்வித்தாள்கள் + புக் பேக் கேள்விகளை முழுவதுமாகப் படித்திருக்க வேண்டும். பத்து மார்க் கேள்விகளை எழுதும்போது குறுந்தலைப்புகளை அடிக்கோடிட்டு எழுத வேண்டும். தெளிவான கையெழுத்து அவசியமானது. அதேபோல் கதையடிக்காமல் புத்தகத்தில் உள்ளபடி எழுத வேண்டும். இவையெல்லாம் இருந்தால் சென்டம் உங்கள் வசமாகிவிடும். 

ஷார்ப்பாக படித்தால் மட்டுமே இதில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்...

ஆசிரியர் கே.கே.தேவதாஸ் வழங்கும்
உயிரி - விலங்கியல் வினாத் தொகுப்பு அடுத்த பக்கம்...