ஹெல்த் ரொம்ப முக்கியம் ஸ்டூடன்ட்ஸ்..!



பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் பரபரப்பாக தயாராகி வரும் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா? தேர்வுக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்..?

டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் தருகிறார் ஹெல்த் டிப்ஸ்...

அரிசி, சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இதனை அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாமல் மீடியமாக சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் உடலுக்கு சீரான ஆற்றல் கிடைக்கும்.  படிக்கிறபோது கூடவே முறுக்கு, தட்டை போன்ற நொறுக்குத் தீனியை சிலர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால், தூக்கம்தான் வரும். எனவே, நொறுக்குத் தீனிக்கு ஒரு மாதத்திற்கு நோ சொல்லுங்கள்.

ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அதிக கொழுப்பை உருவாக்கும் ஆயில் உணவுகள் அதிக தூக்கத்தை கொடுக்கும். உடல் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை ஹோட்டலில் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால் இட்லி, இடியாப்பம் போன்ற அவித்த உணவுகளைச் சாப்பிடலாம். காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது காபி... பிறகு காலை உணவு. தேர்வு சமயத்தில், சீக்கிரமே சிலர் காலை உணவைச் சாப்பிட்டு விடுவார்கள்.  தேர்வறையில் பசி ஏற்படலாம். அது கவனத்தை திசை திருப்பக்கூடும். எனவே, வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பும்போது வாழைப்பழம், ஆப்பிள் என ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். தேர்வு அறைக்கு செல்லும்முன் 9.30 வாக்கில் இதனை சாப்பிடலாம். இதனால், அதிக எனர்ஜி கிடைக்கும். உற்சாகத்துடன் தேர்வெழுத முடியும்.

மதிய உணவாக அரை கப் அரிசியுடன் கொஞ்சம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை புறக்கணித்துவிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எளிதாக செரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.மாலை 4 மணிக்கு பால், கொஞ்சம் பிஸ்கட் எடுத்துக் கொள்ளலாம். 7 முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும். இதிலும் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது.

சிலர் இரவு விழித்திருந்து படிப்பதால் அதிகம் காபி குடிப்பார்கள். இது வேண்டாம். ஒரு நாளைக்கு 3 முறை காபி குடித்தால் போதும். அதிகளவு காபி குடிப்பதால் பசி எடுக்காமல் போய்விடும். மேலும், உடலின் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும்.  சரி...படிக்கும்போது தூக்கம் வந்தால் என்னசெய்வது? கொஞ்சம் பழங்கள் சாப்பிடலாம், அல்லது வெந்நீர் குடிக்கலாம். இது தூக்கத்தை போக்கி சுறுசுறுப்பைத் தரும்.  அதற்காக இரவு 2 மணிவரை எல்லாம், படிக்கக் கூடாது.  ஏனெனில், உடலில் சோர்வு ஏற்பட்டு தேர்வு அறையில் தூக்கம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகவே 8 மணி நேர தூக்கம் ரொம்ப முக்கியம்!

- பேராச்சி கண்ணன்