பெருமை!
பர்வதவர்த்தினி
வைர நெக்லஸ் வாங்கி முடித்ததும் கடையிலேயே கமலி தன் கணவன் கோபியிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். ‘‘எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்போதைக்கு நான் வைர நெக்லஸ் வாங்கின விஷயம் என் தோழி லதாவுக்குத் தெரிஞ்சிடக் கூடாது. நானும் சொல்ல மாட்டேன்... நீங்களும் வாயை விட்டுடாதீங்க!’’ ‘‘ஏன்?’’ ‘‘அவளுக்கு பொறாமைக் குணம் அதிகம். பொல்லாத பார்வை. ‘இவ மட்டும் வாங்கிட்டாளே’ன்னு மனசுக்குள்ள அவ நினைச்சா அது நமக்கு நல்லதில்லைங்க. ஏதாவது கஷ்டத்துல கொண்டு போய் நிறுத்திடும்!’’ கோபியும் அதற்கு உடன்பட்டான்.
பாதி வழியில் பைக்கில் வருகிறபோது கமலிக்கு மொபைலில் அழைப்பு... தோழி லதாவிடமிருந்துதான்! பைக்கை நிறுத்தச் சொல்லி பரபரவென அவளிடம் பேசியவள், கோபியிடம் சொன்னாள்... ‘‘பைக்கை நேரா லதா வீட்டுக்கு விடுங்க...’’ ‘‘ஏன்? அவளுக்குத்தான் நீ வைர நெக்லஸ் வாங்கினது தெரியக் கூடாதுன்னு சொன்னியே..?’’ - கோபி புரியாமல் விழித்தான். ‘‘இல்லீங்க... அவ அடுத்த வாரம் வைர நெக்லஸ் வாங்கப் போறாளாம். நக்கலா சிரிச்சுக்கிட்டே சொல்றா! அவ வாங்கறதுக்கு முன்னாடி நான் வாங்கியாச்சுன்னு அவகிட்ட காட்டிடணும். இல்லாட்டி, ‘நான்தான் முதல்ல வாங்கினேன். என்னைப் பார்த்துட்டுதான் நீ வாங்கினே’ன்னு பெருமையடிச் சுக்குவா!’’ பொறாமைக்கும் பெருமைக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு புரியாமலேயே பைக்கைச் செலுத்தினான் கோபி!
|