மாற்றம்
பம்மல் நாகராஜன்
ஊரே ஒன்று கூடி, கோயிலில் மகா தீபாராதனை நடக்கிறபோது ஒலிக்க ஓர் இயந்திர மணி வாங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. எல்லோரும் அதை வரவேற்க, பெரியவர் சங்கரன் மட்டும் எதிர்ப்பு சொன்னார். ‘‘ரொம்ப காலமா நான்தான் அந்தக் கைங்கர்யத்தைச் செய்கிறேன்... அதை நிறுத்தப் போறீங் களா?’’ ‘‘கைங்கர்யம் எல்லாம் சரி! ஆனா, காலத்துக்கு ஏத்தபடி நாமும் மாறணும் பெரியவரே. நீங்களும் எத்தனை காலம்தான் அந்தப் பெரிய மணியை கயித்தால அடிச்சு கஷ்டப்படப் போறீங்க?’’ என்றனர் எல்லோரும். அரைகுறை மனசோடு சம்மதம் சொன்னார் சங்கரன்.
மின்சார மணி வந்தது. பொருத்தி வெள்ளோட்டம் பார்த்ததும் சங்கரனுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. என்ன ஒரு நாத லயம்! ஐந்தாறு தெரு தாண்டிக்கூட கேட்கும் போலிருக்கிறதே! மாலையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வழிபட்டபோது சங்கரனிடம் சொன்னார்கள்... ‘‘ஐயா, கண்டாமணிக் கயித்தை இழுத்து, வழக்கப்படி மணி அடிங்க!’’ சங்கரன் நிமிர்ந்து பார்த்தார்... ‘‘கரன்ட் இல்லே... அதனால இன்னைக்குக் கையாலதான் கண்டாமணி ஓசை!’’ என்றனர். சின்னக் குழந்தை மாதிரி ஆர்வத்தில் சங்கரன் கயிற்றை இழுத்துக் கண்டாமணியை ஒலித்தபடியே கடவுளிடம் பேசினார்... ‘‘இனி எப்போதும் நான்தான் மணி அடிப்பேன்னு நினைக்காதே! நாளைக்குக் கரன்ட் வந்துடும். நீயும் காலத்தோடு மாறு!’’
|