தனி ஒருவன்



விமர்சனம்

மனிதர்களின் வாழ்வாதாரங்களில் கை வைக்கும் மிகப் பெரிய மனிதர்களை தன்னந்தனியாக சூறையாடுவதே ‘தனி ஒருவன்’.  நாட்டில் நடக்கிற ஒவ்வொரு சம்பவமும், மோசமான மனிதர்களும் இளம் ஐ.பி.எஸ் ஆபீஸர் ஜெயம் ரவியை சூடேற்ற, சட்டத்தை ரகசியமாகக் கையில் எடுத்துக்கொண்டு நண்பர்களோடு அவர்களை வலை வீசிப் பிடிக்கிறார். அவர்கள் கோபத்தில் ருத்ரதாண்டவமாடுவதே ஒரு ஆக்ரோஷமான சினிமாவாக விரிகிறது. ஆக்‌ஷனும், காமமுமே அதிகம் புழங்கும் தமிழ் சினிமாவில், விழிப்புணர்வுக்கும் சமூக அக்கறைக்கும் வரவேற்புக் குடை பிடித்த வகையில் இயக்குநர் மோகன் ராஜாவுக்கு பூங்கொத்து!

சமூகத்தில் நடக்கிற குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை ஜெயம் ரவி அண்ட் கோ பிடித்து சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க, அடுத்த நாளே அவர்கள் எந்தச் சுவடும் அறியாமல் வெளியே வந்துவிடுகிறார்கள். திகைப்பில் ஆழ்கிற ஜெயம் ரவி, அதற்கு ஆதி காரணமாக இருக்கிறவனை தன்னந்தனியாகத் தேடிப் பிடித்து, தனி ஒருவனாக அழித்து ஒழித்தாரா என்பதுதான் இரண்டரை மணி நேர அதிரடிப்படத்தின் முழுநீளக்கதை.

‘சகலகலாவல்லவ’னில் வேடிக்கை முகம் காட்டிவிட்டு, அடுத்து விவேகம் மிக்க ஆபீஸராக ரவி எடுத்திருப்பது விஸ்வ ரூபம். எடுப்பான தோற்றம், முறைப்பான மிடுக்கு, அநீதிக்கு எதிரான கோபக்கனல்... ‘தட்டிக் கேட்கணும்’ என்பது மட்டுமே கண்ணில் தெரிய, அவர் பார்ட் அனைத்தும் அற்புதம்! மொத்தப் படத்தையும் ரவி தோள் மீது சாய்த்து தூக்கிப் போவதில் இருக்கிறது செம ஸ்பீடு ஸ்கிரீன் ப்ளே! நயன்தாரா மனதைக் கொள்ளை கொண்டாலும், அவரின் காதலை ஏற்க முடியாமல் தவிப்பது, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசி நிமிடங்களில் ஆக்‌ஷனில் இறங்குவது என வசீகரிக்கிறார் ரவி.



காதலை விரட்டி விரட்டி... ஆனாலும் அழகியலோடு சொல்லும் நயன்தாராவும் சூப்பர்! கண்காணித்துக்கொண்டே இருக்கும் அரவிந்த்சாமியிடம் இருந்து தப்பிக்க ‘என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டே பேசலாமே’ எனப் பலகையில் எழுதும் இடத்தில் ஆசம் நயன்தாரா. நடித்து நடித்து பழக்கம் கை வந்து நீங்களும் ஜொலிக்கிறீர்கள்... வெல்டன்!

யாரங்கே... அரவிந்த்சாமிக்கு கழுத்தில் போட மலர்மாலை கொண்டு வாருங்கள்! தொண்டை நரம்பு புடைக்க கத்தி கலவரம் செய்யாமல், ‘ஏய்... ஏய்... ஏய்...’ என எகிறாமல் அடக்கிப் பேசி வசியம் செய்கிறார் அரவிந்த். இரண்டு நாள் அழகு தாடிக்கு இடையே திகில் பார்வை வீசும் அரவிந்த்சாமி சமயங்களில் ஜெயம் ரவிக்கு டஃப் கொடுப்பது உண்மை. தம்பிராமையா தருவதுதான் கொஞ்சமே கொஞ்சமான காமெடி ரிலீஃப்!

விரட்டல், மிரட்டல், பில்டப்போடு அதிர்ந்து திரும்பும் படத்திற்கு சுபாவின் வசனங்கள் பெரும் துணை. குறைந்த வார்த்தைகளில் அனல் வீசி, காதல் குழைத்து, அக்கறை பேசி அசத்தி யிருக்கிறார்கள். திடுக் திடுக் திருப்பங்களோடு விரையும் திரைக்கதைக்கு செம பாலீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி. ஜெயம் ரவி தோள் மீதே பயணிக்கும் உணர்வைக் கடத்தியிருக்கிறது கேமரா. அதிரடி ஆக்‌ஷனுக்கு அதிரடி திகில் ட்விஸ்ட் கூட்டியிருக்கிறது ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை. ‘கண்ணாலே கண்ணாலே...’, ‘தனி ஒருவன்’ பாடல்கள் சுகம். படம் கொஞ்சம் நீளமே என்றாலும் அந்த நேரம் உறுத்தவில்லை. ஆக்‌ஷன் ட்ரீட்டில் கண்ணியமாகக் கலக்கிறான் இந்த ‘தனி ஒருவன்’.

- குங்குமம் விமர்சனக் குழு