TNPSC Group I தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா?



தமிழ்நாடு அரசுப் பணிகளில்... அதுவும் முதல் தரப் பணிகளில் அமரும் பொன்னான வாய்ப்பை மீண்டுமொருமுறை வழங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஏதேனும் டிகிரி எனும் தகுதியிருந்தால் போதும்... கீழ்க்காணும் பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
1. டெபுடி கலெக்டர்... இதில் 3 காலியிடங்கள்
2. டி.எஸ்.பி... இதில் 33 காலியிடங்கள்
3. அசிஸ்டென்ட் கமிஷனர் எனும் வணிக வரி தவி ஆணையர் வேலை. இதில் 33 காலியிடங்கள்.
4. அசிஸ்டென்ட் டைரக்டர் ஆஃப் ரூரல் டெவலப்மென்ட் டிபார்ட்மென்ட்... இதில் 10 காலியிடங்கள்.

மொத்தம் 79 காலியிடங்கள் நிரப்பப்படும் இந்தத் தேர்வில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சமூகப் பிரிவுகள், தமிழ்வழி படித்தவர்கள் எனப் பல பிரிவுகளில் இட ஒதுக்கீடுகளும் உண்டு.
இந்தத் தேர்வை எழுத அடிப்படை கல்வித் தகுதி டிகிரி என்றாலும், முறையாக பள்ளிகளில் சேர்ந்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு. மேலும் அந்தந்த துறை சார்ந்த படிப்புகளில் மேற்படிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உதாரணமாக, டிகிரியுடன் கிரிமினாலஜி அல்லது தடயவியலில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு போலீஸ் துறையில் முன்னுரிமை வழங்கப்படும். எம்.பி.பி.எஸ் படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

வயது வரம்பு 21 முதல் 30 வரையே. இதில் தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர், பழங்குடிகளுக்கு 5 வருட தளர்வு உண்டு. (அசிஸ்டென்ட் கமிஷனர் பணிக்கு மட்டும் வயது வரம்பில் சிறு வேறுபாடுகள் உண்டு.)இந்தத் தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். ப்ரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலைத் தேர்வு. இரண்டாம் கட்டமாக மெயின் தேர்வு. இறுதியாக நேர்முகம்.

முதல்நிலைத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதில் இருநூறு கேள்விகள். எல்லாமே ஆப்ஜெக்டிவ். ஜெனரல் ஸ்டடிஸிலிருந்து 150 கேள்விகளும், ஆப்டிடியூட்டில் 50 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தமுள்ள முந்நூறு மதிப்பெண்களில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 120 மதிப்பெண்களும் பிற பிரிவினர் 90 மதிப்பெண்களும் பெற்றால்தான் அடுத்த கட்ட மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மெயின் தேர்வில் மொத்தம் மூன்று தாள்கள். முதல் தாளில் இந்தியாவின் தற்கால வரலாறு, கலாசாரம், ஜெனரல் ஆப்டிடியூட், இந்திய - தமிழக வளர்ச்சிகள் என இன்னும் சில பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். இரண்டாம் தாளில் இந்திய அரசியல், புவியியல், தமிழ் சமூகம் போன்ற பாடங்கள். மூன்றாவது தாளில் இந்தியா மற்றும் சர்வதேச அரசியல், பொருளாதாரம் போன்றவற்றுடன் தொடர்புடைய கேள்விகள் இருக்கும். மெயின் தேர்வெழுது கிறவர்களில் 50 பேரில் ஒருவருக்குத்தான் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதிக சிரத்தையும் கவனமும் தேவை. முதல்கட்ட பிரிலிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.1.14. உடனே அப்ளை பண்ணுங்க... உங்க வேலையை உறுதி செய்யுங்க!
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

- டி.ரஞ்சித்