விளம்பரம்
எஸ்.எஸ்.பூங்கதிர்
சிவாவின் அப்பாவுக்கு அன்று அறுபதாவது பிறந்த நாள். தன் வீட்டருகே இருந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் தன் சொந்தச் செலவில் விருந்து வழங்கி, அவர்களுக்கு புத்தம்புது போர்வையும் வழங்க சிவா ஏற்பாடு செய்திருந்தான். அவன் அலுவலக நண்பர்கள் அனைவருமே வந்திருந்தனர். தன் எம்.டி கையால்தான் போர்வைகளை வழங்க வேண்டும் எனக் காத்திருந்தான் சிவா. ‘‘என்ன இருந்தாலும் இவனுக்கு இவ்வளவு விளம்பர புத்தி கூடாது. நல்லது செய்யிறவன் யாருக்கும் சொல்லாம செய்யணும். இதுக்கு ஆபீஸையே கூட்டி, எம்.டி.க்கு வேற சொல்லணுமா?’’ அவன் அலுவலக நண்பர்களின் ஏகோபித்த புலம்பல் இது.
‘‘சிவா, எம்.டி சாருக்கு இவ்வளவு வெயிட் பண்ணணுமா?’’ - நண்பன் ஒருவன் நெருங்கிக் கேட்டான்.m‘‘ஆமாம்டா! அவர் என்னைப் பாராட்டணும்னு இதைச் செய்யலை. ‘இவனே இவ்வளவு செய்யும்போது நாமும் செய்யலாம்’னு அவர் நினைச்சா எவ்வளவு நல்லது நடக்கும். உங்களை எல்லாம் கூப்பிட்டதுக்கும் காரணம் அதுதான். நம்ம ஆபீஸ்லயே எவ்வளவோ பேர் அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்துல விட்டிருக்காங்க. அப்பா பிறந்த நாளை நான் இப்படி கொண்டாடுறதைப் பார்த்து அவங்க மனசு மாறலாம்ல!’’ - இந்த விளக்கத்தைக் கேட்டு நண்பன் சிவாவை அணைத்துக்கொள்ள, வாசலில் எம்.டி கார் வந்து நின்றது!
|