தேர்வுப் பயம் தேவையே இல்லை



+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. உயர்கல்வியைத் தீர்மானிக்கும் தேர்வுகள் என்பதால் மாணவர்கள் மிகவும் டென்ஷனாக இருப்பார்கள்.ஒரு பக்கம் பெற்றோர்... இன்னொரு பக்கம் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள்... ஆளாளுக்கு அள்ளிவிடும் அறிவுரைகள் என மெல்லிய பதற்றத்தில் மாணவர்கள் சிக்கியிருப்பார்கள். அந்த பதற்றம் வளர்ந்தால் பயமாக உருமாறி தேர்வையே பாதித்துவிடும். தேர்வுக்காலப் பயம், பதற்றத்தில் இருந்து விடுபடுவது எப்படி...? ஆலோசனை சொல்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா.

தேர்வு என்பது நாம் கற்ற கல்வியறிவை சோதித்துப் பார்க்கும் ஒரு முயற்சி. அது நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் ஒரு விதத்தில் உதவுகிறது. அவ்வளவு தான். அதுவே வாழ்க்கையின் முடிவு என்று நினைக்கக்கூடாது.  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் முயற்சி என்றால், +2 தேர்வு இரண்டாவது முயற்சி. எந்தவொரு முயற்சிக்கும் முழு ஈடுபாடு இருக்க வேண்டும். அதே சமயம் எல்லா முயற்சியிலும் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைத்துவிடாது. நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதற்கு பயிற்சி அவசியம். மற்றவர்களைக் கருதாமல் உங்களுக்கு திருப்தி ஏற்படும் அளவுக்கு பயிற்சியும், முயற்சியும் இருக்கட்டும்.
 
பெரிய அளவில் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளாமல் நன்றாக படித்திருக்கிறோம், நன்றாக எழுதுவோம் என்ற எண்ணம் மட்டும் இருக்கட்டும். மனதை ஒருமுகப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். கிரிக்கெட், சீரியல் என எதிலும் மனம் செலுத்தாதீர்கள். எதுவும் உங்கள் கவனத்தை திசை திருப்பாமல் இருக்க பழகுங்கள். சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.சில பெற்றோர் தேர்வு நேரத்தில் பிள்ளைகளைப் படித்துக்கொண்டே இருக்கச் சொல்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது.

பெற்றோரின் எதிர்பார்ப்பும் பயமும் நியாயமானதுதான் என்றாலும், பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடக்கூடாது. பிள்ளைகளுக்கு தினமும் ஒரு மணி நேரமாவது மனரீதியான ஓய்வு வேண்டும். பாட்டு கேட்கலாம், நண்பர்களோடு போனில் பேசலாம், விளையாடலாம். அதேபோல தூக்கமும் அவசியம்.

தூங்கினால்தான் மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆக்ஸிஜன் சரியாக கிடைத்தால்தான் படிப்பதை மூளை நன்றாக கிரகிக்கும். அப்படி கிரகித்தால்தான் சரியாக எழுத முடியும். அதேபோல நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஞாபகசக்தி மேம்பட தண்ணீர் மிகவும் முக்கியம். எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அப்படி ஒப்பிட்டால் தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படும்.

படித்ததை மறக்கவும் தன்னம்பிக்கை இழக்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் என்ன படித்தீர்களோ, அதை தெளிவாக எழுதுங்கள், போதும். ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி படிக்கலாம், படித்ததை எழுதிப்பார்க்கலாம். சக மாணவர்களோடு போட்டி இருக்கலாம், பொறாமையாக இருக்கக் கூடாது. அதனாலும் கூட தேர்வு எழுதுவதில் பதற்றம் உண்டாகும்.

நீங்கள் ஒரு பதிலை எப்படி எழுதுகிறீர்கள் என்பதில் இருந்துதான் திருத்தும் ஆசிரியர் உங்களை மதிப்பிடுகிறார். படித்ததை அப்படியே எழுதாமல், உங்கள் மொழியில் எழுதலாம். அழகாக, அடித்தல் இல்லாமல் தெளிவாக எழுதுங்கள். இது உங்களுக்கே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். டைம் மேனேஜ்மென்ட் ரொம்பவே முக்கியம். அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள். எந்த காரணத்திலும் குறுக்கு வழியை கையாள நினைக்காதீர்கள். வீட்டு பிரச்னைகள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எதுவாக இருந்தாலும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். உங்களுக்கான ஒரே வேலை படிப்பது மட்டுமே.

தேர்வு பற்றிய கற்பனையை உதறித் தள்ளுங்கள். நேருக்கு நேராக அதை தேர்வறையில் சந்தித்துக் கொள்ளலாம். நன்றாக எழுத முடியுமா? படித்த கேள்விகள்தான் வருமா? என தேவையற்ற கேள்விகளை உருவாக்கி பதில் தேடாதீர்கள். குழப்பமும் பயமும் தான் பதிலாக கிடைக்கும். தேர்வு அறைக்கு செல்லும்வரை சிலர் படித்துக்கொண்டிருப்பார்கள். அப்படி செய்யவே கூடாது.

நெகட்டிவ் சிந்தனைகளை கைவிட்டு முடிந்தவரை நேர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும். உங்களால் முடியாதது வேறு யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது உங்களால் முடியும். இதுதான் எதார்த்தம். நான் நன்றாகவே படித்துள்ளேன் நன்றாகவே தேர்வு எழுதுவேன். இதில் நான் பயப்படவோ பதற்றப்படவோ ஒன்றுமில்லை என்பதில் தெளிவாக இருந்தாலே போதும். நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்தான்!

- எம்.நாகமணி