+2 மாணவர்களே...மறதியை விரட்டுங்கள்



மதிப்பெண்களை அள்ளுங்கள்

பதற்றம், விருப்பமின்மை, பயம், பயிற்சியின்மை, புரிந்து கொள்ளாமை, குருட்டு மனப்பாடம், இயந்திரமாக படித்தல் இவைதான் மறதிக்கான முக்கிய காரணங்கள். விரும்பி, புரிந்து படியுங்கள். குருட்டு மனப்பாடம் செய்தால் எதுவும் மனதில் நிற்காது. மறந்துபோய் விடும். நாம் படிப்பது தேர்வு எழுதுவதற்காக மட்டுமல்ல, நம் அறிவையும் வளர்த்துக் கொள்வதற்குத்தான்.

ஞாபக சக்தி குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை பொதுவாக வைட்டமின் குறைவுகளாலேயே ஏற்படுகிறது. பச்சை காய்கறிகள், பால், கீரை வகைகள், பழங்கள் இவைகளை உணவில் அன்றாடம் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். படிக்க உட்காரும் முன் வயிறு புடைக்க  சாப்பிடாதீர்கள். இப்படி செய்தால் படிப்பு ஏறாது. தூக்கம் தான் வரும். முக்கால் வயிற்றுக்கு சாப்பிட்டால் போதும். வேண்டும் என்றால் படிப்பிற்கு இடையே வெள்ளரிக்காய், பச்சை காரட், பால், சுண்டல் போன்றவற்றை சாப்பிடலாம்.

படிக்கும் போது கவனம் முழுவதும் பாடத்தில்தான் இருக்க வேண்டும். சிந்தை ஊன்றி படிக்க வேண்டும். பாட்டுக் கேட்டுக் கொண்டோ, அடுத்த அறையில் நடக்கும் தொலைக்காட்சி தொடரை நினைத்துக் கொண்டோ படிக்க கூடாது. கவனம் சிதறினால் படிப்பது மனதில் தங்காது. உடல் சோர்வடைந்து அதே சமயத்தில் தூக்கம் வராத போது அதுவரை படித்த பாடப்பகுதியை நினைவுபடுத்தி பார்க்கவும். எந்தெந்த பகுதி மறக்கிறதோ அவற்றை குறித்து வைத்துக்கொண்டு விடிந்தவுடன் படித்துவிட வேண்டும்.

ஆண்டுகள், பெயர்கள், ஒப்பந்தங்கள், இயற்கை வளங்கள், தலைநகரங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றைத் தனியாக குறித்து வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும். அப்படி படித்தால் மறக்கவே மறக்காது. கடினமானது என்று நீங்கள் நினைக்கும் பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து வைத்துக் கொண்டு படிக்கவும். ஒவ்வொரு பகுதியையும் படித்து முடித்தவுடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மனதிற்குள் சொல்லிப் பார்க்கவும். பின்னர் ஒரு முறை எழுதி பார்க்கவும். சரியாக எழுதியிருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு மேலே படிக்கலாம்.

இரவு வெகுநேரம் வரை கண் விழித்து படிக்க வேண்டாம். ஓய்வு மிகவும் தேவை. களைப்படைந்த மூளை நாம் தூங்கும்போதுதான் ஓய்வெடுக்கிறது. அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படிக்கலாம். நிசப்தமாகவும் இருக்கும். இதனால் படிப்பது அப்படியே மனதில் பசை போல் ஒட்டிக்கொள்ளும். இரண்டு, மூன்று மணி நேர படிப்பிற்கு பின் கண்டிப்பாக சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கண் மூடி சிறிது நேரம் படுத்திருக்கலாம். பாட்டு கேட்கலாம். பத்திரிகை வாசிக்கலாம். வீட்டினரோடு பேசலாம். வீட்டு செடிக்கு தண்ணீர் விடலாம். சிறிது தூரம் காலாற நடக்கலாம்.

‘நம்மால் முடியும் என்று திடமாக எண்ண வேண்டும். என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லக் கூடாது. ஏனெனில் நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். நீ எதையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ’ என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். ரோலிங் பிளாக் போர்டு ஒன்றை வீட்டிலேயே வாங்கி வைத்து படிப்பது நல்லது. கணக்கையும் வேதியியல், இயற்பியலில் வரும் ஃபார்முலாக்களையும், உயிரியல் பாடங்களையும் அதில் எழுதிப் பார்ப்பது நல்லது. இப்பழக்கம் சராசரி மாணவர்களுக்குக்கூட படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

படிக்க உட்காரும் முன் மூச்சுப் பயிற்சி அல்லது பிரணாயாமம் செய்யலாம். அதாவது மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து ஒரு சில விநாடிகள் உள் நிறுத்த வேண்டும். பிறகு மிக மிக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். அவ்வாறு செய்வதால் நுரையீரலுக்கு உள்ளே பிராண வாயு சென்று வலுவை அதிகரிக்கும். இப்போது மூளை மிக தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால் கடினமான பாடங்களை படித்தால் கூட மிக எளிதாக புரியும்.

படித்ததை ஞாபகம் வைத்துக்கொள்ள சில சூத்திரங்கள்...

RRR
 
முதலில் Registration. விஷயத்தை மனதில் பதியவைத்துக் கொள்வது. அடுத்து Retention. பதிவான விஷயத்தை முழுமையாக அங்கேயே இருப்பு வைத்துக் கொள்வது. மூன்றாவது, ஸிணிசிகிலிலி. தேவைப்படும் தருணத்தில் திரும்ப எடுத்துப் பயன்படுத்துவது. முடிந்தது.

Associate Memory

ஒரு கேள்விக்கான பதிலில் பத்து பாய்ண்டுகள் இருக்கின்றன. அதுவும் நினைவில் வைத்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்..?

மனதில் ஒரு ஓவியத்தை வரையுங்கள். ஒரு வீடு. அதில் பத்து அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறையையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒவ்வொருவருக்கு ஒதுக்கி விடுங்கள். அக்கா ரூம், தம்பி ரூம், தங்கை ரூம்.. இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பாயின்ட்டை கொண்டுபோய் வையுங்கள்.

எந்த அறையில் எந்த பாயின்ட் இருக்கிறது என்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தது. வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடலாம். தேர்வில் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா..? நீங்கள் அந்தக் கேள்விக்கான விடையை வேறெங்கும் தேடவேண்டாம். உங்கள் மனதில் கட்டி வைத்திருக்கிறீர்களே வீடு.. அதை திறந்தால் போதும். அக்காவின் ரூமில் எந்தப் பாயின்ட்டை வைத்தோம்.. தங்கையின் ரூமில் எந்த பாயின்ட்டை வைத்தோம் என்று யோசித்தால் பளீரென எல்லா பாயின்ட்டும் வந்து விழுந்துவிடும்.

- வெ.நீலகண்டன்