சுமார்
‘சா ஃப்ட் சொல்யூஷன்’ கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் அறை. தங்கள் எம்.டியின் நேர்முக உதவியாளர் பணிக்கான நேர்காணலை நடத்தத் தயாரானார் பிரபாகர். அந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர். இன்டர்வியூவுக்கு வந்திருந்த பதினைந்து பெண்களையும் கண்ணாடி வழியே நோட்டமிட்டார். பளீர் மேக்கப்புடன் மாடல்கள் போலிருந்தவர்களுக்கு மத்தியில் சுமாரான அழகுடன் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை மட்டும் உள்ளே அழைத்தார். ‘‘உங்களுக்கு டி.டி.பி... அப்புறம் கம்ப்யூட்டர்ல பேசிக்ஸ்... இதெல்லாம் தெரியுமா?’’ ‘‘தெரியும் சார்...’’
‘‘ஓகே... நீங்க வர்ற ஒண்ணாம் தேதியில இருந்து வேலைக்கு வரலாம்! ஆர்டர் உங்க வீடு தேடி வரும். வெளியில வேற யார்கிட்டயும் இதுபத்தி சொல்லிடாதீங்க!’’ - சொல்லி அனுப்பிய பிரபாகர், காத்திருந்த மற்ற பெண்களை ஒவ்வொருவராக அழைத்தார். ‘இரண்டாவது சார்க் மாநாடு எங்கு நடந்தது..?’, ‘நைஜீரியாவின் முக்கியமான ஏற்றுமதி பொருள் என்ன..?’ என்றெல்லாம் கேட்டு அவர்களின் நம்பிக்கையைக் குறைத்து அனுப்பினார். எல்லோரும் சென்ற பிறகு, செல்போனில் தன் அக்காவை அழைத்தார். ‘‘அக்கா... நீ சொன்னபடி ஒரு சுமாரான லேடிய செலக்ட் பண்ணியாச்சு. இனிமே நீ அத்தான் மேல சந்தேகப்பட வேண்டாம்!’’ ‘‘ரொம்ப தேங்க்ஸ்டா... என்னடா பண்றது... எம் புருஷன் எம்.டியா இருந்தாலும் கொஞ்சம் ஜொள்ளு கேஸா இருக்காரே!’’ என அலுத்துக்கொண்டது எதிர்முனை.
கீதா சீனிவாசன்
|