தேர்வு நேரத்தில் கண்கள் பத்திரம்



இரவு பகல் பாராமல் படித்துக்கொண்டிருப்பீர்கள். நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பும், ஆர்வமும் தப்பில்லை. ஆனால் கண்களின் தேவையை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.

கண்களுக்கு பாதிப்பில்லாமல் படிக்க சில வழிமுறைகள்...

பார்வையில் இயல்புக்கு மாறாக ஏதேனும் பிரச்னை இருந்தால் தேர்வுக்கு முன்பாகவே மருத்துவரைப் பார்த்து பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.  உடம்பை நன்றாகத் தளர்த்தி சாய்ந்து உட்கார்ந்து படிப்பது நல்லது. புத்தகம் உங்கள் விழிக்கு நேராக இருக்க வேண்டும். கழுத்தைத் திருப்பி சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல. கண்கள் கூசும் அளவுக்கு வெளிச்சத்திலும் படிக்கக்கூடாது. குறைந்த வெளிச்சத்தில் படிப்பதும் நல்லதல்ல. இரண்டுமே கண்களைச் சோர்வடையச் செய்யும். படிக்கும்போது உங்கள் முகத்தில் வெளிச்சம் விழுவது நல்லதல்ல. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் வெளிச்சம் விழும்படியாக அமர்ந்து படிக்க வேண்டும்.

உங்கள் நிழல், நீங்கள் படிக்கும் புத்தகத்தின் மீது படிந்து மறைக்கவும் கூடாது. படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. தரையிலோ, நாற்காலியிலோ அமர்ந்துகொண்டு படிப்பதே சரியானது. ஒரே இடத்தை அல்லது புத்தகத்தின் ஒரே பக்கத்தை தொடர்ந்து வெறித்து பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். அப்படி பார்ப்பதால் கண்களில் இருக்கும் மென்மையான தசைகள், நரம்புகளுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் போகலாம். மேலும் கண்ணீர்ச் சுரப்பிகள் வறண்டு போகவும் வாய்ப்புண்டு.  புத்தகத்துக்கும் உங்களுக்கும் குறைந்தது ஆறில் இருந்து எட்டு அங்குலம் இடைவெளி இருக்கவேண்டும். அப்படி படிப்பதில் சிரமம் ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் காண்பித்து தீர்வு தேடலாம்.

20:20:20. இதுதான் கண்களைப் பாதுகாக்கும் சூத்திரம். தொடர்ந்து படிக்க நேர்ந்தால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தலையை உயர்த்தி 20 நொடிகளுக்கு கண்களை மூடி மூடித் திறந்து கண்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். அதேபோல், 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடி நேரத்துக்கு பார்க்கவேண்டும். கண்கள் உலர்ந்து போகாமலும், களைப்படையாமலும் இருப்பதற்கு ஏற்ற பயிற்சி இது. ஓய்வில்லாமல் படிக்கும்போது கண்களில் சோர்வு ஏற்பட்டாலோ, கண்கள் கலங்கினாலோ சுத்தமான, குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். 

தூக்கம் வரும்போது, சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல. உறங்கி எழுந்து படித்துப் பாருங்கள், உற்சாகத்தை நீங்களே உணர்வீர்கள். தினமும் சிறிது நேரம் வெளியில் சென்று விளையாடுங்கள். அல்லது பசுமையான சூழலில் நடைப்பயிற்சியாவது செய்யுங்கள். மனதிற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அது நல்லது. கண்களில் அடிபட்டாலோ, தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ, ‘தேர்வு நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ என்று பயந்து கலவரப்படாதீர்கள். கண் மருத்துவரை அணுகுங்கள். உடனடியாக சரி செய்ய மருந்துகள் உண்டு. உங்கள் விருப்பத்துக்கு மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்கிப் போடுவது பேராபத்தில் முடியலாம்.

- வெ.நீலகண்டன்