கிரகங்கள் தரும் யோகங்கள்



மேஷ லக்னத்துக்கு செவ்வாய் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்


நாம் பன்னிரெண்டு ராசிகளிலும் உள்ள கிரகங்களின் சேர்க்கைகளைக் குறித்துப் பார்ப்பதற்கு முன்பு அந்தந்த கிரகங்களின் அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். பன்னிரெண்டு ராசிகளையும் சேர்த்து காலபுருஷனாகக் கருதிக்கொண்டால், அதில் ‘மேஷம்’ என்பது தலையைக் குறிக்கும். அதில் மூளை, கபாலம், சிறு மூளை போன்ற அனைத்தும் அடங்கும்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் எதிலும் முதன்மையானவராகக் கருதப்படுவார்கள். எங்கேயாவது மிகப் பிரமாண்டமான வெற்றி ஒருவருக்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் மேஷ லக்னக்காரராக இருப்பார்; அல்லது அவருக்குப் பின்னால் ஒரு மேஷ லக்னக்காரர் இருப்பார். இவர்கள் மேடையேறினால் கூட எதிரே இருப்பவர்களை முட்டாள்கள் என்று நினைத்துத்தான் பேசத் தொடங்குவார்கள். ஊர் உலகமே திட்டினாலும் சீண்டினாலும் கூட, இவர்கள் நினைப்பதைத்தான் செய்வார்கள். மதம், இயக்கம் என்று எதைச் சார்ந்திருந்தாலும் அதில் மிகத் தீவிரமாக ஈடுபடுவார்கள். பழைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அதிலிருந்து வேறுபட்டு, அதற்கொரு புதிய பரிமாணத்தைக் கொடுப்பார்கள். எதை அறிந்தாலும், அதை நடைமுறைப்படுத்தி மற்றவர்களை ஏற்கச் செய்வார்கள்; அல்லது நியாயப்படுத்தி அனைவரையும் பின்பற்ற வைப்பார்கள். ஒருகட்டத்தில் தன்னை புத்திசாலி என்று நிறுவி அதை ஏற்றுக்கொள்ள வைப்பார்கள்.



சாமானியர்களோடு பழகினாலும் அவர்களைவிட தன்னை மேம்படுத்திக் காட்டும் தன்மையும், தலைவனாகும் குணமும் இவர்களிடத்தில் இருக்கும். ஏர்முனையும் போர்முனையும் சந்திக்கும் இடமே இவர்களின் களமாக இருக்கும். இனம் காக்க, தன்மானம் காக்க, சுதந்திரம் காக்க, மொழியைப் பேண என்று பல்வேறு முகங்கள் கொண்டிருப்பார்கள்.  சிலசமயம் எதிராளியை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு அல்லது அடித்துவிட்டு பிறகு பேசும் மேஷ லக்னக்காரர்கள் இருக்கிறார்கள். போர்க் குணம் கொண்டதும் நிலம் ஆளும் கிரகமுமான செவ்வாய் உங்களின் அதிபதியாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

மேஷ லக்னத்தில் பிறந்த உங்களின் லக்னத்திற்கு அதிபதியே செவ்வாய்தான். அவரே உங்களின் மையமாக இருந்து ஆள்வார்; உங்களின் ஊற்றுக்கண்ணும் அவரே ஆவார். அவரின் சக்தியைப் பெற்றுக்கொண்டே உங்களின் வாழ்வாதாரச் சக்கரமானது சுற்றிக் கொண்டிருக்கும்.
இப்போது லக்னாதிபதி தனித்து நின்றால் என்ன பலன் என்று பார்ப்போமா...

லக்னாதிபதியான செவ்வாய் லக்னத்திலேயே - அதாவது ஒன்றாமிடத்தில் - இருந்தால் தோற்றத்தில் கம்பீரம் இருக்கும். என்ன நினைக்கிறார்களோ அதை உடனடியாக செயல்படுத்தத் துணிவார்கள். வெட்டிப் பேச்சாக இல்லாமல் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். இந்த செவ்வாயானது மிகச் சரியாக அஸ்வினி, பரணி, கிருத்திகை போன்ற நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அடிப்படை வசதிகள் நிறைந்த வீட்டில் பிறந்தவர்களாக இருப்பார்கள். அல்லது இவர்கள் பிறந்த பிறகு சகல வசதி, வாய்ப்புகளும் பெருகும். ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள். எப்போதும் ஆளுமைப் பண்போடு இருப்பார்கள். பெண்களாக இருந்தால் ஆண் தன்மை கொஞ்சம் மிகுதியாகவே இருக்கும். அதற்குரிய தோரணையோடு இருப்பார்கள். தன்னுடைய எந்த உரிமையையும் எங்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்றே பேசுவார்கள். எனவே செவ்வாய் லக்னத்திலேயே அமர்ந்திருந்தால் தனக்குத்தானே சுயம்பாக வளர்ந்து வருவார்கள். செவ்வாய் இங்கு சுயம்பு யோகமாகவே இவர்களை பரிமளிக்கச் செய்யும். இது ஒரு நல்ல அமைப்பாகும். மற்ற கிரகங்கள் ஜாதகத்தில் எப்படியிருந்தாலும் செவ்வாய் நின்று நிதானித்து வீர்யமாக செயல்பட்டு கொடுக்க வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்.  



செவ்வாய்க்கு பொதுவாகவே புதனும் சனியும்தான் பகைவர்கள். எனவே, புதனின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரத்தில் அமரக் கூடாது. உதாரணமாக பூசம், ஆயில்யம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் அமராமல் இருப்பது நல்லது.
இரண்டாம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் அமர்வது நல்ல அம்சமாகும். சிறந்த மேடைப் பேச்சாளர்களாக வருவார்கள். வழக்கறிஞராக முயற்சித்தால் எளிதில் ஆகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்குவார்கள். இங்கேயே இன்னொரு விஷயத்தையும் கவனித்து விடுவோம். இரண்டும் ஏழும் -அதாவது ரிஷபமும், துலாமும் - சுக்கிரனுடைய வீடுகள். இதில்  ஏழில் செவ்வாய் நின்றால் பொண்டாட்டி தாசனாக இருப்பார்கள். லக்னாதிபதியான செவ்வாய் ஏழுக்குரிய களத்திர ஸ்தானத்தில் நிற்கும்போது, தன்னைவிட மனைவிக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதேபோல இவர்களை விட மனைவியும் திறமை வாய்ந்தவராகவே இருப்பார். இங்கு இன்னொன்றையும் கவனிப்போம். 2, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும். ஆனால், மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியே செவ்வாயாக இருப்பதால் தோஷத்தின் வீர்யம் குறையும்.

மிதுனத்தில் - மூன்றாம் இடத்தில் - செவ்வாய் அமரும்போது காது தொடர்பான பிரச்னைகள் வரக்கூடும். எனவே, காதுவலி இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். எதையும் கிரகிக்கும் சக்தி இயல்பிலேயே குறைந்திருக்கும். ‘‘உனக்கு எத்தனை தடவை ஒரு விஷயத்தைச் சொல்றது’’ என்று அவ்வப்போது ஏச்சு பேச்சுக்கள் வாங்கும்படியாக இருக்கும். அதேபோல இவர்களுக்கு அடுத்ததாக வரும் வாரிசு - சகோதரராக அல்லது சகோதரியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. அல்லது இவரின் தாயின் இரு கருக்கலைப்பிற்குப் பிறகே மூன்றாவதாக ஒரு ஜீவன் வந்திருக்கும். அல்லது ஏதேனும் ஒருவிதத்தில் பாதிக்கப்பட்ட சகோதரங்களாகவே இருப்பார்கள். அப்படி இல்லையெனில் வயது ஏற ஏற சகோதரரோடு எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாமலேயே இருக்கும்.

கடகத்தில் செவ்வாய் அமரும்போது கொஞ்சம் கவனிக்க வேண்டும். பூசம், ஆயில்யத்தில் செவ்வாய் உட்காரக் கூடாது. நுரையீரல் தொடர்பான கோளாறு அல்லது வீசிங் பிரச்னை வரும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவே இருக்கும். ஆணாக இருந்தால் உயிரணுக்கள் நீர்த்துப் போகும். பெண்ணாக இருந்தால் ரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் தொந்தரவு இருக்கும். தாயாரோடு அவ்வப்போது கருத்து மோதல் இருந்து கொண்டேயிருக்கும். இளம் வயதிலேயே தாயாருக்கு கண்டங்கள் வந்துபோயிருக்கும். அல்லது தாயை விட்டுப் பிரிந்து தாத்தா, பாட்டியிடம் வளருவார்கள். வீட்டிற்கு ஏதாவது செலவு இருந்து கொண்டேயிருக்கும்.

செவ்வாய் ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமரும்போது சிறந்த மக்கட்பேறு கிட்டும். உறவினர்கள் புடைசூழ இருப்பார்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பார்கள். சகல சௌபாக்கியமும் கிட்டும். அடுத்ததாக கன்னியில் - அதாவது ஆறாம் இடத்தில் - செவ்வாய் அமர்ந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எதிலுமே தொடக்கச் சிரமம் இருக்கும். ஆபத்திற்கு யாரும் உதவ மாட்டார்கள். தானே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டியதுதான். மேலும் ஆறாம் இடம் என்பது பொதுவாக மறைவு ஸ்தானமாகும். ‘சர லக்னத்திற்கு உரியவர் உபய லக்னத்தில் அமர்ந்தால்...’ என்று ஜோதிட மொழி உண்டு. எனவே, எதிலுமே ஸ்திர புத்தி இருக்கும். ‘‘சரியோ, தவறோ என்னோடு போகட்டும்’’ என்றிருப்பார்கள். சிறிய வயதில் ஏற்படும் நட்பைக்கூட திருமணமாகியும் தொடர்பவர்கள் அதிகமுண்டு. மனைவி என்ன சொன்னாலும் ஒருமுறை அம்மா என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து நடப்பார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும்.

விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் ஹெர்னியா, பைல்ஸ், தைராய்டு பிரச்னைகள் இருக்கும். லக்னாதிபதியே எட்டாம் வீடான விருச்சிகத்திற்கும் அதிபதியாக வருகிறார். லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைகிறார். நீங்கள் உழைப்பீர்கள். ஆனால், அதில் இன்னொருவர் பயன் பெறுவார். ‘‘அஸ்திவாரமா இருந்தது இவர்தான்’’ என்பார்கள். அதேபோல, தன்னை நெறிப்படுத்தத் தவறி விடுவார். வார்த்தைகளை இறைக்கக் கூடாது. அளவோடு பேசவேண்டும். எதிர்மறையான எண்ணங்கள், ஏட்டிக்குப் போட்டியாக இருப்பது கூடாது. இன்னொருவரின் வளர்ச்சியைப் பார்த்து பெருமூச்சு விடக்கூடாது. காமவேகம் அதிகமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், அதை இங்கிதமாக வெளிப்படுத்த மாட்டார்கள். அதனால், சபையில் பேச எழும்போதே ‘‘உட்காருங்க சார்’’ என்று சொல்லிவிடுவார்கள். எட்டில் செவ்வாய் இருந்தால் ஆயுள் கெட்டி. கற்பனையிலேயே மூழ்கியிருப்பார்கள். இது ஒருவிதமான நேர்மறையான சித்தப்பிரமை என்று சொல்லலாம். அதனால் சிலர் உழைக்காமலேயே இருந்து விடுவார்கள்.  

தனுசு ராசியான ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஏதோவொரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும். தந்தையார் பெரிய அளவில் இருந்தால் மகனால் உயர முடியாது. தந்தை கொஞ்சம் கீழேயிருந்தால் மகன் உயர்வார். சிலருக்கு தந்தையார் சம்பாதித்த சொத்துக்கள் ஒட்டாமலேயே போவதுண்டு. இந்த லக்னாதிபதி செவ்வாயானவர் பத்தாம் வீடான மகரத்தில் உச்சமடைகிறார். எனவே, செவ்வாய் மகரத்தில்  அமர்ந்தால் அது யோகமாகும். ஒரு கிரகம் ராசியில் 28 டிகிரி முதல் 30 டிகிரி பாகைக்குள்
வந்து விட்டாலே உச்சமடைந்துவிடும். அதுபோல மகரத்திற்கு வந்துவிட்டால், சொத்து சேர்க்கை, தோப்பு, பங்களா என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும். சிலர் அரசாங்கத்தில் வலிமையான பதவிகளைப் பெறுவார்கள். அமைச்சர் பதவி யோகமுண்டு. காவல்துறை, ராணுவம், வங்கியில் அதிகாரிகளாக ஆவார்கள். ஆனால், இவர்களின் நேர்மை வெளியுலகத்திற்கு சரிவராத நிலைமையின்போது விருப்ப ஓய்வில் வெளியேறுவார்கள். எலக்ட்ரிக்கல் ஷாப், பாத்திரத் தொழிற்சாலை போன்றவற்றை தொடங்க முயற்சித்து வெற்றியடைவார்கள். சிலர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து என்.எஸ்.எஸ்., என்.சி.சி. போன்ற பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.

கும்பம்- பதினொன்றாம் இடமென்பது பாதக ஸ்தானமாகும். இவ்வாறு பாதக ஸ்தானத்தில் அமரும்போது மூத்த சகோதரரோடு பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். சிலருக்கு மூத்த சகோதரரே கூட இல்லாமல் இருக்கும். இவர்கள் தங்கள் பெயரில் நிலங்களை வைத்துக் கொள்வதும் நல்லதல்ல. கூட்டுக் குடும்பமும் கூடாது. நிழல் யுத்தம் நடந்து கொண்டேயிருக்கும். அக்கம் பக்கத்தில் எங்கேனும் இருந்து பார்த்தபடியே இருப்பது நல்லது. மீன ராசியில் உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் ரத்த அழுத்த நோய் அவஸ்தைக்குள்ளாக்கும். இது அயன சயன ஸ்தானமாக இருப்பதால் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். தனக்கு எதிராக யாரோ சதி செய்வது போன்ற பிரமையில் இருப்பார்கள். ஆனாலும் குருவினுடைய வீடான மீனத்தில் செவ்வாய் அமர்வது சில நன்மைகளைத் தந்தே தீரும்.
 
ஜாதகத்தில் செவ்வாய் இவ்வாறு தனித்து நிற்கும்போது ஏற்படக் கூடிய பாதிப்பைப் போக்கிக்கொள்வதற்கு கோயில்கள் நிச்சயம் உதவும். மேலும், ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாகப் பெறுவதற்கும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் ஆலய தரிசனம் நன்மையைத் தரும். எனவே, சென்னை மற்றும் மகாபலிபுரத்திற்கு அருகேயுள்ள திருப்போரூர் முருகப் பெருமானைத் தரிசித்து வாருங்கள். அதுமட்டுமல்லாது அங்குள்ள சிதம்பர சுவாமிகளின் ஜீவ சமாதி பீடத்தருகே அமைதியாக அமர்ந்துவிட்டு வாருங்கள். முருகன் செவ்வாயின் எதிர்மறையை நேர்மறையாக்குவார். செம்மையான வாழ்வை அருள்வார். தனித்து நின்ற செவ்வாய்- அதாவது லக்னாதிபதியான செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் நின்ற பலன்களைப் பார்த்தோம். அடுத்த இதழில் சூரியனும் செவ்வாயும் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும்போது ஏற்படும் யோக பலன்களைப் பார்க்கலாம்.

(கிரகங்கள் சுழலும்...)