வேலைக்கு வெல்கம்!



உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உன்னதத் தொடர்

‘இன்டர்வியூக்களில் ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம்’ என ஒரு சப்ஜெக்ட்டை கடந்த இதழில் நாம் லேசாகத் தொட்டுச் சென்றோம். நிறைய பேருக்கு இந்த விஷயத்தில் நிறைய சந்தேகங்கள். ‘‘ஆணாதிக்கத்தால பெண்களுக்கு வேலை கிடைக்கலைன்னும், பெண்கள் மேல் இருக்கும் கவர்ச்சியால ஆண்களுக்கு வேலை கிடைக்கலைன்னும் சொல்றது சாக்குப் போக்குன்னு நீங்க சொல்றீங்க. அப்படின்னா, இந்த உலகத்துல ஆண் - பெண் பாகுபாடே இல்லையா? ஆண் - பெண் வித்தியாசம் பார்க்காம 100 சதவீதம் தகுதி அடிப்படையிலயேதான் எல்லா பிளேஸ்மென்ட்டும் நடக்குதா?’’ எனக் கேட்டார்கள் யுவன், யுவதிகள் பலர்.

அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. இந்த உலகம் அழியும் வரை, ஓர் ஆண் மனதில் பெண்ணுக்கான சாஃப்ட் கார்னரும் பெண் மனதில் ஆணுக்கான சாஃப்ட் கார்னரும் இருந்தே தீரும். அந்த சாஃப்ட் கார்னர் நமக்கு நல்லதா... கெட்டதா? நல்லபடியாக அதைப் பயன்படுத்திக்கொள்வது சரியா? அது முடியுமா? அந்த சாஃப்ட் கார்னரே நாம்
நிராகரிக்கப்படவும் காரணமாகிவிட்டால் எதிர்கொள்வது எப்படி? - இவைதான் அலசப்பட வேண்டியவை. இதோ, மனித மூளையை பிரித்துப் போட்டு இந்த சங்கதிகளை அலசுகிறார்   மனநல மருத்துவர் எம்.கவிதா...

‘‘இந்தச் சமூகம், ஆணையும் பெண்ணையும் ஒரே கண்ணோடு பார்த்து, ஒரே தராசால் அவர்களின் திறமையை மட்டும் அளப்பது என்பது ஓர் அழகான கனவு. ஆனால், நடக்கவே முடியாத ஒன்று. எத்தனை நேர்மையான இன்டர்வியூவாக இருந்தாலும் சரி... கடைசி கட்டம் வரை ஒரே தகுதியோடும் திறமையோடும் ஒரு ஆணும் பெண்ணும் தேர்வாகி வரும்போது, ‘இந்தப் பையன்தான் லாங் டெர்ம் கம்பெனியில இருப்பான்’ என அந்த நிறுவனம் ஆண் பக்கம் சாயலாம். அல்லது, ‘கிளையன்ட் கிட்ட பேசுறதுக்கு இந்தப் பொண்ணுதான் ஓகே’ என பெண் பக்கமும் சாயலாம். எந்தப் பக்கமும் சாயாத நடுநிலை மனிதர்களும் நடுநிலை நிறுவனங்களும் இன்னும் படைக்கப்படவில்லை.

‘இந்தச் சாய்தல் அலுவல் தொடர்பானதுதானே... இருந்துவிட்டுப் போகட்டும்’ என்கிறீர்களா? மன்னிக்கவும். அஃபீஷியல் தாண்டியும் பெண் என்பதற்கான சலுகையும் நிராகரிப்பும் உண்டு. ஆண் என்பதற்கான சலுகையும் நிராகரிப்பும் கூட உண்டு. பெண்களைப் பொறுத்தவரை இது ரொம்பவே சீரியஸ் பிரச்னை. ஏனென்றால், சில சமயம் பெண்களுக்கு அலுவலகங்களில் கிடைக்கும் நிராகரிப்பை விட சலுகைகள் ஆபத்தானவை.

ஒரு பெண், நேர்முகத் தேர்வுக்காக ஆண்கள் நிரம்பிய தேர்வறைக்குச் செல்கிறாள் என்று வையுங்களேன்... திறமை இருந்தும் ‘பொம்பள என்னத்த வேலை செஞ்சி... கிழிச்சி’ என்ற உள்ளுணர்வால் அவள் நிராகரிக்கப்படலாம். தப்புதான்... வருத்தம்தான். ஆனால், ஒருவேளை திறமை குறைவாக இருந்தும் தேர்வாளரின் சபலத்தால்... ‘அருகில் இருந்தால் அணுகிப் பார்க்கலாமே’ என்ற ஆர்வத்தால் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள் என்று வையுங்கள்...

அது நிராகரிப்பை விட பெரிய வருத்தங்களுக்கு தொடக்கப் புள்ளி! ஆனால், இன்றைய பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். வாய்ப்புகளும் வளர்ச்சிகளும் விரிந்திருக்கிற இந்தக் காலத்தில் அலுவலகத்தில் யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் தாங்கள் பணிய வேண்டியதில்லை என்ற தெளிவு அதில் முக்கியமானது. மேலும், அந்தக் காலத்தைப் போல இன்றைய சமூக வாழ்க்கையில் ஹீரோ, வில்லன் என்று தனித்தனியாக யாரும் இல்லை.

ஆகப்பெரும் வில்லன்களோடுதான் நாம் பேசிப் புழங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது எண்ணங்களும் நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்கும் வரை யார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற துணிச்சல் இப்போதைய பெண்களிடம் உண்டு. எனவே, வேலை எப்படிக் கிடைத்தாலும் பரவாயில்லை... வேலை கொடுத்தவர்களின் மனம் சுத்தமா என்றெல்லாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அதைக் கூட்டிப் பெருக்கி பினாயில் ஊற்ற வேண்டிய கடமையும் நமக்கில்லை. நாம் விரும்பத்தகாதது நமக்கு நடப்பதாகப் பட்டால், அடுத்த நிமிடமே வேறு நிறுவனம்... வேறு இன்டர்வியூ. அவ்வளவுதான். இது மிக எளிது.

இப்போது நிராகரிப்புக்கு வருவோம். பெரும்பாலும் பெண்களைப் படுத்தி எடுப்பது இந்த நிராகரிப்பு பிரச்னைதான். பிறந்ததிலிருந்து பெண் என்பதால் கிடைக்கும் சலுகைகளை விட, நிராகரிப்பையே அதிகம் சந்தித்திருக்கும் பெண்கள் இங்கு நிறைய. அவர்களிடம் இந்தத் தலைப்பில் பேசிப் பாருங்களேன்... ஆணாதிக்க சமூகத்தின் மீதான ஆறாக்கோபம் அவர்களிடம் இருக்கும். அதுமட்டுமல்ல, இந்தக் கேடுகெட்ட சமூகத்தில், ‘வளைந்து கொடுத்து’ வாழ்வில் ஜெயிப்பதாக சில பெண்கள் மீதும் அவர்களுக்கு கடுமையான விமர்சனம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி அவர்களின் ஆழ்மனதைக் கிளறிப் பார்த்தால், அங்கே தனது தோற்றம், அழகு பற்றிய தாழ்வு மனப்பான்மை வண்டி வண்டியாய்க் கிடக்கும்.

இங்கே, அழகு என்ற வார்த்தை போல தப்புத் தப்பாக புரிந்துகொள்ளப்பட்ட சொல் வேறில்லை. இந்தக் குழப்படிக்குள்தான் இறங்கி மீன் பிடிக்கின்றன அழகுசாதன நிறுவனங்கள். விளம்பரங்களில் சிவப்பழகு கிரீம் பூசிக்கொள்ளும் பெண், இன்டர்வியூவில் ஜெயிக்கிறாள். ‘இதனால்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது... வாழ்வில் ஜெயித்தேன்’ என்கிறாள். அப்படியானால், நிறம் குறைந்தவர்களுக்கு
தன்னம்பிக்கையே இருக்காதா? இருக்கக் கூடாதா?

அழகுக்காக ஒரு பெண்ணுக்கு வேலை கிடைக்கிறதென்றால், அதை அவமானமாகப் பார்த்தது நம் முந்தைய தலைமுறை. இன்றைய தலைமுறையோ இது இயல்புதானே என ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அழகுக்காக வேலை கிடைப்பதை ஏதோ பெரிய பெருமையாக நினைக்கும் மனநிலையை வளர்க்கின்றன இந்த விளம்பரங்கள். ‘இன்டர்வியூவுக்கு என்ன டிரஸ் போட்டுப் போகணும்... என்ன டிரஸ் போடக் கூடாதுன்னெல்லாம் நிறைய பேர் டிப்ஸ் சொல்றாங்க மேடம்... ஆனா, என்னோட நிறத்தையும் முகத்தையும் நான் எங்கே கழட்டி வச்சிட்டுப் போறது?’ என்று டாக்டரிடம் வந்து கேட்கும் அளவுக்கு இது இளம்பெண்களைத் தாக்குகிறது.

சிவப்பழகு முகம், பளிச்சிடும் வெண்மை பற்கள், நீளக் கூந்தல், பட்டுப் போன்ற சருமம் என எதையெதையோ அழகு என்று சொல்லி பெண்கள் மீது திணிக்கின்றன நிறுவனங்கள். ஆனால், புன்னகை முகம் தன்னம்பிக்கையான பேச்சும் தரும் அழகுக்கு இவை எதுவும் ஈடாகாது என்பதே அறிவியல் உண்மை. விளம்பரங்கள் சொல்வதுதான் அழகு என்றால், இந்த உலகத்தில் அழகான பெண்களை ஆர்டர் கொடுத்துத்தான் செய்ய வேண்டும்.

எனக்கு அழகில்லை என்று புலம்பும் ஒவ்வொரு பெண்ணும், அழகு இருப்பதால் வரும் இக்கட்டுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தனி... அதை நாம் இங்கு பேசவில்லை. அதைத் தாண்டி அழகு எனும் தகுதி, அந்த நினைப்பு... ஒரு பெண்ணுக்குள் அவளுக்கே தெரியாமல் விஷம் விதைக்கக் கூடியது. இந்த சமூகத்தால் அழகானவள் என்று ஏகமனதாய் முடிவு செய்யப்பட்டுவிடும் ஒரு பெண், அதே சமூகத்தால் மழுங்கடிக்கப்பட்டவளாகவே வளர்கிறாள்.

அவள் வரைந்து காட்டும் கிறுக்கல்களை யாரும் ‘சரியில்ல’ என்று ஒதுக்குவதில்லை... செய்யக் கூடாத தவறுக்குக் கூட மனம் நோகும்படி திட்டுவதில்லை... அவள் செய்யும் சுமார் சமையலுக்கெல்லாம் பொய்யான பாராட்டுகளை கொட்டிக் குவிக்கிறது ஆண் சமூகம். இதனால் நிஜமாகவே தன் திறமை என்ன? தகுதி என்ன? எனத் தெரியாமலே வளர்ந்து பிற்காலத்தில்
அவதிப்பட்ட பெண்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்களோடு ஒப்பிட்டால் நேர்படப் பேசி நேர்மையான விமர்சனங்களை எதிர்கொண்டு வாழும் பெண்கள் அதிர்ஷ்டக்காரிகள்தானே!

நானும் ஓர் அதிர்ஷ்டக்காரி எனும் பாசிட்டிவ் எண்ணம், அதனால் கிடைக்கும் துணிச்சல், தன்னம்பிக்கை... இது போதாதா நேர்முகத் தேர்வுகளை வெல்ல? வெற்றி... எல்லாவற்றையும் விடப் பெரிய அழகல்லவா?’’ ‘சரிங்க... இந்த டிப்ஸ் எல்லாம் பெண்களுக்குத்தானே! எங்களுக்கு..? தேர்வாளராக ஒரு பெண் அமர்ந்திருக்கும் இடத்தில் ஆபத்தும் ஆபாசமும் இல்லாத ‘அட்வான்டேஜை’ ஓர் ஆண் பெற முடியாதா?’ - ஆண்களின் இந்தத் துடிப்புக்கு விடை...

கோகுலவாச நவநீதன்

அடுத்த இதழில்...