மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு நிலக்கடலை நடவுக்கு ஒரு இயந்திரம்



தேவையே கண்டுபிடிப்புகளின் அடிநாதம். நம் தினப்படி வேலைகளை எளிதாக்குவதுதான் அறிவியல் கருவிகளின் நோக்கம். ஆனால், செவ்வாய் வரை ராக்கெட் விட்டுவிட்ட இந்தக் காலத்திலும் நமக்குத் தேவையான பல கருவிகள்... குறிப்பாக விவசாயத்துறையில் உருவாக்கப்படாமலேதான் உள்ளன.


 அதை உணர்ந்து தான் தங்கள் ப்ராஜெக்டைத் துவங்கியிருக்கிறார்கள் காரைக்கால் பாரதியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான சி.பிரேம்குமார், ஆர்.சத்தியநாராயணன் மற்றும் என்.ஹேமச்சந்திரன். இறுதியாண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் ப்ராஜெக்டாக இவர்கள் உருவாக்கியிருப்பது நிலக்கடலை நடவு இயந்திரம்.

‘‘காரைக்கால் ஏரியாவைச் சுத்தி நிறைய கிராமங்கள்ல நிலக்கடலை விவசாயம்தான் அதிகம். இதில் லாபம் உண்டு. ஆனா, இப்ப கூலியாட்கள் கிடைக்காம நிறைய விவசாயிகள் நிலக்கடலை விவசாயத்தையே விட்டுடுறாங்க. அதைக் காப்பாத்தணும்னுதான் எங்க பேராசிரியர் ராமகிருஷ்ணன் சார் வழிகாட்டுதலோட இந்தக் கருவியை வடிவமைச்சோம்’’ என அறிமுகம் தருகிறார் பிரேம்குமார்.
‘‘இது மின்சாரத்தால இயங்குது சார். நடவு இயந்திரம்னாலும் இத களை எடுக்கவும், அறுவடை செய்யவும் கூட பயன்படுத்த முடியும். டிராக்டர் உதவி இல்லாமலே இந்தக் கருவியை இயக்கவும் முடியும். இந்த மெஷின் ஒரே சமயத்துல 8 வரிசைகளா நடவு செய்யும்.

அதனால இதை வச்சு, ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டரை மணி நேரத்தில் நடவு செஞ்சுடலாம். ஒவ்வொரு விதைக்கும் உள்ள இடைவெளி ரொம்ப சீராவும் சரியாவும் அளவிட்டு நிலக்கடலையை இது நடவு செய்யும். இதோட முன் பகுதியில இருக்குற கவுன்டிங் சென்டர் மூலமா நிலத்தில் எவ்வளவு நிலக்கடலை விதைக்கப்பட்டிருக்குன்னும் கணக்குப் பார்த்துக்க முடியும்’’ என இந்தக் கருவியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுகிறார் சத்தியநாராயணன்.

‘‘பொதுவா அறுவடைக்கு 10 கூலியாளுங்க தேவைப்படுவாங்க. ஆனா, இந்த மெஷின் பயன்படுத்தும்போது 2 அல்லது 3 பேர் இருந்தாகூட போதும். இப்படி ஒரு கருவி கண்டிப்பா தேவைங்கறதாலதான் நபார்டு வங்கியோட தமிழ்நாடு மண்டல அலுவலகம் இதுக்கு ஸ்பான்ஸர் பண்ணியிருக்காங்க. அதனால, இது நிச்சயமா வர்த்தகப் பயன்பாட்டுக் கும் வரும். இப்ப சோதனை முயற்சியா மின்சாரம், டீசல், பயோகேஸ், சூரிய சக்தின்னு நாலு வித சக்திகள்ல இந்தக் கருவியை இயக்க முயற்சி பண்ணிட்டிருக்கோம். இது வெற்றியடைஞ்சா இன்னும் வசதியான செலவில்லாத இயந்திரமா இது விற்பனைக்கு வரும்’’ என்கிறார் ஹேமச்சந்திரன்.இதுவரை நம் நாட்டில் படிப்புக்காக விவசாய நிலங்கள்தான் விற்கப்பட்டிருக்கிறது. அந்தப் படிப்பு, விவசாயத்துக்காக நன்றிக்கடன் செலுத்த இது ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டுமே!

- எம்.நாகமணி